Tuesday, August 12, 2014

காலநதிக் கரையில்

IndiBlogger - The Indian Blogger Community காலநதிக் கரையில்

அது இன்னொரு முடியாத இரவாய் மாறி என்னை இம்சித்தது. தூங்கியதாக பேர் பண்ணியது போதுமென்று எண்ணி போர்வையை விலக்கிவிட்டு மெதுவாக படுக்கையை விட்டு எழுந்தேன். சில முக்கிய வேலைகளை முடித்துவிட்டு குளிக்கச் சென்றேன். கண்களில் நீர் பட்டதும் தீப்போல எரிந்தது. நிம்மதியாய் தூங்கி எத்தனை வாரங்கள் ஆனது என்று நினைவில்லை.
விளக்கைத் தேடும் விட்டில்பூச்சியாய் மீண்டும் படுக்கைக்கே வந்து என் கண்ணம்மா தூங்கும் அழகை ரசிக்கத் துவங்கினேன். கருவிலிருக்கும் குழந்தையைப் போல் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் வெராந்தாவில் உலாவினேன். வானம் வெளுக்கவும் குயில் கூவவுமாய் புதிய நாள் உதயமாகிக் கொண்டிருந்தது. மீண்டும் படுக்கைக்கு அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து குவிந்த மொட்டு மலரும் நொடிக்காக தவமிருக்கலானேன்.
சின்ன ஏக்கப் பெருமூச்சுடன் அவள் புரண்டு படுத்தாள். என்ன கனவோ என் செல்லத்துக்கு. கனவில் கூட அவள் ஏக்கத்தை அனுமதிக்க மறுத்தது என் காதல் மனசு. நெற்றியில் விழுந்த முடியை மெதுவாக ஒதுக்கி அந்த முழு மதி முகத்தின் பூரண அழகை ஆசையோடு பருகிக் கொண்டு அமர்ந்திருந்தேன்.
விசுக்கென பட்டாம்பூச்சிகள் இரண்டு சிறகடித்த மாதிரி அவள் விழிகள் திறந்தன. எதிரே என்னைக் கண்டதும் அந்த விழிகளில் அப்படியொரு வெளிச்சம். லேசாய் வெளுத்திருந்த இதழ்கள் தானாக திறந்து முத்துப்பற்களை கொஞ்சமாய் காட்டி சிரித்தன. மெலிவான இரு கைகளாலும் என் கழுத்தைக் கட்டி அவளருகே இழுத்தாள்.
“காப்பி ஆறப்போகிறது. முதல்ல அத குடிம்மா.”
சிறு குழந்தையின் ஆர்வத்தோடு வேகமாக கப்பை கையில் வாங்கி மெதுவாக ரசித்துக் குடித்தாள். குடித்து முடித்ததும் என்னைப் பார்த்து விஷமமாய் சிரித்தாள்.
“எதுக்கும்மா இப்ப சிரிப்பு?”
“எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்திச்சி.”
“சொல்லேன்.”
“நாம இந்தியாவுல, தமிழ்நாட்டுலதான இருக்கோம்?’
“ஆமா. அதிலென்ன சந்தேகம் உனக்கு?”
“அப்புறம் ஏம்பா நீ தெனமும் வெள்ளைக்கார புருஷன் மாதிரி காப்பியோட வந்து என்ன எழுப்புற?”
கலகலவென சிரித்தாள்.
“இந்த தமிழ்நாட்டுல எத்தன பொம்பளைக்கு இந்த யோகம் கிடைச்சிருக்கு?”
தலையை சாய்த்து அவள் பேசிய வெள்ளைப் பேச்சில் எனக்கு தொண்டையை அடைத்தது. அவள் யோகத்தைப் பற்றி வெளிப்படையாய் அவள் சிலாகிக்கிறாள். ஆனால் நான்....’கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் மறந்துவிட்டு இந்த நிமிடத்தில் வாழ முயற்சி செய்’ என்று எனக்கு நானே விடாமல் சுய போதனை செய்து கொண்டிருந்தேன். முகத்தில் தோன்றிய கலக்கத்தை மறைக்க காப்பிக் கோப்பையை வைக்கும் சாக்கில் எழுந்தவனை சட்டையைப் பிடித்து இழுத்தாள்.
“ப்ளீஸ், ஏசியை ஆஃப் பண்ணிட்டு ஜன்னலை திறந்து வைப்பா.”
அவளுக்கு ஏசி பிடிப்பதேயில்லை. இயற்கையான காற்றும், வெளிச்சமும் வேண்டும் என்பாள். கனத்த மனதுடன் எழுந்து அவள் வேண்டுகோளை நிறைவேற்றினேன். நானும் ஏசியை எதிர்ப்பவன்தான். ஆனால் இப்போது தூசி, துரும்பு, கிருமி என எதுவும் என் செல்லத்தை அண்டி விடக் கூடாது. என்று அவளை பொத்தி வைத்து அடைகாக்கத் துடித்தேன்.
கிளி ஒன்று கீச் கீச் என்று கத்தும் சத்தம் மிக அருகில் கேட்டது. தூரத்திலிருந்து இன்னொரு கிளி வேறு ஸ்தாயியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தது. மைனா ஒன்று பலத்த குரலில் கத்திக் கொண்டு பறந்து சென்றதும் ஜன்னல் வழியே தெரிந்தது.
படக்கென்று படுக்கையை விட்டு எழுந்து ஜன்னலருகே நின்று தோட்டத்தை ஆசையாய் பார்வையிட்டாள். திடீரென சிறு குழந்தையின் உற்சாகத்துடன் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அறையை விட்டு ஓடினாள். தடதடவென மாடியிலிருந்து இறங்கி ஓடியவளை படபடக்கும் இதயத்துடன் கையைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தேன்.
நேரே தோட்டத்துக்குச் சென்றவள் தோட்டக்காரன் கையிலிருந்த தண்ணீர் ஹோஸைப் பிடுங்கி தானே பூச்செடிகளுக்கு நீர் விட ஆரம்பித்தாள். திடீரென ஹோஸை அப்படியே போட்டுவிட்டு வீட்டு முகப்பிற்கு ஓடினாள்.
“இன்னிக்கு எத்தன அல்லி பூத்திருக்கு?” என்று கூவியபடியே அல்லிக்குளத்திற்கு அருகில் போய் விரல் விட்டு எண்ண ஆரம்பித்தாள். அவளோடு சேர்ந்து நானும் அப்போதுதான் முழுதாய் விரிந்து முடித்திருந்த அல்லிப் பூக்களை ரசித்துக் கொண்டே, “குளிச்சிட்டு வாம்மா, சாப்பிடலாம்” என்றேன்.
“சரவண பவன்ல ப்ரேக்ஃபாஸ்ட், ஓகேயா?” என்று கட்டை விரலை உயர்த்தினாள். “ஒகே” என்றதும் ஒரு ஹை ஃபைவ் கொடுத்து வீட்டுக்குள் ஓடினாள். படபடக்கும் இதயத்தோடு ஹாலில் காத்திருந்தேன். அப்சரஸ் மாதிரி அழகாக சேலையுடுத்தி அளவான மேக்கப்புடன் அவள் என்னருகில் வந்து நின்ற போது எனக்குள் கிளர்ந்த உணர்ச்சிகளை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.
போகும் வழியில் பூக்கடையில் காரை நிறுத்தச் சொல்லி மல்லிகைப்பூ வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள். ஹோட்டலுக்குள் சென்று அமர்ந்ததும் சர்க்கரைப் பொங்கல் கேட்டாள். ஒன்றரை ஸ்பூன் பொங்கல் சாப்பிட்டு விட்டு அதை தள்ளி வைத்து விட்டு குட்டி இட்லி வேண்டுமென்றாள். சூடான சாம்பாரில் மிதந்த 14 இட்லி டிஷ் அவள் முன் வைக்கப் பட்டது. இரண்டை மட்டும் சாப்பிட்டு விட்டு “புரோட்டா சாப்பிடலாமா?” என்றாள். அதையும் ஒரு விள்ளல் தான் சாப்பிட்டாள். பிறகு இரண்டு கையையும் உயர்த்தி “போதும்” என்று திருப்தியாகச் சொன்னாள்.
“டீ” என்றாள் அடுத்து. டீ வந்தது. அரை கப் குடித்ததும் என் பக்கம் நகர்த்தி விட்டு “இதை நீயே குடிச்சிருப்பா. எனக்கு ஒரு சாக்லேட் ஐஸ்கிரீம் சொல்லேன்” என்றாள். அதை மட்டும் முழுதாக சாப்பிட்டு முடித்தாள்.
லேசாகப் பூத்திருந்த வியர்வையை அவள் நெற்றியிலிருந்து நான் துடைத்து முடிக்குமுன்னே, “டிநகர்ல ஷாப்பிங் பண்ணுவோமா?” என்று கேட்டாள். அவள் குழந்தைத்தனமான குதூகலம் என்னை சாவி கொடுத்த பொம்மையாய் இயங்க வைத்துக் கொண்டிருந்தது.
போகும் வழியில் ஒரு நகைக்கடையை பார்த்ததும், “ஸ்டாப்! ஸ்டாப்!” என்றாள். உள்ளே நுழைந்ததும் நேரே வளையல் பகுதிக்குச் சென்றாள். அந்த செக் ஷன் பொறுப்பாளரிடம் “ரூபி, எமரல்ட் ரெண்டும் சேர்த்து பதிச்ச மாதிரி வளையல் காட்டுங்கள்” என்றால். வெகு நிதானமாக, ரசனையோடு பரிசீலித்து ஒரு ஜோடி அகல வளையலை தேர்வு செய்தாள். காரில் ஏறியதும் அதை கையில் அணிந்து கொண்டு ரசித்துக் கொண்டே வந்தாள்.
திடீரென ஞாபகம் வந்தவளாய் “நம்ம அனிவர்சரி வருதுப்பா. இந்த வளையலுக்கு மேட்சாய் சேலை வாங்கிக் குடுப்பா.” அடுத்த ஸ்டாப் பட்டுச்சேலைக்கடை. பளிச்சென ஜரிகை புட்டாப் போட்ட சிகப்பு பார்டருடன் கூடிய பச்சை நிற சேலையை வாங்கினாள்.
அவள் முகத்தில் ஏறத் துவங்கிய அசதியைப் பார்த்து கவலை ஏறியது எனக்கு. “கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போமா, செல்லம்?” என்றேன்.
“பொழுதுக்கும் என்ன ரெஸ்ட் வேண்டியிருக்கு? இன்னும் கொஞ்சம் என்ஜாய் பண்ணிட்டு ஒரேயடியா ரெஸ்ட் எடுத்துக்கறேனே!” என்றாள் கள்ளங்கபடமில்லா குழந்தையாய். அனாயாசமாய் வார்த்தைகளுக்குள் வந்து உட்கார்ந்த அச்சானியத்தில் நான் அதிர்ந்து போனதை மறைத்துக் கொண்டு “அப்புறம் உன் இஷ்டம்” என்றேன்.
”அடுத்து எங்கே போகலாம்?” என்றபடி வானத்தைப் பார்த்து விரலால் கன்னத்தைத் தட்டியபடியே சப்தமாக யோசித்தாள்.
“ஹைய்யா! சில்ரன்ஸ் பார்க் போறோம்,” என்றாள் கருவளையம் தோன்றத் துவங்கிய விழிகளில் ஒளி மின்ன. அங்கே போனதும் பூத்துக் குலுங்கிய ஒரு மகிழம்பூ மரத்தடியில் இருந்த பெஞ்சில் போய் திருப்தியாய் உட்கார்ந்து கொண்டாள்.
“ஹ்ம்ம்ம்” என்று ஆழமாய் மூச்சை இழுத்தபடியே “எவ்வளவு சுகமான வாசனை! தேவலோகம் மாதிரியே இருக்கு!” ரொம்ப பரிச்சயமானவள் மாதிரி சொன்னதும் துணுக்குற்ற என் மனம் மௌனமாய் பிரார்த்தனை செய்தது.
அன்னாசிப்பழத் துண்டை கடித்துக் கொண்டு அங்கே விளையாடிக் கொண்டிருந்த துடிப்பான குழந்தைகளை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொன்டிருந்தாள்.
“பெண்குழந்தைங்க தான் ரொம்ப அழகு, ஒத்துக்கிறியாப்பா?”
“ஆமா, சந்தேகமேயில்லாம.”
“வாலிப வயசுலயும் பொம்பளதான் அழகு. கலைகள் எல்லாத்துக்கும் கரு, ஒத்துக்கிறியாப்பா?”
“ரொம்ப கரெக்ட்.”
“வயசான காலத்துலயும் பொம்பளதான் அழகு. வழுக்கைத்தல தாத்தாவயிருக்கிற உன்ன விட வெள்ளைத்தல பாட்டியா நாந்தான் அழகாயிருப்பேன், ஒத்துக்கிறியாப்பா?”
“ஆமாடி, பெரிய மனுஷி!” செல்லமாய் அவள் கன்னத்தில் தட்டினேன் தேர்ந்த நடிகனாய் என் வலியை மறைத்தபடி.
“ஒரு தாயா, தாரமா, மகளா, சகோதரியா, தோழியா ஒரு ஆம்பளையோட வாழ்க்கைய அர்த்தமுள்ளதா, அற்புதமானதா ஆக்குறவ ஒரு பொம்பளதான்.”
சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவள் தொடர்ந்தாள்.
“அப்புறம் ஏம்பா இந்த பெண் கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலையெல்லாம்? அத்தனை மட்டத்துலயும் நடக்குற அக்கிரமமாயில்ல இருக்கு! பிறக்க முன்னாலேயே அபார்ட் பண்றது, பிறந்த பச்ச மண்ண கள்ளிப்பால், நெல்லுமணி வச்சிக் கொல்றது.....அம்மம்மா.....இவங்களுக்கெல்லாம் கருடபுராணத்துல என்ன கொடூரமான தண்டனை காத்திருக்கோ?”
அவளுடைய ஆத்திரம் அடங்கவேயில்லை.
“அந்த மீசைக்கார பாரதி மட்டும் இதையெல்லாம் பாத்திருந்தா எப்படி பொங்கியிருப்பாரு! ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்’னு சூளுரைச்சவராச்சே!”
என் தங்கத்தின் ஆதங்கமான பேச்சுக்களை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன். களைப்புடன் என் தோளில் சாய்ந்து கொண்டிருந்தவள் முகத்தில் தீவிர சிந்தனை ரேகை ஓடியது. வாய் அனிச்சையாக நிலக்கடலையை மென்று கொண்டிருந்தது.
“இப்படியே போனா என்னாகும் தெரியுமா? கன்னா பின்னான்னு ஆண்-பெண் விகிதாசாரம் மாறிப் போயி எம்ப்ளாய்மென்ட் ஆபீஸ்ல பதிஞ்சிட்டு வருஷக்கணக்கா வேலைக்கு காத்திருக்கிற மாதிரி ஆம்பளைங்க மேரேஜ் ஆபீஸ்ல பதிஞ்சி வச்சிட்டு காத்துக் கிடைக்கணும் கல்யாணத்துக்கு.”
கண்ணை உருட்டி அவள் பேசிய விதமும் அவள் பேச்சில் தெரிந்த தீர்க்கதரிசனமும் என்னை கவர்ந்திழுத்தது.
“அப்புறம் கேளுப்பா. ஒருவனுக்கு ஒருத்திங்கிற அழகான முறையெல்லாம் சாத்தியப்படாம மகாபாரத திரௌபதி மாதிரி ஒரோருத்தியும் அஞ்சு புருசன கட்டிக்குவா.”
என்னையறியாமல் அவளுடைய அதீத கற்பனை என்னை முறுவலிக்க வைத்துவிட்டது.
“சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன், உனக்கு காமெடியா இருக்காப்பா? யோசிச்சிப் பாருப்பா, அல்லி ராணி மாதிரி ஒருத்தி அஞ்சி பேர ஓட ஓட விரட்டுனா அது நல்லாவா இருக்கும்? கற்பனை பண்ணவே சகிக்கல. காட்டுராஜாவா கர்ஜன பண்ணின சிங்கம் பூனைக்குட்டியா மியாவ்வுன்னு கத்தப்போகுது. இதுக்கு ரெடியா ஆம்பளைங்க? எப்பத்தான் விழிச்சிக்கப்போறீங்க?”
“கூல்மா! ஏன் அனாவசியமா என்னென்னவோ கற்பனை பண்ணுற?”
“இதுதான் நடக்கும், நான் சொல்றேன், நம்புப்பா! சேவல் கூவித்தான் பொழுது விடியுது, பொட்டக்கோழி கொக்கரிச்சி இல்ல. இயற்கையில, இறைவன் படைப்புல இப்படியிப்படின்னு  இருக்குற நியதியா மாத்துனா அழிவுதான் நடக்கும்! கொழுகொம்பா கணவனும், அவனச் சுத்தி அணைச்ச கொடியா மனைவியும் வாழுற இல்லறத்தின் அழகுக்கு ஈடு இருக்காப்பா?”
இந்த இருப்பத்தியோராம் நூற்றாண்டில் இப்படி ஒரு பெண்ணைப் பார்த்து பிரமித்து நின்றேன்.
“ஆங் .... கணவன மதிச்சி வாழுற மனைவி தோத்ததா சரித்திரமே இல்லப்பா! சாமியக் கூட கும்பிடாம புருசன கும்பிட்ட பொண்ணு ‘பெய்’னு சொன்னா மழை பெய்யுமாம் தெரியுமா?”
“மழை பெய்யுமா, பெய்யாதான்னு எனக்கு தெரியாது. ஆனா அப்படி சொன்னவர் மேல ‘ஆணாதிக்கவாதி’ங்கற முத்திரை விழுந்திருக்குன்னு மட்டும் தெரியும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
“அது இந்த சமுதாயத்துக்கு கை வந்த கலைதானே! நல்லது சொல்ற யாரையும் கொடுமைப்படுத்தாம விடுறதில்லையே! அந்த சாக்ரடீஸ விஷம் கொடுத்து சாகடிக்கலையா? நம்ம பாரதிய ஒதுக்கி வைக்கலையா? அதுனாலயெல்லாம் அவங்க மகாத்மியம் குறைஞ்சா போச்சி?”
பெண் சுதந்திரம் என்ற பெயரில் கண்டதுக்கெல்லாம் பெண்ணியவாதிகள் கொடி பிடித்து, கூச்சல் போட்டு, போராடிக் கொண்டிருக்கும் கலிகாலத்தில் என் செல்லம் என் கண்ணுக்கு சொக்கத்தங்கமாய் தெரிந்தாள். என் அதிர்ஷ்டத்தை எண்ணி பூரித்த வேளையில் கூடவே விரக்தியும் வந்து அழுத்தியது.
தெளிவான சிந்தனையும், திடமான செயல்திறனும் உடைய இவளை மாதிரி வழிகாட்டிகள் இல்லாமல்தானே சமூகத்தில் ஒழுக்கக்கேடுகளும், குற்றங்களும் பெருகிக் கொண்டே போகின்றன. அடக்க முடியாத ஏக்கத்தில் என் நெஞ்சு விம்மியது. அவளது கருத்துக்கள் எண்ணற்ற விஷயங்களை என் சிந்தனையின் கவனத்திற்கு இழுத்து வந்தன. லட்சியவாதத்தில் முதிர்ந்திருந்தாலும் அனுபவத்தில், உலகஞானத்தில் சிறுபிள்ளையாய் இருப்பவளைப் பற்றி எண்ணிப் பார்த்தேன்.
இன்றைய சமுதாயத்தில் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டிருக்கும் கேடான போக்குகளை, நாட்டுக்குள் இறக்குமதியாகிக் கொண்டிருக்கும் நாகரிக கூத்துக்களை இந்த கோபக்காரி அறிந்திருக்கவில்லை.
விடிய விடிய ஆண் நண்பர்களுடன் குடித்துக் கும்மாளமிடுகிற, எங்கெல்லாம் போனோம், என்னவெல்லாம் செய்தோம், எவனுடனெல்லாம் படுத்துறங்கினோம் என்றெல்லாம் சுத்தமாய் நினைவுபடுத்த முடியாத “தெளிவான” “கன்னி”கள் நம் நாட்டில் பெருகி வருவதை இவள் அறிவாளா?
கல்வி கற்று பட்டம் பெறுவதற்காக வந்த மாணவ மாணவியரின் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற அளவில்லா “கட மையுணர்ச்சியோடு” பல்கலை கழக வளாகத்துக்குள்ளேயே ஆணுறை விற்கும் தானியங்கி யந்திரத்தை நிறுவிய நிர்வாகத்தைப் பற்றி என் சின்ன தேவதை அறிந்திருக்க மாட்டாள். மெல்லியலாள் இவள் இத்தகைய கலாச்சார அதிர்ச்சியை தாங்குவாளா?
கல்யாணம் ஆனவுடன் எம்ஜிஆர் மாதிரி “எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்” என்றெல்லாம் கனவு காண முடியுமா? அவன் மணந்த அம்மணியின் அலுவலகப் பதவி முன்னேற்றத்திற்கு இடைஞ்சலென அவள் பிள்ளை பெறுவதையே விரும்பாது போனால் என்ன செய்வான் கல்யாண ஒப்பந்தத்தில் ஏமாந்த கணவன்? தாய்மையை வெறுக்கும், மறுக்கும் பெண் தலைமுறை உருவாகுவதை தாங்குவாளா என் பிரிய சகி? தாய்மை பெண்மையிலிருந்து அந்நியப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய பரிணாம வளர்ச்சியை இவளால் ஜீரணிக்க முடியுமா?
கல்யாணமும் வேண்டாம், கால்கட்டும் வேண்டாம், சேர்ந்து வாழ்வோம், ஓடும் வரை வண்டி ஓடட்டும், முடியாத கட்டம் வரும் பொது சுமுகமாக பிரிந்து செல்வோம் என்ற ஏற்பாடெல்லாம் என் கண்ணம்மாவின் ரத்தத்தை கொதிக்க வைத்துவிடுமே!
பாரதியின் கண் கொண்டு பார்க்கும் இவளுக்கு இன்றைய புதுமைப் பெண்ணை பாரதி கனவு கண்ட பெண்ணாய் அடையாளம் காண முடியுமா? தான், தன சுகம் மட்டுமே பிரதானமென எண்ணும் புதிய தலைமுறை பெண்களை, ஒழுக்கக்கட்டுபாடுகளையும், தாம்பத்திய நெறிகளையும் காற்றில் பறக்கவிட்ட திசை மாறிய பறவைகளை திருத்த முயன்று தோற்பாளா? அவள் தோல்வியில் துவள்வதை காணத்தான் எனக்கு சகிக்குமா? இந்த துன்பங்களிலிருந்து அவளை காப்பாற்றுவது இறைவனின் இணையற்ற கருணைதானோ என்று கூட சிந்திக்கத்துவங்கினேன். நாகரிக உலகின் அவலங்களை, அசிங்கங்களை, அநீதிகளை, அதர்மங்களை அறிந்து கொள்ளாமலே மறைந்துவிடுவது விரும்பத்தக்க விடுதலைதானோ?
தலையை உலுக்கி என் மன விசாரங்களை உதற முயன்றபடி அவள் பக்கம் என் கவனத்தை திருப்பினேன். குல்ஃபி ஐஸ்கிரீமை மிகவும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பிறகு திடீரென ஞாபகம் வந்தது மாதிரி “அடடா, நேரம் போனதே தெரியலப்பா, இருட்டுறதுக்குள்ள பீச்சுக்குப் போணும்பா” என்று எட்டி நடை போட்டாள்.
அயராமல் ரசித்து நிமிடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தவளை பார்க்கப் பார்க்க என் பயமும் அயர்வும் கூடிக் கொண்டே போனது. மௌனமாய் திருவான்மியூரை நோக்கி காரை செலுத்தினேன்.
கடலைப் பார்த்ததும் குழந்தையைப் போல் குதூகலமாகி விட்டாள். இது ஒவ்வொரு தடவையும் வாடிக்கையாய் நடப்பது.
“இந்தக் கடலைப் பாத்துக்கிட்டு, நுரையீரல் முழுக்க உப்புக் காத்த சுவாசிச்சிக்கிட்டு சுற்றுச்சூழலோட ஐக்கியமாகுற சுகத்துக்கு ஈடே இல்லப்பா.” இதுவும் இவள் வழக்கமாய் சொல்வது.
சுண்டலை கொறித்துக் கொண்டே சிறிது தூரம் கடல் விளிம்பில் கால்களை அலைகள் தொட்டுத் தொட்டு செல்வதை அனுபவித்துக் கொண்டே நடந்தோம். இதுதான் எங்கள் பழக்கம்.
ஏனோ வழக்கத்தை விட சீக்கிரமே நடையை முடித்துவிட்டு தண்ணீரை விட்டு கொஞ்சம் தள்ளி மணலில் உட்கார்ந்து கொண்டாள். அவள் அருகில் சென்று அமர்ந்த என் தோளில் சாய்ந்து கொண்டு கடலுக்குள்ளிருந்து தகதகக்கும் தாமிர தாம்பாளமாய் பௌர்ணமி நிலவு வெளி வந்ததை பரவசமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏறிய நிலவு உருவம் சிறுத்து வெள்ளித் தட்டாய் மாறி கடல் மேல் மாயாஜாலம் செய்து கொண்டிருந்தது.
இயல்பாகவே கற்பனை வளம் நிறைந்தவளுக்கு கடல் மாதிரியான பெரிய இயற்கை சக்தி அவள் உள்ளேயிருக்கும் படைப்பாளியை தட்டி எழுப்பத் தவறுவதேயில்லை. பிரவாகமாய் ஓடின அவள் அழகிய சிந்தனைகள்.
“அமைதியா கரையத் தொட்டுத் தொட்டு விளையாடுற இந்த கடலுக்குள்ள எத்தனை ரகசியம்! எத்தனை புதையல்! எத்தனை ஜீவராசிகள்! நாகரிகத்தின் உச்சத்தில் பரிமளித்த எத்தனை நகரங்கள இந்தக் கடல் இழுத்துக்கிட்டு போய் உள்ள வச்சிக்கிட்டது! எத்தனை கப்பல்கள இது முழுங்கிச்சி! ஆக்ரோஷமா, சுனாமியா சீறிக்கிட்டு வந்து ஊழியாட்டம் போட்ட சம்பவங்கள்தான் எத்தனை!”
என் மௌனமான அங்கீகாரத்தைத் தவிர வேறு பதிலை எதிபார்க்காதவளாய் தொடர்ந்தாள்.
“பூமி முழுசையும் தன்னோட கரங்களால அணைச்சிக்கிட்டிருக்கிற கடலரசன் ஏன் இவ்வளவு கர்வமா இருக்கான் தெரியுமா? அத்தனை நதிப்பெண்களும் தீராத தாபத்தோட காடு மலை தாண்டி, குதிச்சி, ஓடி, தவழ்ந்து வந்து இறுதி மோட்சமா கடல்ல சங்கமிக்கிறதாலதான். கல்கண்டு மாதிரி இனிக்கிற ஆத்துத் தண்ணி கடல்ல கலந்த பிறகு உப்புக்கரிக்குதே, இது ஆச்சரியமில்லையா? தானா விரும்பி சுயத்தை இழக்குற இந்த நிகழ்ச்சி என்ன சொல்லுது? ஆனந்தமயமான தாம்பத்யத்தோட அடிப்படை சூட்சுமத்தையில்ல இது விளக்குது! செம்புல பெய நீர் போல ஆடவன் நெஞ்சில் அன்பால ஐக்கியமாகிறது பெண்ணியல்புன்னு சொன்ன சங்கப் புலவர் ஏன் உப்புநீர்ல ஐக்கியமான நதிநீரைப் பத்தி பாடல?”
கவித்துவமும், தத்துவமுமாய் அவள் பேசப் பேச ஏதோ ஒரு அமானுஷ்ய சூழலுக்குள் உறிஞ்சியிழுக்கப்பட்டது போல் உணர்ந்தேன். மகுடியின் வசியத்தில் ஆடும் நாகமாய் என் மனம் சொக்கிக் கிடந்த அதே நேரத்தில் என் அறிவின் ஓரத்தில் திகுதிகுவென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
பட்டை தீட்டிய வைரமாய் மின்னியது அவள் மேதாவிலாசம். எப்படி இப்படி ஒரு ஜோதியாய் ஒளிர்கிறாள்? அணையப்போகும் தீபம் என்பதாலா? நெஞ்சை பிசையும் என் வேதனையை அவள் உணரவில்லை. அருகில் இருந்தும் தூரத்தில் இருப்பவளாய் மாறியிருந்தாள்.
மெய்மறந்த நிலையில் அமர்ந்திருந்த அவள் சிந்தனைகள் எதோ வேறு தளத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.
“அமரக் காதலர்கள் எல்லோருமே இணையாமலே, அனுபவிக்காமலே, இளவயசிலேயே ஏன் மாண்டு போறாங்க? ரோமியோ-ஜூலியட்டும், சலீம்-அனார்கலியும், அம்பிகாபதி-அமராவதியும் மீண்டும் மீண்டும் பிறந்து பிறகு மாண்டு போகும் ஒரே ஜோடிகள்தானா? காலநதிக் கரையில் காதலர்கள் ஆன்மாக்கள் நித்தியமா நின்னுகிட்டு இருக்க அவங்க உடல்கள் மட்டும் மறுபிறவி எடுத்துக்கிட்டேயிருக்கோ? படைப்பாளியின் தீராத விளையாட்டோ இது?”
எதோ கனவுலகில் மிதப்பவள் போல் தோன்றிய அவள் வலது கையால் கடல் மணலை அள்ளி பிறகு மூடிய கையை குவித்து அள்ளிய மணலை மெல்லிசாய் ஒழுகவிட்டாள். திரும்பத் திரும்ப யந்திரத்தனமாய் மெய்மறந்து தன்னிச்சையாய் இந்த சிறு குழந்தை விளையாட்டை செய்து கொண்டிருந்தாள்.
எரிமலை குழம்பாய் என் உணர்வுகள் கொதித்துக் கொண்டிருந்த நிலையில் அவள் செய்கை எனக்குள் விபரீத கற்பனையாய் மணல் கடியாரத்தை நினைவு படுத்தியது. காலம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற ஒரே நினைவு சம்மட்டியாய் தாக்கியது.
அவளுடைய எண்ணப்பட்ட நாட்கள் மணித்துளிகளாய் மாறி கரைந்து கொண்டிருந்தனவோ? பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அவள் கை ஓய்ந்தது. பேச்சும் நின்று போயிருந்தது. வானத்தில் ஒரு நட்சத்திரம் மின்னி விட்டு மறைந்தது. நான் பயந்து கொண்டேயிருந்தது நடந்தே விட்டது.
கிளையைப் பிரிந்து காற்றில் பறந்து செல்லும் சருகாய் என்னவள் மாறிவிட்ட உண்மை உரைத்தது. என் பிரிய சகி எனக்கு டாட்டா காட்டி விட்டு பிரபஞ்சத்தில் அங்கம் வகிக்க சென்றுவிட்டாள்.
இடைவிடாமல் அலைமோதிக் கொண்டிருந்த என் மனம் மெல்ல அமைதி அடையத் தொடங்கியது. துக்கமும் சாந்தியும் இவ்வளவு நெருக்கமாய் பிணைக்கப்பட்டிருக்குமா?
காலநதிக் கரையில் காத்திருக்கும் என் காதல் மனையாளை நான் சேரும் நாளே விரைந்து வா!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community