கன்னி மயில் சீதை ஒரு நாள் சோலையிலே
தோழியருடன் களித்திருந்த வேளையிலே
காதல் கிள்ளையிரண்டு கைபிடிக்கவருவான்
அழகிய ரகுராமனென பேசியது கேட்டு
மனமிக மகிழ்ந்த அரசகுமாரி சேடியரை
கவர்ந்து வரச்செய்தாள் அப்பறவையிரண்டை
கைக்குள் பிடித்துக் கொண்டாள் அப்பேடையை
ஆவல் மிகக் கூவினாள் மேலும் சொல்லென்று
சேதி தந்த போதையில் கூட இருங்கள் என்னுடன்
கல்யாணராமன் வந்திடும் சுப நாள் வரை என்றாள்
மாளிகையின் சௌகரியம் தோதில்லை எம் வனத்திலே
முட்டையிட காத்திருக்கும் நேரமிதென்றது பேடை
பெட்டையை விட்டுவிடச்சொல்லி ஆண் கிளியும்
காட்டில் குஞ்சு பொறித்து வளர்த்ததும் வருவதாய்
கெஞ்சியும் கேளாமல் பிடிவாதமாய் பிடியை விடாத
பெண்ணரசியை மனம் கசந்து சாபமிட்டு உயிரை விட்டது
சிறைப்பட்ட அப்பாவி பெண் கிளி வயிற்றில் முட்டைகளுடன்
அது கண்ட ஆண் கிளியும் கங்கையிலே மூழ்கி மாய்ந்ததே
ஆண் கிளி அடுத்து அவதரித்தது அயோத்தியில் வண்ணானாய்
முற்பிறவி வன்மம் தீராமலே திரிந்த பொழுதிலே
இலங்கையிலிருந்து பிரிய சகி சீதையை மீட்டு வந்து
அரசாள அரியணையேறிய ராமனை அவன் மனையாளை
அவதூறாய் பேசியதை ரகசிய ஒற்றனும் கேட்டானே
ஊரெல்லாம் புகழ்ந்தாலும் ஒருவன் இகழ்ந்ததை
மறைக்க முடியாது தோற்றானே விதி வென்றதே
ஏனைய இளவல்கள் மறுத்து மூர்ச்சையாகி விட
தாயைக் கொன்ற தந்தை சொல் மீறா பரசுராமனொக்க
கதறக் கதறக் காட்டிலே தானும் கதறியபடியே இலக்குவன்
கரு சுமந்த உத்தமியை கபடறியா பேடையை சீதையை
கைவிட்டு வந்தானே காக்கட்டும் வால்மீகி முனியெனவே
சதியின் சுத்தமறியா பதியல்ல அரச பதவியின்
களங்கமில்லா பெருமையை சிரமேற்தாங்கியவன்
அக்கினியில் போட்டெடுத்த பொன்மயிலை பிரியவும்
சூல் கொண்ட இல்லாளை நாடு கடத்தவும் துணிந்தானே
லவனும் குசனும் வளர்ந்து வீரதீரமுடனே நிமிர்ந்து
புரவிகளையடக்கி அனுமன் ஆசியுடன் அன்னை கவசத்துடன்
அனைவரையும் வீழ்த்தி திறம் காட்ட அவர் குலம் மூலம்
அறிந்த மாமன்னன் வாரிசுகளை அணைத்துக்கொள்ள ஏங்கினான்
அன்னையை அருகே அமர்த்திட மீண்டும் அக்கினியை மூட்டினான்
மூத்த தாயாரெல்லாம் மனம் குமுறி பொங்கித் தவித்து தடுத்திட
பொறுத்துக்கிடந்தவள் அபலையவள் போதும் இனி சோதனைகள்
என்றெண்ணி ஆதரவாய் பிளந்த அன்னை பூமியின் மடி புகுந்தாள்
கண்களில் கண்ணீர் நிறையவைக்கும் நிகழ்வுகள்...!
ReplyDeleteஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியதோ..!!???
இராஜராஜேஸ்வரி, ஊழ்வினையைத் தவிர எனக்கு வேறு என்னென்னவோ புரிந்தது!
Delete