Wednesday, September 28, 2011
(அ)நாகரிக பதர்கள்
பிள்ளை வளர்க்கப் பொறுமையில்லை
பெரியவர் பேணிடப் பிடிக்கவில்லை
பெரிதாய் சமூகநல கொள்கையில்லை
பிடித்து வைக்க ஒரு கட்டுப்பாடில்லை
யாருடனோ அவள் தனியே அவன் தனியே
எங்கோ களிக்கின்றனர் குடியும் கூத்துமாய்
பருவமடைந்ததும் துவங்குது இப்பழக்கம்
போதை ஏறி ஆடி முடிவாய் எங்கு எவருடன்
புரண்டு எழுந்தோமென சுத்தமாய் மறந்து
பகலுக்குப் பின் இரவு இப்படியே தொடர்ந்து
புதிய சரித்திரம் சமுதாயம் படைக்கின்ற
புல்லுருவிகள் இவர்கள் (அ)நாகரிக பதர்கள்
புலனின்பமன்றி வேறொன்றறியா உயிரினங்கள்
பகுத்தறியா இவர்கள் பெரும் படிப்பாளிகள்
பேரழிவுப் புயலின் நிச்சய புள்ளி மையங்கள்
புரையோடிப் பரவும் பயங்கர நச்சுக் கிருமிகள்
பட்டணம் துவங்கி பட்டிக்காடடையும் நோய்கள்
புற்றாய் பீடித்த நாசகார நண்டுக்கொடுக்குகள்
பொரித்தெடுப்பாரோ இவர்களை எண்ணெய் கொப்பரையில்
போட்டு வைப்பாரோ பொசுக்கும் அணையா செந்தழலில்
போகட்டும் நரகத்திற்கோ வேறெங்கோ பொருட்டில்லை
பொறுக்கலாமோ நரகமாய் நாட்டை வீட்டை ஆக்குவதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment