Monday, October 12, 2015

மீண்டும்

IndiBlogger - The Indian Blogger Community சின்னக்குழந்தையின் சிமிழ் வாய் சிரிப்பில் 
சிக்கனமில்லை பாகுபடுத்தும் பாவமில்லை 
கொஞ்சும் மொழியில் கெஞ்சும் விழியில் 
கொஞ்சம் கூட வஞ்சமில்லை நஞ்சுமில்லை 
சின்னத்தலையில் தீய சிந்தனையில்லை 
சீண்டிப்பார்க்கும் சின்னத்தனமில்லை 

சூதுவாது தெரியாத பருவம் 
கள்ளம் கபடு அறியாத உள்ளம் 
எவரையும் எதையும் நம்பும் எளிமை 
அழகான அமுதான அஞ்ஞானம் 
ஆவலை மறைக்கத் தேவையில்லை 
அன்பை மறுக்கத் தோன்றுவதில்லை 

எழுதாத வெள்ளைக் காகிதம் 
பிசையக் காத்திருக்கும் களிமண் 
உளியால் செதுக்கிடவோர் சிற்பம் 
இறைவன் எழுதிய அற்புத நவீனம் 
விதியின் மதியின் கையிலோர் விடுகதை 
வினையும் விபரமும் கலக்கும் தொடர்கதை 

வளர வளரத் தேயும் அதிசய நிலவு 
பழகப் பழக மாசுறும் அனுபவ உலகு 
சறுக்கல்கள் சமரசங்கள் பல கண்டு 
சர்க்கரையோ உப்போவென மயக்கம் கொண்டு 
கருப்போ வெள்ளையோ எதுவென கலங்கி 
சம்மதமில்லாப் பல கரைகளில் தங்கி 

ஏன் வளர்ந்தோம்? எப்படி திரிந்த பாலானோம்? 
இழந்த பரிசுத்தம் நிரந்தரமானதோர் இழப்போ? 
இறைவன் கருணைக்கு எல்லையில்லை 
இயற்கையில் எதுவும் இறப்பதில்லை 
துவக்கத்தைத் தொட்டு முடியும் வட்டம் 
மீண்டும் குழந்தையாகும் முதிய கட்டம் 

பொக்கை வாயிலே வெள்ளை சிரிப்பு 
பிரம்மானந்தத்தின் வழி வந்த களிப்பு 
நினைவில் எதுவும் நிற்பதில்லை 
நிலையாய் எதிலும் நாட்டமில்லை 
நேற்றும் நாளையும் பொருட்டில்லை 
நின்று போயிருக்கும் காலக்கடிகாரம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community