எண்ணங்கள் ஒளிரவும்
வண்ணங்கள் மிளிரவும்
வருகிறது விரைவில் தீபாவளி
வழக்கமான புலம்பல் கேட்கிறது
வெடிக்காதீர் பட்டாசுகளை
கொளுத்தாதீர் மத்தாப்பூ
பாழாகிறது சூழல் மாசினால்
பொய்யாய் வருந்துகிறார்
வீட்டுக்கொரு வாகனம்
விடும் புகை தெரியவில்லை
நிரம்பின நீர்நிலைகள்
நீரையிழந்து மக்கா குப்பையால்
நோகாமல் தூக்கி எறிந்த
நெகிழி பைகள் கோப்பை தட்டுகளால்
கர்வமாய் உயர்ந்த கட்டிடங்கள்
வெட்டி வீழ்த்திய ஏராள மரங்கள்
கட்டிய கைபேசி கோபுரங்கள்
ஒழிந்தன பறவைகள் வீடுகள்
தயங்கவில்லை குழந்தைகளுக்கு
குப்பையான துரித உணவு ஊட்ட
மாகி, பெப்சி, கோக், சிவப்பு கோழிக்கறி
எண்ணவில்லை கேடு விளைவிக்கும்
விஷமான பொருட்கள் நிறமிகள்
உள்ளே தடையின்றி செல்வதை
மறக்குது பாரம்பரிய கொண்டாட்டங்கள்
மறையுது ஆரோக்கிய பழக்கங்கள்
விழுங்குது நம்மை ஐபோனும் ஆண்ட்ராய்டும்
மாசாக்குவதோடு காசும் கரியாகுதாம்
ஜவுளிக்கடை நகைக்கடை விஜயம்
நினைவுக்கு வரவில்லை சிவகாசியில்
பிழைக்கும் எண்ணற்ற ஏழைகளும்தான்
அந்நிய பொருள் மோகத்தை கொளுத்தி
கலப்பட வாணிபத்தை சாம்பலாய் எரித்து
கள்ளமில்லா எளியோரை வாழவைப்போம்
யூனிசெஃப் வாழ்த்துமடல் அனுப்புவோம்
அர்த்தமுள்ள ஆனந்தமான பண்டிகையை
அழகாக அமர்க்களமாய் கொண்டாடுவோம்