Thursday, May 6, 2021

                   பஸ்மாசுரன்

பல கோடி வருடங்களுக்கு முன் பிரபஞ்சம் தோன்றியதாம். எப்படி தோன்றியது என்ற அரத பழசான சர்ச்சைக்குள் போகாமல் தோன்றிய பிரபஞ்சத்தில் நாமிருக்கும் பூமிக்கோளத்தின்  வரலாற்றை மட்டும் பார்ப்போம். உயிர்கள் எப்படி தோன்றின என்ற கதைகளையும் புனைசுருட்டுகளென ஒதுக்கிவிட்டு பிரதான ஆறறிவு ஜீவனான மனிதனை மட்டும் கவனிப்போம்.

ஆதிமனிதன் காட்டுமிராண்டியாய் விலங்குகளை வேட்டையாடி உண்டு மட்டும் உயிர் வாழத் தெரிந்தவனாய் குகைகளில் வாழ்ந்து வந்தான். பெண்களை, பிள்ளைகளை கட்டையால் அடித்து கட்டுக்குள் வைத்திருந்தவன், பொழுது போகாமல் குகை சுவற்றில் கோட்டோவியம் தீட்டியவன் மண்டை கபாலத்துக்குள் கும்பகர்ண தூக்கத்தில் இருந்த ஆதி காலத்து சிறிய மூளை மெல்ல மெல்ல விழித்தெழுந்தது. தன் அளப்பரிய திறனை மெல்ல மெல்ல வெளிப்படுத்தியது.

வேட்டையாட மிகவும் தேவையான, வாழ்க்கைக்கு முக்கியமான கருவிகளை கல்லில் செதுக்கி உருவாக்கிநான். அதன் பிறகு மெல்ல மெல்ல பல பயன்பாட்டு கருவிகளை உருவாக்கக் கற்றான்.

விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் பிள்ளையார்சுழி சக்கரமாம். அதன்பின் அவன் அபூர்வ மூளை அசுர வேகத்தில் வேலை செய்தது. யந்திர புரட்சி வாழ்க்கைமுறைகளை புரட்டிப்போட்டது.

வேட்டையாடி உண்டு பசி தீர்த்தவன் நாக்கு ருசி தேடியதில் விவசாயம் செய்ய பழகினான். விளைந்த பயிரை, தானியத்தை மாவாக்க, பக்குவமாய் சமைக்க ஏதுவாக்க கல்லால் உரல், அம்மி, திரிகல் செய்து பெண்களை அவற்றில் வேல செய்ய வைத்து மேல்லிடையாள்களாக வைத்திருந்தான்.

அம்மி அரைத்தும், மாவாட்டியும் ஆயுளை கழித்து மாளாமல் அவர்களை மீட்டன மிக்ஸி, கிரைண்டர் போன்ற உபகரணங்கள். தினம் தினமுமா சமைப்பது என்ற நல்லெண்ணத்துடன் உருவானது ரெப்ரிஜரேட்டர்.

வியர்த்த போது பனை ஓலை விசிறியில் வீசி களைத்த கைகளுக்கு ஒய்வு தந்தது மின்சார காற்றாடி. அந்த சுகமும் போதாமல் போகவே வந்துதித்தது ஏர்கண்டிஷனர். உண்ணும் பொது, உறங்கும் பொது, உழைக்கும் பொது, பயணிக்கும் போது என எந்நேரமும் அது தேவையானதாகிவிட்டது.

காட்டுமிராண்டி மனிதன் இயற்கையின் பேராற்றலை அதன் சீற்றங்களின் பொது நிதர்சனமாய் உணர்ந்து பயபக்தியுடன், வாலை சுருட்டிக்கொண்டு இயற்கை ரூபங்களை தெய்வ அம்சங்களாய் பார்க்கத் துவங்கி வழிபட்டுவரலானான்.

பின்னர் அவன் பகுத்தறிவு பயங்கரமாய் வளர்ந்தது. சுறுசுறுப்பாய் மூளை இயற்கையை கவனிக்க, ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தது. பல்லாயிரக்கணக்கான வருட அவதானிப்பு பல்லாயிரக்கணக்கான பாடங்களை புகட்டியது. காட்டுக் குதிரைக்கு கடிவாளம் போட கற்றுக்கொண்டான். மேலே, கீழே, சுற்றிலும் தீர பொறுமையாய் ஆராய்ச்சி செய்தான். பூகோளம், சரித்திரம், இயற்பியல், வேதியியல், வானசாஸ்திரம், டைனாமிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ன பிற சங்கதிகளின் அறிவை படிப்படியாக வளர்த்தான்.

பூமிக்குள் புதைந்து கிடக்கும் கணிம வளங்களை எரிபொருளாய் மாற்றி விந்தைகள் செய்யத் துவங்கினான். மின்சாரம் என்றொரு மந்திர சாவியால் ஒரு மாய மாளிகையை திறந்து ராஜபோக வாழ்வினை வாழ கற்றுக் கொண்டான்.

சக்கரத்தை வடிவமைத்தவன் சைக்கிளோட்டியதோடு நில்லாமல் அனைத்து சொகுசு ஊர்திகளையும் உருவாக்கினான். அதோ அந்த பறவை போல வாழவேண்டுமென ஆசைப்பட்டவன் விமானத்தில் பறக்க பழகினான்.

அதோ பார் நிலா என்று குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டு மட்டுமில்லாமல், நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகோ என்று பாடிக் கொண்டு மட்டுமில்லாமல் நிலவில் கால் பதித்துவிட்டான். மற்ற கோளங்களையும் தீவிரமாய் ஆராய்கிறான். விண்ணிலிருந்து மண்ணை கண்காணிக்கும், வழிநடத்தும் சேட்டிலைட்டுகளை விண்வெளியில் நிறுத்தியிருக்கிறான்.

பூதாகர டைனாசர்களா, ஒரு செல் உயிரியா, பூமியின் வாழ்வினங்களின் முன்னோடிகள் யார் என விஞ்ஞானிகளும் மதபோதகர்களும் ஒருவர் மண்டையை ஒருவர் உடைத்துக்கொண்டார்கள்.

ஆப்பிரிக்க கண்டத்தின் பூர்வக்குடிகள்ஆசியா, ஆஸ்திரேலியா வரை பரவியதை கண்டுபிடித்தார்கள். ஆதிவாசிகளை அடித்து துரத்தி குடியேறிய வந்தேறிகள் வல்லரசானார்கள். என்சாமி என்சாமி என்று பூமி முழுக்க மதத்தின் பேரால் யுத்தங்கள் நடத்தி ரத்த ஆறு ஓடவிட்டு என்ஜாயி என்றார்கள். தொடரும் கதை இது.

மக்கட்தொகை இதற்கிடையில் கட்டுக்கடங்காமல் பெருகியது. அத்தனை வயிறுகளையும் நிரப்ப அபரிதமாய் விளையும் மலட்டு பயிரெல்லாம் ஆராச்சியில் உருவானது.

வாய்க்கால், வரப்பு தகராறு, கட்டை பஞ்சாயத்து பூமியெங்கும் பரவ அந்தந்த நாட்டு ராணுவமும் போஷாக்காய் வளர்க்கப்பட்டு தோள்தட்டி பலங்காட்டும் கிங்கர கிங்காங்களாக நிறைய நாடுகள் முன்னணியில் நிற்கின்றன.

ஆதிகாலத்து விஷ அம்பு, வேல் போன்ற போர்க்கருவிகளுக்குப் பிறகு பயங்கர போர்த் தந்திரங்களும், ரசாயன ஆயுதங்களும், அசுர இன பூச்சிக்கூட்ட தாக்குதல் நூதனமும் மிரட்டலாய் அணிவகுத்து நிற்கின்றன.

கற்காலத்தில் மனிதன் கபாலத்துக்குள் விழித்தெழுந்த சின்ன மூளையின் திறன் இன்று கண்டிருக்கும் அசுர வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதன் கைவசமுள்ள தொழில்நுட்ப நுணுக்கங்கள் அதி நூதனமானவை.

மனிதனுக்குப் பதிலாக யந்திரமே எல்லா வேலையையும் செய்யும் காலத்தை நெருங்கிவிட்டோம். ஹோட்டலில் உணவு பரிமாற்ற மட்டுமில்லாமல் வாகனங்களை இயக்கம் யந்திரங்களும் வந்துவிட்டன. ஆளில்லாமல் இயங்கக்கூடிய வாகனங்களை தயாரிக்கத் துவங்கிவிட்டார்கள். ஏற்கனவே ஏர் பிடித்து வயலை உழுதவனுக்கு வேலை இல்லாமல் டிராக்டர்களும் நவீன உபகரணங்களும் விவசாயத்தை கைப்பற்றிவிட்டன.

முழுக்க யந்திர கட்டுப்பாட்டில் மனித சக்திக்கு வேலையில்லாத கட்டத்திற்கு வந்துவிட்ட பூமியில் அதன் மாபெரும் ஜனத்தொகையை எப்படி பார்க்கிறது அருமையாய் வளர்ச்சியடைந்த அதிசய மனித மூளை? உடைத்தெறியப்பட வேண்டிய தடைக்கல்! குப்பைத்தொட்டியில் வீசப்பட வேண்டிய வேண்டாத பண்டம்!

பெயருக்கு ஆறறிவுடன் இருந்தாலும் கீழ்மட்ட ஜீவராசிகளைப் போல் உண்டு, உறங்கி, உயிர் பெருக்கி அர்த்தமில்லாத வாழ்க்கை வாழும் இவர்கள் தேவையில்லாத பாரம். பெருகி வரும் முதியோர் ஜனத்தொகை ஒரு பொருளாதார சுமை.

மறுமலர்ச்சி காலத்து பழைய வாழும் முறைகள், நன்னெறிகள், கற்பு, கட்டுப்பாடு போன்ற கொள்கைகள் எல்லாவற்றையும் எப்போதோ கடாசியாகிவிட்டது. சுயநலமாய் சுகம் தேடி அலையும் இந்த மனித கூட்டத்தை அழிப்பது எப்படி? அறிய திறன் உடைய சிறிய கூட்டம் போதும் இந்த பூமிக்கு.

ஆண்டாண்டு காலமாய் பல நாட்டு புராணங்களிலும், சரித்திரத்திலும் பார்த்ததுதான் பேரழிவை நிகழ்த்தும் வல்லமை கொண்ட கொடிய அசுரர்களும், நூதன துஷ்ட விலங்குகளும்.

இன்றைய யுகத்தில் உருவான அசுரனே கொரோனா. புராணத்திலும், சரித்திரத்திலும் அசுரர் ஜெயித்ததில்லையே? இந்த பஸ்மாசுரன் ஜெயிப்பானா? கருணைக்கடலான கடவுள் கைவிடமாட்டார்! IndiBlogger - The Indian Blogger Community

Tuesday, March 2, 2021

கரை ஏறும் தீவுகள்

IndiBlogger - The Indian Blogger Community சுற்றிலும் கடல் சூழ்ந்திருக்க
சுகமாய் கிடந்த தீவுகள்
பத்திரமாய் பரிசுத்தமாய்
ஆபரணமாய் ஆதாரமாய்
ஆனந்தமாய் ஆதுரமாய்
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
அகழியென பாதுகாக்க
பொலிவுடன் புவி காத்த
தாய்மை பீடங்களின்று
கரை ஏறும் தீவுகள்

உயிரே


சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து
வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து
கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து
எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து
புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து
களங்கள் கடந்து கனவாய் கரைந்து
இறகுகள் முளைத்து இலகுவாய் பறந்து
நினைவுகள் நிலைக்க அகலும் உயிரே

Sunday, February 28, 2021

இயற்கை நியதி

IndiBlogger - The Indian Blogger Community மாசி மாசமிதில்
வேப்பமரத்தடியில்
கூடை கூடையாய்
கொட்டிக்கிடக்கு
காய்ந்து உதிர்ந்த
சருகான இலைகள்
அன்னாந்து பார்த்தால்
அனைத்து கிளையிலும்
குச்சி நுனியிலும்
கொழுந்து இலைகள்
சித்திரையில் நிச்சயம்
காற்றில் நிறையும்
வேப்பம்பூவின் நறுமணம்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
மரபென உணர்த்தி
இறப்பவர் இறக்க
பிறப்பவர் பிறக்க
இயங்குது அழகாய்
இயற்கை நியதி

Friday, September 25, 2020

என் அஞ்சலி

IndiBlogger - The Indian Blogger Community

பாடப் பிறந்தேன்

சிறகை விரித்தேன்

வானை வளைத்தேன்

என் இசை கொம்புத் தேன்

குழைந்தேன் கொஞ்சினேன்

இழைந்தேன் இளகினேன்

சிரித்தேன் சீண்டினேன்

சித்து வேலை செய்தேன்

இதய நரம்பை மீட்டினேன்

எல்லா உணர்வும் தொட்டேன்

தட்டி எழுப்பினேன் உற்சாகத்தை

தாலாட்டி உறங்க வைத்தேன் சோகத்தை

எழு ஸ்வர நாயகன்

நாத பிரம்ம வித்தகன்

இசையின் ரசிகன்

இமாலய சாதகன்

அடித்தேன் என்றும் ஆனந்த கும்மி

யாரோடும் சேரும் ஜோரான ரம்மி

திகட்டாத ராகங்கள்

தெய்வீக பாவங்கள்

தீராத விருந்துகள்

வற்றாத அருவிகள்

 

மூச்சு விடாமல் பாடினேன்

முழு வானை கடந்துவிட்டேன்

களைத்த சிறகை மூடுகிறேன்

களிப்புடனே தூங்கப்போகிறேன்

Saturday, August 8, 2020

வீடு நோக்கி

IndiBlogger - The Indian Blogger Community
துபாய் விமான நிலையத்தை அடைந்தவுடன் அம்மாவை அழைத்து கிளம்பி விட்டேன் என்று தகவல் சொன்னேன். அம்மாவின் குரலில் அப்படியொரு சந்தோஷம். அது என் காது வழியே நுழைந்து உடம்பு முழுக்க பரவி என்னை பரவசத்தில் மிதக்கச் செய்தது.
என் வாலிபத்தின் பல வருடங்களை வியர்வையாக்கி நிறைய சம்பாதித்துவிட்ட நிறைவோடு என் நாட்டுக்கு, என் வீட்டுக்கு, அந்த கதகதப்பான கூட்டுக்கு திரும்புகிறேன்.
நண்பர்களுடன் கும்மாளமாய் காடு கழனிகளில் கொட்டும் பருவ மழையில் குளித்து களித்து கொட்டமடிக்கப் போகிறேன். கனவுகளில் மூழ்கி விட்டதால் வழக்கமாய் விமானத்தில் சக பயணிகளை கவனிக்கும் ஆர்வம் கூட குறைந்திருந்தது.
இதமான குளிரும் வானத்தில் பயணிக்கும் சுகானுபவமும் முக்கால்வாசிக்கு மேற்பட்டோரை உடனடியாக உறங்க வைத்துவிடும். தூக்கம் வராமல் ஒரு வெளிநாட்டு மாது டிவியை போட்டு படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வயதான பெண்மணி இறங்குவதற்குள் முடித்துவிட வேண்டுமென்ற குறிக்கோளோடு ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு நடுத்தர வயதுக்காரர் தீவிரமாக சுடோக்கு போட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு சின்னப்பையன் பகாசுர பசியோடு எதையாவது தின்றுகொண்டேயிருந்தான். ஜன்னலருகே அமர்ந்திருந்த யுவதி கண்களில் கனத்த சோகத்தோடு வெளியே வெற்றுவெளியை வெறித்துக்கொண்டே வந்தாள். அட்லஸ் போல் தோளில் பூமியை சுமந்து கொண்டிருந்தவளின் பாரத்தை வாங்கிக் கொள்ளுமாறு மனதுக்குள் பரமபிதாவிடம் விண்ணப்பம் வைத்துவிட்டு நான் என் கனவுகளில் மூழ்கினேன்.
ஊருக்குத் திரும்பியதும் செய்ய வேண்டிய வேலைகளை மனதுக்குள் பட்டியலிடத் துவங்கினேன். ஒரு குயர் நோட்புக் போதாது போலிருந்தது!
அம்மாவின் நாள்பட்ட மூட்டுவலிக்கு நல்ல வைத்தியம் பார்க்கவேண்டும். ஓயாது உழைக்கும் அப்பாவின் வேலைப் பளுவை குறைக்க வேண்டும். பழைய வீட்டை மராமத்து செய்து புதுப்பிக்க வேண்டும்.
எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வைத்திருக்கிறார்கள். ஒரு லட்சிய ஆண்மகனாக என் மண வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது என் அவா. அதற்கு நிறைய திட்டமிடலும் அதிக பொறுமையும் வேண்டும்.
நல்ல வேளையாக தங்கம் விலை கிடுகிடுவென உயரும் முன்னரே ஓரளவு நகைகளை வரப்போகிறவளுக்காக வாங்கிவிட்டேன். வீடு நிறைய பிள்ளைகள் இருந்தால் குதூகலம். ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாது.
இம்மாதிரியான பல்லாண்டு திட்டங்களில் என் சொந்த விருப்பங்கள் சில உண்டு. அதில் ஒன்று என்னதான் ஒரு சாமான்யன்தான் நான் என்றாலும் என் சுய சரிதையை எழுத ஆசையாய் இருக்கிறது. என் வாழ்க்கை அனுபவங்களை, அனுமானங்ளை, அபிலாட்சைகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.
நல்லெண்ணம் கொண்டோரை குழுக்களாக அமைத்து மரம் வளர்த்தல், குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கி பராமரித்தல், சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், ஆதரவற்றோரை, முதியோரை பாதுகாத்தல், அநியாயங்களை தட்டிக்கேட்டல் என நான் ஆற்ற விரும்பும் பணிகள் எண்ணிலடங்காது.
அடடா, என் கனவுகளில் மூழ்கியிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஊர் வந்துவிட்டது. விமானம் தரையை தொட்டுவிட்டது.
துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்துவிட்டது!
நான் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சீக்கிரம் வீட்டை அடைவேனென்று!!!

Friday, July 3, 2020

பாரீர் பாரீர்

IndiBlogger - The Indian Blogger Community பாரீர் பாரீர் பாரெனும் நாடகமேடையில்
பவுமானமாய் அரங்கேறும் பூனை நடையினை
திருப்தியின் திசை தெரியா பேராசைக்காரர்
ஈகையின் ஈரம் அறியா சுயநலவாதிகள்
பகையை மறைத்து பல்லை இளிக்கும் பாசாங்குக்காரர்
கண்ணை விற்று ஓவியம் வாங்கும் மூடர்கள்
கதையை திரித்து கல்லா கட்டும் ஊடகக்காரர்
விரசம் நாடும் சிற்றின்ப சித்தர்கள்
அதிகார மமதையில் ஆடும் அதிகாரிகள்
ஆன்மீக போர்வையில் திளைக்கும் காமுகர்
பண்பாடுகளை பறக்கவிடும் புரட்சியாளர்
உறவுக்கு புதுப் புது அர்த்தங்கள் சொல்லும் மேதைகள்
புனிதத்தை கடைச்சரக்காக்கும் பேதைகள்
தூண்டிலில் சிக்கும் மீன்கள் விளக்கில் வீழும் விட்டில்கள்
மக்கள் சேவை செய்ய வந்த பொய்யர்கள்
மந்தைகளாய் ஆக்கி கொழுத்த கபடதாரிகள்
கஜானாவை நிரப்புகின்ற சிறந்த குடிமகன்கள்
செல்ஃபோனுடனே வாழுகின்ற தனித்தீவுகள்
கொட்டிக்கிடக்கும் இயற்க்கை அழகை ரசிக்காத ஜன்மங்கள்
கணம் கணமாய் வாழ்க்கைத் தேனை ருசிக்காத ஜீவன்கள்
வேடிக்கை மாந்தரின் விந்தையான அணிவகுப்பு
கேளிக்கை ஆனதோ விலையில்லா வாழ்க்கையிங்கு
IndiBlogger - The Indian Blogger Community