Saturday, August 8, 2020

வீடு நோக்கி

IndiBlogger - The Indian Blogger Community
துபாய் விமான நிலையத்தை அடைந்தவுடன் அம்மாவை அழைத்து கிளம்பி விட்டேன் என்று தகவல் சொன்னேன். அம்மாவின் குரலில் அப்படியொரு சந்தோஷம். அது என் காது வழியே நுழைந்து உடம்பு முழுக்க பரவி என்னை பரவசத்தில் மிதக்கச் செய்தது.
என் வாலிபத்தின் பல வருடங்களை வியர்வையாக்கி நிறைய சம்பாதித்துவிட்ட நிறைவோடு என் நாட்டுக்கு, என் வீட்டுக்கு, அந்த கதகதப்பான கூட்டுக்கு திரும்புகிறேன்.
நண்பர்களுடன் கும்மாளமாய் காடு கழனிகளில் கொட்டும் பருவ மழையில் குளித்து களித்து கொட்டமடிக்கப் போகிறேன். கனவுகளில் மூழ்கி விட்டதால் வழக்கமாய் விமானத்தில் சக பயணிகளை கவனிக்கும் ஆர்வம் கூட குறைந்திருந்தது.
இதமான குளிரும் வானத்தில் பயணிக்கும் சுகானுபவமும் முக்கால்வாசிக்கு மேற்பட்டோரை உடனடியாக உறங்க வைத்துவிடும். தூக்கம் வராமல் ஒரு வெளிநாட்டு மாது டிவியை போட்டு படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வயதான பெண்மணி இறங்குவதற்குள் முடித்துவிட வேண்டுமென்ற குறிக்கோளோடு ஒரு நாவலை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு நடுத்தர வயதுக்காரர் தீவிரமாக சுடோக்கு போட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு சின்னப்பையன் பகாசுர பசியோடு எதையாவது தின்றுகொண்டேயிருந்தான். ஜன்னலருகே அமர்ந்திருந்த யுவதி கண்களில் கனத்த சோகத்தோடு வெளியே வெற்றுவெளியை வெறித்துக்கொண்டே வந்தாள். அட்லஸ் போல் தோளில் பூமியை சுமந்து கொண்டிருந்தவளின் பாரத்தை வாங்கிக் கொள்ளுமாறு மனதுக்குள் பரமபிதாவிடம் விண்ணப்பம் வைத்துவிட்டு நான் என் கனவுகளில் மூழ்கினேன்.
ஊருக்குத் திரும்பியதும் செய்ய வேண்டிய வேலைகளை மனதுக்குள் பட்டியலிடத் துவங்கினேன். ஒரு குயர் நோட்புக் போதாது போலிருந்தது!
அம்மாவின் நாள்பட்ட மூட்டுவலிக்கு நல்ல வைத்தியம் பார்க்கவேண்டும். ஓயாது உழைக்கும் அப்பாவின் வேலைப் பளுவை குறைக்க வேண்டும். பழைய வீட்டை மராமத்து செய்து புதுப்பிக்க வேண்டும்.
எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வைத்திருக்கிறார்கள். ஒரு லட்சிய ஆண்மகனாக என் மண வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பது என் அவா. அதற்கு நிறைய திட்டமிடலும் அதிக பொறுமையும் வேண்டும்.
நல்ல வேளையாக தங்கம் விலை கிடுகிடுவென உயரும் முன்னரே ஓரளவு நகைகளை வரப்போகிறவளுக்காக வாங்கிவிட்டேன். வீடு நிறைய பிள்ளைகள் இருந்தால் குதூகலம். ஆனால் நடைமுறைக்கு ஒவ்வாது.
இம்மாதிரியான பல்லாண்டு திட்டங்களில் என் சொந்த விருப்பங்கள் சில உண்டு. அதில் ஒன்று என்னதான் ஒரு சாமான்யன்தான் நான் என்றாலும் என் சுய சரிதையை எழுத ஆசையாய் இருக்கிறது. என் வாழ்க்கை அனுபவங்களை, அனுமானங்ளை, அபிலாட்சைகளை பதிவு செய்ய விரும்புகிறேன்.
நல்லெண்ணம் கொண்டோரை குழுக்களாக அமைத்து மரம் வளர்த்தல், குளம், குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கி பராமரித்தல், சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், ஆதரவற்றோரை, முதியோரை பாதுகாத்தல், அநியாயங்களை தட்டிக்கேட்டல் என நான் ஆற்ற விரும்பும் பணிகள் எண்ணிலடங்காது.
அடடா, என் கனவுகளில் மூழ்கியிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஊர் வந்துவிட்டது. விமானம் தரையை தொட்டுவிட்டது.
துரதிர்ஷ்டவசமாக நிகழ்ந்த விபத்தில் விமானம் இரண்டாக உடைந்துவிட்டது!
நான் எதிர்பார்க்கவில்லை இவ்வளவு சீக்கிரம் வீட்டை அடைவேனென்று!!!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community