Thursday, October 13, 2016

மாணவன்

IndiBlogger - The Indian Blogger Community மாணவன் அவன் என்றென்றும்
மாலை சூடிய நாள் முதல்
மண்ணுக்குள் போகும் வரை
மனையாளை படிக்கிறான்
முடியாத பாடத்திட்டமது
முடிவதே இல்லை பொருள் புரிய
முரண் நிறைந்த அகராதியில்
முணுக்கென்று கோபமும்
முறுவலுடன் கொஞ்சலும்
முன்னறிவிப்பில்லா வானிலைகள்
முழம் பூ போதுமாயிருக்கிறது
முத்துமணி மாலைகளும் கூட
மூலையில் வீசப்படும் சமயமுண்டு
முழி பிதுங்கி நிற்பதுண்டு
முன்னே போனால் முட்டு
முடங்கிப்போனால் குட்டு
முழுதாய் புரிந்ததே இல்லை
மதிப்பெண் பெற்றிட போராட்டம்

Saturday, October 8, 2016

பெண்ணியத்தின் ஒளி

IndiBlogger - The Indian Blogger Community திருவினையாக்கும் முயற்சியிங்கு கண்டே
திகைத்தேனே திருதிருவென விழித்தேனே
அடைத்து வைத்த பெண்ணிற்கு விடுதலை
தேடினான் மீசையும் முண்டாசுமாய் ஒரு கவி
உடைத்துவிட சொன்னான் மூட பழக்கங்களை
இருட்டிய பின் வெளியே செல்லலாகாது பெண்
இந்த சட்டத்திற்கு மாற்றி யோசித்த கூட்டம்
இருட்டிய பின் ஆணை வீட்டில் அடை என்று
இன்றொரு ஆணை இடுவதில் முனைப்பானால்
இருண்டு போகாதோ பெண்ணியத்தின் ஒளி
Inspired by a post from "The Indian Woman-A perfect blend of modernity and tradition":'You say we shouldn't go out after dark? Why not lock men indoor after 7pm instead?'

Tuesday, October 4, 2016

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community
சிறுமையாலா கவிதைக்கருவாய்
ஏடுகளில் பாடுபொருளாய் ஆனாய்
தன்னிகரிலா தனிப்பிறவியே தனமே
மாதரசியே மாபெரும் சக்தியானவளே
மாண்புகளின் மொத்த அவதாரமே
மலை மேல் பிறந்து குதித்தோடி
காடும் வயலும் தாண்டி களைக்காது
வழியெங்கும் வளம் இரைத்தபடி
இலக்கை அடைந்தாய் இறுதியாய்
ஆழ்கடலில் சங்கமித்தாய் கரைந்தாய்
கங்கையே உவப்புடன் இனிப்பிழந்தாய்
உப்பாய் மாறிப்போனாய் ஏற்றாய்
மணவாளன் அடையாளத்தை
சரணாகதியிதுதானோ சொர்க்கம்

Monday, October 3, 2016

பெண்ணின் பெருமை

IndiBlogger - The Indian Blogger Community
யாருக்கும் பொருட்டில்லை பெண்ணின் பெருமை
தனியாய் அவள் மதிப்பு தெரியவில்லை அன்று
தெரியவிடவில்லை நம் ஆணாதிக்க சமுதாயம்
கொழு கொம்பை பின்னிப்படரும் கொடியவளென்று
தந்தை கணவன் மைந்தனென என்றும் ஆண்மகனை
சார்ந்தேயிரு என்றான் மனு பரம்பரையாய் தொடர்ந்த
மூளைச்சலவையில் மயங்கி மழுங்கி மங்கி மங்கை
சுய பலமறியாது அடிமையாய் கிடந்த காலம் முடியுது
ஆளில்லா கோட்டையில் அரக்கனால் சிறைப்படுத்தி
வாடிய அரசகுமாரி ஆண்டாண்டு காலம் காத்திருந்தாள்
அரசகுமாரன் வந்து விடுவிக்க என்று கதை சொன்னால்
இன்றைய குட்டிப்பெண் அலுத்துக்கொள்கிறாள் அழகாக
அரக்கனை சாமர்த்தியமாய் சமாளித்து வெல்லாமல்
அயலான் உதவிக்கு வர காத்திருப்பது மடமை என்று
பிறந்துவிட்டது புது யுகம் பொலிவுடன் விழித்தெழுங்கள்
பொல்லாத சாத்திரத்தை கதைகளை மாற்றி எழுதுங்கள்

Thursday, September 29, 2016

காப்பி

IndiBlogger - The Indian Blogger Community அகத்துள்ளே முகிழ்கிறது பரவசம்
அங்கமெல்லாம் பரவும் ஒரு சுகம்
முதலில் ஈர்க்கப்பட்டது மூக்கு
தெய்வீக மணம் காற்றில் வர
பொங்கும் நுரை கண்ணில் பட
தவித்த நாக்கு அடையும் சாந்தி
சொட்டு சொட்டாய் உள் வாங்கும்
திட்டமான தித்திப்பு சரியான சூடு
தேவருடன் உறையும் அந்த கணம்
வழங்கும் தேவாமிர்தம் காப்பியின்
சர்வதேச தினமின்று கொண்டாடிட
மகிழ்ந்திட கூடுவோமதை குடிக்க

Friday, September 16, 2016

விசாரம்

IndiBlogger - The Indian Blogger Community
தருமே தைரியம் உச்சகட்ட சோதனை
தாளாதினி என்ற உள்ளத்து வேதனை
தீர்த்திட துடித்தாள் தொடரும் கொடுமை
தயங்காது கொட்டினாள் தன் மனச்சுமை
உளதோ துளி அன்பு உன் உள்ளத்தில்
உக்கிர வேடம் பூண்டாள் மனையாள்
உன் அடிமையாய் வாழ்ந்தது போதும்
உன் சகவாசம் எனக்கினி வேண்டாம்
சிறையை விட்டு வெளியேறுவேன்
சிறகை விரித்து சுதந்திரமாய் பறப்பேன்
சிறுமை கண்டின்று பொங்கிவிட்டேன்
சிற்றேவல்கள் இனி என்னிடம் செல்லாது
எங்கு போகிறேன் என்ன செய்கிறேன்
என்றினி என்னை நீ கண்காணிக்க இயலாது
அங்கே போகாதே இங்கே நிற்காதே அம்மம்மா
அநியாய அடக்குமுறை ஆணாதிக்கமம்மா
பொங்கியவளை பொரிந்து தள்ளியவளை
பொறுமையிழந்தவள் புருஷன் தடுத்தான்
பரிதாபமாய் தன்னிலைதனை விளக்கினான்
புரியாதவளைப் பார்த்து உரைத்தான் இப்படி
வெறியுடன் அலையுதிந்த மனிதர் கூட்டம்
வேரோடு நம்மை வெட்டி சாய்க்க துடிக்குது
விதம் விதமாய் நம்மை சுற்றி வளைக்குது
விஷப்புகைகளை நிதம் நம்மேல் வீசுது
மின்சார மின்னணு கொடூர கருவிகள்
மொத்தி சாத்தும் கொலை மட்டைகள்
மெத்த ஆபத்து ஸ்தலங்களையுனக்கு
மொத்தமாய் தடை செய்து வைத்தேனடி
விவரமாய் விளக்கவில்லை பாவி நான்
வில்லங்கமாய் போனதடி என் விசாரம்

விவகாரமேனடி எனை விட்டு செல்லாதே
விளங்கிக்கொண்டவள் விரும்பினாள் பதியை

Thursday, September 15, 2016

உய்யுமோ உலகம்

IndiBlogger - The Indian Blogger Community முடியவில்லை இளைஞர்க்கு
ஆமை போல் ஐந்தடக்க
கடை விரித்திருக்கு பாவம்
வலை விரித்திருக்கு ஊடகம்
முடியவில்லை முதியோருக்கு
தாமரை இலை நீராய் வாழ
கண் காது வாய் மூடி இருக்க
உய்யுமோ உலகம் கூறுவீர்​
IndiBlogger - The Indian Blogger Community