Tuesday, October 8, 2013

கொடுமை

IndiBlogger - The Indian Blogger Community மறுபேச்சு பேசாமல்
தரக்குறைவைத் தாங்கி
மக்கள் மாக்களாய்
மாறுகின்ற கொடுமை
நெஞ்சு பொறுக்குதில்லையே
காடழிக்க காத்திருக்கு
அக்னி குஞ்சொன்று 
ரௌத்திரம் பழகியே
என்னென்று சொல்ல
எப்படி விவரிக்க
பொங்கும் ஆத்திரம்
வார்த்தை தின்றதோ
வாய் செத்ததோ
பித்தாகி திகைக்க
அனலாய் மூச்சு
துருத்தியாய் வீச
அக்கிரமத்தை சொல்ல
அமைதியை தேட
தவிக்கிறேன் நழுவும்
நிதானத்தைப் பற்ற
முயல்கிறேன் நானும்
முடியலையே இன்னும்
குலக்கொழுந்தொன்று
பசுந்தளிரொன்று எங்கள்
பால்வடியும் முக செல்வன்
ஒன்பது வயது பாலகன்
பாட்டியுடன் கொஞ்ச வந்த
அழகிய விடுமுறையில்
பத்து நாளுக்கு முந்தைய
வயிற்றுபாதை திரும்பவே
கூர்மதி கொண்டவளாம்
அனுபவமுள்ளவளாம்
என் பின்னே பிறந்தவளாம்
மருத்துவம் பயின்றவளாம்
எதற்கும் ரத்த பரிசோதனை
பார்த்திடலாமென பரிந்துரைக்க
கையில் கொடுக்கப்பட்ட
சோதனை முடிவுத்தாள்
அணுகுண்டை போட்டது
கிட்டதட்ட நான்கு பங்கு
வெள்ளை அணுக்கள்
சொல்ல நா கூசும்
பொல்லாத நோயின்
காலனின் கைப்பிடியை
கொடிய வேதனையை
சுட்டிக் காட்ட அதிர்ந்தோம்
சிதைந்தோம் மொட்டையாய்
எச்சரிக்கை முறையாய்
சுமக்காத சீட்டினை கண்டு
சீறிய என் தங்கையும்
வேறிடத்தில் மறுபரிசோதனை
செய்திட பணிக்க இரவும் 
துவங்கிட காத்திருந்தோம்
மறு நாள் மறு சோதனை 
முடிவை கையில் வாங்க
வார்த்தது பாலை வயிற்றில்
அந்த இரண்டாம் சோதனை
ஒரு கோளாறுமில்லையென
கண்ணகியாய் எரிக்கக்
கிளம்பியவளை நிறுத்தி
பொறுமை புகட்டினர்
நகரின் உச்ச தரம் கொண்ட
சோதனை கூடத்தில்
மறுநாள் மூன்றாம் முறை 
சோதனை முடித்து அதிலும் 
இருக்கவில்லை பிழையேதும்
சிறந்த குழந்தை நிபுணரையும்
கண்டு தெளிந்த பின்னும் 
ஆறவேயில்லை எனக்கு
நுகர்வோர் நீதிமன்றத்தில்
தண்டனை பெற்றுத் தராது
குடும்பம் அடைந்த துயர்
கொஞ்சமும் ஆறாது
என்றே ஒற்றைக்காலில்
நின்றவள் முதல் சோதனை
மையத்தின் தலைமையை
தொலைபேசியில் அழைத்து
நடந்ததை விவரித்தேன் 
இது நீதியா நியாயமா
நெஞ்சு பொறுக்குமா
அடுக்குமா இக்கொடுமை
பத்திரிகையில் கிழிக்கட்டுமா
கோர்ட்டில் வழக்காடட்டுமா
தொழில் தர்மம் இதுதானா
குமுறினேன் கொதித்தேன்
மழை இன்னும் பெய்திட
காரணனாய் ஒரு நல்லவன்
மறுமுனையில் இருந்து
என் எரிமலையை 
அப்படியே உணர்ந்து
கண்ணியமும் கொள்கையும்
கொண்ட கனவானாய்
கொள்ளை பணிவாய்
மன்னிக்கக் கோரி
எளிதில் மன்னிக்கும் 
சாமானிய குற்றம்
இதுவல்லதான் என்றும்
உடனடியாய் விசாரித்து
நடவடிக்கையாய் அக்கொடிய
தவறு செய்த அலுவலரை
பத்து நாள் பணிநீக்கம் செய்து
பழிவாங்கும் திட்டத்தை என்
மனதிலிருந்து துடைத்தானே
நொந்த மனமும் உடலும்
என்று முழுதாய் தேறுமோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community