Friday, February 8, 2013

சுனாமி

IndiBlogger - The Indian Blogger Community பிரச்சினை அனுபவ அறிவுள்ள பெரியவர்கள் மறைவதும் அவர்கள் கலை தொடராததும் மட்டும் இல்லை! மரபணு மாற்றிய பயிர்களால் மண்ணை மலடாக்கி, செயற்கை ரசாயன உரத்தால் உடம்பை வியாதிக்கூடமாக்கி, தின்ன வேண்டியது சத்தில்லாமல் விளைவிக்கப்பட, கண்ட கண்ட கொழுப்புத் தீனிகளை பெரியவரும் சிறியவரும் கொறித்துத் தள்ள நடமாடும் மாமிச மலைகளாய் மக்கள் மாறி வர-எத்தனை உடற்பயிற்சி நாகரிகம் வளர்ந்தாலும்-தாராளமாய் கிடைக்கும் ஒரு ஈனோ பொடி பாக்கெட்டோ ஒரு டைஜீன் மாத்திரையோ இருக்க சுக்குதான் வேண்டுமென்று தொலந்துபோன சகாப்ததத்தை எண்ணிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபு. புதியன பூதங்களாய் மரபின்றி, நெறியின்றி புகுவதுதான் வேதனை!
என்ன செய்வது? காலமெனும் காட்டாற்று வெள்ளம் கரையோர வளங்களை அடித்துச் செல்லத்தான் செய்கிறது; படிந்த வண்டல் நலத்தை மட்டும் எண்ணி ஆறுதல் பட்டுக்கொள்ளவேண்டியதுதான். ஒரு மிகச் சிறந்த மதி நுட்பம் கொண்ட பாட்டியின் செல்ல பேத்தியாய் வளரும் யோகம் பெற்றவள் நான். அவர்களிடம் எண்ணற்ற எளிய மருத்துவ யுத்திகள், தீர்வுகள் இருக்கும்; அஞ்சறை பெட்டிக்குள் இருக்கும் அத்தனையும் எத்தனையோ நோவு தீர்க்கும்; சின்ன குழந்தைகள் சிறுநீர் கழிக்க முடியாமல் வீரிட்டு அலறினால் கொஞ்சம் வெதுவெதுப்பான வெந்நீரை அந்த இடத்தில் விட்டால் உடனே நிவாரணம், ஆசுவாசம். இப்பொழுது உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடி பல வித டெஸ்ட் பண்ணி பல வித இன்னல்களுக்கு பிறகு பணமும் ஆறாய் ஓடிய பிறகு அதே நிவாரணம் கிடைக்கும்; உயிர் பிழைக்காதென தெரிந்தும் நாட்கணக்கில் பிரக்ஞையில்லாதவரை ஐசியூவில் வைத்திருந்து கறக்க மட்டும் கறந்து உறவினரையும் சொல்லொணா துன்பத்திற்கு ஆளாக்கி- இதுவெல்லாம் நினைத்தாலே ரத்தக்கொதிப்பை வரவழைக்கும் விஷயங்கள். என் பிள்ளைகளிடம் நான் கறாராக சொல்லிவிட்டேன் - ஆசைப்பட்ட மாதிரி பொடுக்கென்று என் உயிர் போகாமல் தீவிர நிலை வர நேர்ந்தால் ஆஸ்பத்திரி மெஷினில் மட்டும் போட்டு கொல்லக்கூடாது என்று. அந்த காலத்தில் பெருசு இழுத்துக்கொண்டிருந்தால் ம்ம் பாலை விடுங்கள் என்பார்கள், விடுதலைதான்! மாறிவிட்ட நிறைய விஷயங்கள் வேப்பங்காயாய்த்தான் இருக்கிறது- இம்மாற்றங்கள் சுனாமி மாதிரி- வெறுங்கையால் அணையிட முடியாது என்ற விரக்தியில் வேதனையில் விலகி நிற்க வேண்டியதுதான். எவ்வளவு அழகாக பேறுகால பராமரிப்பை-பார்லி தண்ணி குடி, உலை நீரில் வெண்ணெய் போட்டு குடி, அப்படி படு, இப்படி எழு, பிள்ளை பெறுமுன்னும் பெற்றபின்னும் தினமும் தாம்பூலம், பிள்ளையை போஷாக்காய், புஷ்டியாய்-என் பிள்ளைகளுக்கு 'கொழுக் மொழுக்' என்று பட்டப்பெயர் உண்டு-வளர்க்க ஆயிரம் யோசனைகள் என முழுக்க முழுக்க பாட்டி அரவணைப்பில் வளர்ந்த என்னை விட யாரும் அதிகமாய் இக்கால மாறுதலுக்கு துக்கப்பட முடியாது!
சூடு படுத்திய தேங்காய் எண்ணெயை காதில் விட்டால் காது வலி போயே போச்! துரு பிடித்த ஆணி பாதத்தில் குத்திவிட்டால் எண்ணையை சூடாக்கி மிளகாய் பொடியில் குழப்பி வைத்து கட்டு போட்டால் போதும்; கண் சிவந்து நோகும் போது சில துளி பிள்ளைப்பால் விட்டால் போதும்-இப்படி கோடிக்கணக்கில் எளிய நம்பகமான வைத்தியங்கள். இவை இளந்தலைமுறையினருக்கு தெரியாது, சொன்னாலும் ஏற்காது!!! ஒரு ஸ்கான் எடுக்காமல் 3 பிள்ளை பெற்றேன், இத்தனை தடுப்பூசிகள் இல்லாமல் ஆரோக்கியமாய் அவர்களும் வளர்ந்தார்கள். இப்பொழுதுள்ள ஆரோக்கியமில்லா வாழ்கைமுறைகளில் ஊறியர்வர்களுக்கு முன்னோர்களின் ஆரோக்கியமான வழிமுறைகள் புரிவதேயில்லை. விளக்குவது வியர்த்தம். அன்றொரு நாள் முகநூலில் ஓவராக சானிடைஸ் செய்து உடல் எதிர்ப்பு சக்தியை குறைக்காதீர்கள் என்ற எச்சரிக்கை வந்தது மனதுக்கு இதமாய் இருந்தது. இந்த மாதிரி ஒன்றிண்டு குரல்கள் போதுமா? மஞ்சள் பூசி முக முடியை தவிர்த்து அழகு பேணாமல் பார்லருக்கு போய் கேடு வரவழைக்கவேண்டுமென்று முனைப்பாய் இருப்பவர்களிடம் எந்த பேச்சும் எடுபடுமா? ஆயாசமாய் இருக்கிறது.
ஆம், சுனாமி போல் மாறுதல் நம் நல்ல பாரம்பரியத்தை அழித்துவிட்டது.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community