
இங்கே இப்போது நடப்பதென்ன
வேங்கை ஆணை கண்டு பெண்மான்
வெருண்டது பழைய கதை அவளோ
வெகுண்டு எழுந்து வேங்கையாகி
விரட்டுகிறாள் அடக்கிய ஆணை
மானினும் மிரண்டு நிற்கிறான்
மலங்க மலங்க விழிக்கிறான்
மறந்தும் சமையல் கற்காத
மனையில் தங்க விரும்பாத
மழலையை மடியில் கொஞ்சாத
சாட்டையை சொடுக்கும் சர்க்கஸ்காரி
கொழுகொம்பை உதறும் கொடியின்று
உலக மகளிர் தினத்தில் தப்பாது
கொடி பிடிக்கும் கொள்கையெல்லாம்
கொன்றுபோடுமோ பெண்மை வரத்தை
மாதவத்தை மாண்புமிகு மகுடத்தை
மாற்றுமோ மரபணு தாய்மையை
ஆணும் பெண்ணும் ஆளத் துடிப்பதோ
அழகாய் இணைந்து வாழ நினைப்பதோ
அடுத்த தலைமுறை தலைவிதிப்படியே
காலமே கலிகாலமே கண்ணாடியாய்
காட்டு கண்ணுக்கு உறுத்தாத காட்சி
கல்லடி கிழவிக்கு கிடைக்குமென்றாலும்
சொல்லாமல் இருக்க முடியவில்லையே