உன் மனசுல என்னதான் நினைச்சுக்கிட்டிருக்க? என் மேல உனக்கு கொஞ்சமாவது மரியாதை இருக்கா? என் பேச்சுக்கு மதிப்பிருக்கா? நான் என்ன சொன்னாலும் நீ உன் இஷ்டத்துக்குத்தான் ஆடுற!
வீடு எப்படி கிடக்கு பாரு! யாரும் பாத்தா என்ன நினைப்பாங்க? கண்டபடி சாமான்கள் குப்பையா இரைஞ்சி கிடக்கு! கிளிஞ்ச பேப்பர், பிஞ்ச செருப்பு, ரப்பர் பொம்மைகள்!
ஒன்னும் தெரியாத மாதிரி முகத்த வச்சிகிட்டா நான் ஏமாந்துருவனா? பாவம் போல கண்ண தாழ்த்தி கீழ பாக்குறத பாத்து மன்னிச்சி விட்டுருவேன்னு நினைக்கிறியா? உன் அழகான மூஞ்சிக்கு அடிமையாத்தான் கிடக்கேன். உன் ராஜ கம்பீரத்திலும், உன் பெரிய கண்கள்ல வழியிற குழந்தைத்தனத்திலயும் சொக்கித்தான் கிடக்கிறேன். அதுக்காக ஒரு மனுசன் பொறுமைக்கு எல்லையே இல்லாம போகுமா?
பகல் பூரா ஜம்முனு சோபாவுல படுத்து தூங்குற. சாயங்காலமானா வெளியே கூட்டிட்டுப்போன்னு பாடாப் படுத்துற. என்னய ஆசுவாசப்படுத்திக்கவோ, என் வேலைகளை பாக்கவோ விடாம அவசரப்படுத்துறதே உன் வாடிக்கையா போச்சி.
வெளிய போனா போன சோலிய பாத்துட்டு வீட்டுக்குத் திரும்புனமாங்கிறது கிடையாது. யப்பா, உன்னோட தினமும் இதே பாடா போச்சி! எவ்வளவு நேரம் எவ்வளவு தூரம் சுத்தினாலும் உனக்கு திருப்தியே வராது. உன் ரோதனை தாங்க முடியல.
அதுல பாரு, நாம ரெண்டு பேரும் ரோட்டுல இணைஞ்சி நடந்து போனா ஊர் கண்ணு பூரா நம்ம மேலதான் இருக்கு. அதுல எத்தன கண்ணு கொள்ளிக்கண்ணோன்னு நான் பயந்து போய் உனக்கு சூடம் சுத்திப் போட வேண்டியிருக்கு!
நான் என்ன புத்திமதி சொன்னாலும் கேக்குறதே இல்ல. தமிழும் தெரியாது இங்கிலீஷும் தெரியாதுங்கிற மாதிரி நிப்ப. உன் நடிப்புக்கு ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்.
ராத்திரியாவது நிம்மதியா தூங்க விடுறியா? உனக்கென்ன பகல் பூரா தூங்கிடுவ. நான் அப்படியா? ஆபிஸுக்கு போயி அத்தனை நாய்கிட்டயும் பேச்சு வாங்கி மூச்சு விட நேரமில்லாம உழைச்சிட்டு வர்றேன்.
சும்மா என்னய அப்படி பாக்காத. என் மனச கரைச்சி வசியம் பண்ணி என்னய ஒரு தலையாட்டி பொம்மையா ஆக்கி வச்சிருக்கியே! நான் என்னதான் செய்வேன்? உன் இஷ்டப்படியெல்லாம் நடந்துக்கிறதுக்காகவே பிறந்தவன் நான்னு என்ன அதிகாரமா நடத்துற! மீற முடியாம, அடக்க முடியாம அடங்கிக் கிடக்கேன் நான்!
காச காசுன்னு பாக்காம தண்ணியா செலவழிச்சி உன்னய உசத்தியா பராமரிக்கிறேன். வேளா வேளைக்கு விதம் விதமா சாப்பிடுற. அப்புறமும் கோழிக் குழம்பு வாசம் வந்தாலே பட்டினி கிடந்த மாதிரி பறக்குற! இன்னும் கொஞ்சம் டீசன்டா நடந்துக்க முடியாதா உன்னால?
எனக்கு உன் அருமை தெரியுது, உன் வாசனை பிடிச்சிருக்கு. ஆனா நம்ம கார்ல ஏறுகிற என் நண்பர்கள்லாம் மூக்க பிடிச்சிகிட்டு நக்கலா சிரிக்கிறான்கள்!
உனக்கு இயற்கையாவே பாசம் அதிகந்தேன். அத வெறித்தனமா வெளிக்காட்டவும் செய்யுற. ஆனா வீட்டுக்கு வர்ற எல்லார்கிட்டயுமா அப்படி நடந்துக்கிறது? பாதிப் பேர் பயந்து போயிர்றாங்க. மீதிப் பேர் ஒதுங்கி ஓடுறாங்க. நீ உன் சுபாவத்த மாத்திக்கவே மாட்டேங்குற. என்னய தர்மசங்கடத்துக்கு ஆளாக்குறதுல உனக்கு என்ன சந்தோஷமோ?
உன்கிட்ட இருக்கிற இன்னொரு கெட்ட குணம் என்னன்னா உனக்கு அந்நியர்கள கண்டாலே ஆகுறதில்ல. அவங்கள நெருங்க விடாம கத்தி கூப்பாடு போடுற அநேக சமயங்கள்ல அநாவசியமா!
உனக்கு ரொம்பத்தான் அதிகமா இடம் கொடுத்திட்டேன் போல. நான் எவ்வளவு படிச்சி படிச்சி சொன்னாலும் நீ கொஞ்சங்கூட கீழ்படியிறதில்ல. நான் ஒன்னும் பெரிய மேதாவி இல்ல ஒத்துக்கிறேன். ஆனா நீ நினைக்கிற அளவு அடி முட்டாளும் இல்ல.
பண்ணுற சேட்டை எல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத அப்பிராணி மாதிரி மூஞ்சிய வச்சீக்கிறதுல நீதான் படு கில்லாடியாச்சே! நீ பண்ணுற ஜாலம் போடுற வேஷம் எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா? அதான் சொல்லிட்டேன்ல, எனக்கு உன் மேல கோபமே வரமாட்டேங்குது. ஆசையோட நீ நெருங்கும்போது அன்பு ஒன்னுதான் பெருக்கெடுக்குது!
இந்த தீபாவளி வந்துட்டாலே போச்சு. ஏன்டா இப்படி ஒரு பண்டிகை வருதுன்னு நினைக்க வச்சிர்ற. அதப் பத்தி எழுதி மாளாது! போதும்டா சாமி!
இப்படி இப்படி நடந்துக்கோன்னு நானும் ரொம்ப சீரியஸா பத்தி பத்தியா பேசுனா கேக்குற மாதிரி கேட்டுட்டு "போடா போ நீயும் உன் புத்திமதியும்! அதுக்கெல்லாம் வேற ஆளப் பாரு"ங்கிற மாதிரி தலைய சொறிய ஆரம்பிச்சிருவ.
ஆனா இத்தனைக்கப்புறமும் எனக்கு உன் மேல இருக்கிற அன்பு இம்மியளவும் குறையிறதேயில்ல. நாளுக்கு நாள் வளந்துகிட்டே போகுது! அது என்ன மாயம்னே தெரியல!
நீ எனக்கு தாயா, ததாரமா, சேயா, தோழனா? அத்தனையும் கலந்த உறவா? அத்தனையையும் தாண்டிய அபூர்வ உணர்வா? ஜன்ம ஜன்மமாய் தொடர்ந்து வரும் பந்தமா? உனக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை!
நானும் நீயும் சேர்ந்திருக்கும் போது நம் சுற்றுப்புறமே மறந்து போகிறது. வானில் பறப்பது போல் இருக்கிறது. சொர்க்கத்தின் சுவை தெரிகிறது. அனுபவித்தால் மட்டுமே புரியும் இந்த யோகத்தைத் தான் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்றார்களோ?
போட்டிக்கும் பொறாமைக்கும் இடமில்லாத புதுமையான உறவிது. கண்ணுக்குத் தெரியாத காற்றாய், காற்றில் கலந்த பூவின் வாசமாய் மனதை நிறைப்பது. நேற்றைய வலியை இன்றைய சுமையை நாளைய பயத்தைப் போக்கும் அதிசய மருந்து இது.
ஐயகோ! நெஞ்சு விம்ம நிறைகள் கிடக்க பேதை போல் குறைகளை சொல்லி புலம்பினேனே! நமது அற்புத உறவின் அழகை, அருமையை வர்ணிக்க யாரே வல்லார்? நமது அமரக் காதலைப் பாடிட கம்பனையையும் ஷெல்லியையுந்தான் அழைத்திட வேண்டும்! அவர்கள்தான் இதையெல்லாம் ரசித்து ரசிக்க வைத்து வர்ணிக்க முடியும்.
தேனா, தேவாமிர்தமா இனிக்கும் நம் உறவின் சுவையை நமையன்றி யாரறிவார்? அர்த்தமில்லா இச்சை மொழிகள் பேசி இன்ப வானில் சிறகடிக்கும் பச்சைக்கிளிகளல்லவோ நாமிருவரும்!
என் இதய.துடிப்பே! இனிய இம்சையே! சிப்பியில் பிறக்காத முத்தே! என் சொத்தே! செங்கரும்பின் சாறே! பேரின்ப ஊற்றே! அந்தி நேர வானமே! துயிலெழுப்பும் குயிலின் கானமே!
நான் சிக்கென பிடித்த சிவலிங்கமே! வயிரம் பதிக்க உகந்த தங்கமே! தென் பொதிகை தென்றலே! திருக்குற்றால சாரலே! தென்னை இளநீரே! பனைமரத்து நுங்கே!
ஜாடிக்கேத்த மூடியே! வலது இடது கால் செருப்பின் பொருத்தமே! வெள்ளை ஓட்டு முட்டைக்குள் உரையும் இரு கருவே! தேடக் கிடைக்காத செல்வமே! என் உயிரில் கலந்த செல்லமே!
இயம்பவியலா பேரின்பமே! பெறுதற்கரிய ஒரு ஞானமே! வானவில்லின் வண்ணமே! சிறகு முளைத்த எண்ணமே! வழி காட்டும் விடிவெள்ளியே! புதுப்பாடம் சொல்லும் பள்ளியே!
புல் சூடும் வைர மகுடமான பனித்துளியின் ஆயுள் சில மணித்துளியே. அது தந்த ஆனந்தம் மனசுக்குள் உறைந்திருக்கும் ஆயுளுக்கும்.
நிலையாத இவ்வுலகின் நிலையான நினைவுகளே மனதை வருடும் மயிலிறகுகளாம். பெட்டிக்குள் பூட்டி வைத்த பொக்கிஷங்களாம்.
மூச்சு நின்ற பிறகும் நமதுறவின் பெருமையின் அருமையின் பேச்சிருக்கும். கல்லில் செதுக்கிய காலச்சுவடுகளாய் சரித்திரம் உயிர்த்திருக்கும்.
உண்மைகள் ஒளிர்ந்திருக்கும். உன்மத்தம் அமரத்துவம் அடைந்திருக்கும். பிறவிப் பயன் கண்டார், பிரம்மத்தை தரிசித்தார் பித்தில் சிக்கியவர்.
தொடுவானம் நோக்கி பயணிக்கிறோம். தொடர்ந்து கொண்டே இருக்கும் முடிவில்லா பயணம். கூட நடக்கும் துணையால்
இனிமையாக
ும் நடை. நீளும் நீளும் நீண்டு கொண்டே இருக்கும். மனமும் அதையே விரும்பும்.தொடும் தூரத்திலா வானம்? பறந்து பிடிப்போமா பஞ்சு மேகங்களை? அண்டம் தாண்டி மிதப்போமா? கோள்களையெல்லாம் குசலம் விசாரிப்போமா? கூடை நிறைய வைர நட்சத்திரங்கள் அள்ளிக் கொள்வோமா?
அன்பை பருகியே அமுதம் உண்டு அமரரான தேவர்களானோம். எட்டாத சொர்க்கத்தை எட்டிப் பிடித்தோம். திட்டங்கள் என்றும் வளர்பிறை. எதுவும் சாத்தியமே. எட்டாத உயரமில்லை. கிட்டாத கனவுமில்லை.
அழகான அன்பு தந்த சிறகுகள் சுமந்து செல்லுமே தேவதைகளின் தேசத்துக்கு. துக்கமில்லா தூக்கமில்லா பரவச வெளிக்கு. பார்த்து வியந்தவர் நம் பாதச் சுவட்டில் நடக்க துணிந்தவர் ஆவார் பாக்கியவான். பெறுவார் யாம் பெற்ற இன்பம். நிறைவேறிற்று நம் நல்ல கனவு.
அத்தனையையும் அமைதியா கேட்டுட்டு சந்தோஷமா தன் வாலை ஆட்டி "வவ் வவ்"ன்னு குரைச்சி தன்னோட ஆமோதிப்பை அறிவிக்குது என் அன்பு செல்லம்.
(கதைப் போட்டியில் தேர்வாகாத நான் எழுதிய கதை).
0 Comments
Active