தருமே தைரியம் உச்சகட்ட சோதனை
தாளாதினி என்ற உள்ளத்து வேதனை
தீர்த்திட துடித்தாள் தொடரும் கொடுமை
தயங்காது கொட்டினாள் தன் மனச்சுமை
உளதோ துளி அன்பு உன் உள்ளத்தில்
உக்கிர வேடம் பூண்டாள் மனையாள்
உன் அடிமையாய் வாழ்ந்தது போதும்
உன் சகவாசம் எனக்கினி வேண்டாம்
சிறையை விட்டு வெளியேறுவேன்
சிறகை விரித்து சுதந்திரமாய் பறப்பேன்
சிறுமை கண்டின்று பொங்கிவிட்டேன்
சிற்றேவல்கள் இனி என்னிடம் செல்லாது
எங்கு போகிறேன் என்ன செய்கிறேன்
என்றினி என்னை நீ கண்காணிக்க இயலாது
அங்கே போகாதே இங்கே நிற்காதே அம்மம்மா
அநியாய அடக்குமுறை ஆணாதிக்கமம்மா
பொங்கியவளை பொரிந்து தள்ளியவளை
பொறுமையிழந்தவள் புருஷன் தடுத்தான்
பரிதாபமாய் தன்னிலைதனை விளக்கினான்
புரியாதவளைப் பார்த்து உரைத்தான் இப்படி
வெறியுடன் அலையுதிந்த மனிதர் கூட்டம்
வேரோடு நம்மை வெட்டி சாய்க்க துடிக்குது
விதம் விதமாய் நம்மை சுற்றி வளைக்குது
விஷப்புகைகளை நிதம் நம்மேல் வீசுது
மின்சார மின்னணு கொடூர கருவிகள்
மொத்தி சாத்தும் கொலை மட்டைகள்
மெத்த ஆபத்து ஸ்தலங்களையுனக்கு
மொத்தமாய் தடை செய்து வைத்தேனடி
விவரமாய் விளக்கவில்லை பாவி நான்
வில்லங்கமாய் போனதடி என் விசாரம்
விவகாரமேனடி எனை விட்டு செல்லாதே
விளங்கிக்கொண்டவள் விரும்பினாள் பதியை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment