Wednesday, May 12, 2010
பயமேன் பதற்றமேன் பேதையெனக்கு
புள்ளிமானினமா புள்ளினமா
புதுவெள்ளமா படமெடுக்கும் பாம்பா
போலிப்பூச்சில் பொலிவுறும் பூனைகள்
பளபளப்பான பஞ்சவர்ணக்கிளிகள்
படபடவென பறக்கும் புறாக்கள்
புயலென பாய்ந்தோடும் புரவிகள்
பலவண்ண பட்டாம்பூச்சிகள்
பச்சை பூந்தளிர்கள்
பந்தயமிடும் பம்பரங்கள்
பாலும் பனங்கள்ளும் பார்க்க
பேதம் புரியலையே பகுத்தறிந்திட
பாலின பாகுபாடின்றிப் போனதில்
புதுமைகள் புரட்சிகள் பெருகுதே
பெண்மையின் பொருளும் பிறழுதே
பளிங்காயிருந்த பரப்பின்று
பாசி படர்ந்து போனதே
பாதைகள் பிரிந்து போனதே
பனிப்புகையாய் பகை பரவிய
பயணங்களில் பரிமாறல்களில்
பாசமில்லா பொழுதுகளில் போக்குகளில்
புருஷர்களின் பாடென்ன பாடோ
பணிமனைக்குப் பாவையர் புறப்பட்டனரே
பயிரைப் படைத்து பரம்பரை போற்றி
பேரெடுக்கும் பேற்றினை புறந்தள்ளி
பொங்கும் பாலாய்ப் பாவையர்
பொறுமை பயிர்ப்பு புதைத்து
பலனா பெருமையா புகழா
பசித்தும் புல்லை புசியாது
பாய்வதற்குப் பதுங்கிய புலிகளை
பார்க்கும் பாக்கியமில்லையே
பரிசம் போடாமல் படுக்கை பகிர்தலோ
பந்தங்கள் பத்திரமின்றி போவதோ
பழமுதிர்சோலை பாலைவனமாகுதோ
பஞ்சாமிர்தம் பிசைய பழமில்லை
பாசிப்பயிறுடன் பாகாய் பாயாசமில்லை
புதுயுகத்தில் பாரில் போராட்டமா
பயமேன் பதற்றமேன் பேதையெனக்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment