மூட்டு வலி
ஐம்பது வயது வரை அதிக தடங்கலில்லாமல் சீராக ஓடிய
வண்டி அதற்குப் பின் சுணங்கத் தொடங்கிவிடுகிறது. முன்பு குதிங்கால் வலி பற்றி, அதை
வெல்ல எளிய பயிற்சி இருப்பது பற்றி சொல்லியிருந்தேன். இப்போது மூட்டு வலியின்
முறை!
குழந்தையின் குதூகலத்தோடு குடும்பத்துடன்
அசராமல் தீம் பார்க்கில் சுற்றி விட்டு வந்த மறுநாள் முழங்கால் இரண்டிலும் நல்ல
வலி. வழக்கமான களிம்பை தடவிப் பார்த்தும், வழக்கமான வலி மாத்திரை சாப்பிட்டும் வலி
பிடிவாதம் காட்டவே வேறு வழியில்லாமல் எலும்பு டாக்டரை பார்த்தேன். காலை பரிசோதித்த
உடனே ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ் என்றார். பாதிப்பின் அளவை அறிந்து கொள்ள எக்ஸ்ரே
எடுத்ததில் மிகவும் கடுமையான (severe) பாதிப்பு என்று தெரிய வந்தது. மூட்டு எலும்புகளுக்கு
இடையிலுள்ள ஜவ்வு போன்ற சமாசாரம் தேய்ந்து கரைந்து காணாமல் போயிருந்தது! உராய்வை
தடுத்த இடையிலிருந்த ஸ்பான்ஜ் போன்ற வஸ்து இல்லாமல் போகவே எலும்புகள் உராய்ந்ததால்
வலி ஏற்பட்டுள்ளது. எப்போது, எத்தனை வருடமாய், என்ன காரணத்தால் இப்படி ஆனது என்று
விசாரித்தேன். 65 வயதில் அசட்டுத்தனமாக நடந்து காலை கெடுத்துக் கொண்டேனோ
என்று பதறினேன். டாக்டர் மிகவும் கனிவாக, ஆறுதலாக எனக்கு இது 60 வருடமாக சிறிது சிறிதாக நடைபெற்ற தேய்மானம்
என்றார்- நரை போல மிக சாதாரணமான வயதாவதின் அறிகுறி/மாற்றம் இது என்றார். தவிர்க்க
முடியாதது; திரும்ப ஜவ்வு வளரவே வளராது(வளரும் என்று சொல்லி ஏமாற்றும் எத்தர்களை
நம்பவேண்டாம் என்றார்! ஊசி மூலம் ஜவ்வை செலுத்தும் முறையும் தற்காலிகமானதாம்!);
ஆனால் கவனமான வழிமுறைகளால் இயல்பான, சிரமமில்லாத வாழ்வை தொடரலாம் என்றார். மிகவும்
அபூர்வமாக தவிர்க்க முடியாத நிவாரணமாக, வேறு எவ்வாறும் வலி குறையாமல் இருந்தால்
பயப்படாமல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை தாராளமாய் செய்து கொள்ளலாம் என்றார்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு சகஜமாக நடமாடி வாழலாம் என்றார்- சிலருக்கே இது
தேவைப்படுமாம். வலியை போக்க ஒரு வாரத்திற்கான மாத்திரைகளும், தடவ களிம்பும்
கொடுத்தார். ஒரு வாரம் பிசியோதெரபி செய்ய சொன்னார். தொடர வேண்டிய சிறந்த
உடற்பயிற்சி நடப்பது என்றார். காலுக்கு உரை அணிந்து கொண்டு நடக்கும்படி
அறிவுறுத்தினார்.
படிப்படியாக வலி குறைந்தது. மிச்சமிருந்த பீதியை
பிசியோதெரபி செய்த பெண்மணியின் பொறுமையான அறிவுரைகள் தீர்த்தன. சொச்ச நாளை மூட்டு
வலியுடன் மூலையில் முடங்கிக் கிடந்து நடமாட்டமின்றி நொந்து சாகப் போகிறேன் என்று
எக்கசக்கமாய் பயந்துபோயிருந்தேன். பரிந்துரைக்கப்பட்ட மிக எளிய இரண்டு
உடற்பயிற்சிகள்: 1. கட்டிலில் கால்களை நீட்டி அமர்ந்து கை விரல் நுனியால் கால்
விரல் நுனியை தொட்டு ஐந்து வரை எண்ணி பின் நிறுத்தவேண்டும். ஐந்து முறை இதை செய்யவும்.
2. முன்பு அமர்ந்த நிலையிலேயே கால் பாதங்களை உள் பக்கமாய்
வளைத்து ஐந்து வரை எண்ணி பின் நிறுத்தவேண்டும். ஐந்து முறை இதை செய்யவும். 3. நீட்டிய முழங்கால்களுக்கு அடியில் ஒரு டவலை
வைத்து அதை முழங்கால்களால் ஐந்து முதல் பத்து தடவை வரை அழுத்த வேண்டும். இதை
தினமும் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை செய்யலாம்.
பொதுவான பல அறிவுரைகளும் சொன்னார் அந்த பெண்மணி.
பனிக்கட்டியால் அதை தொடர்ந்து சுடு தண்ணீரால் ஒத்தடம் கொடுப்பது நலம். தரையில்
அமர்வது, தணிவான இருக்கைகளில் அமர்வது, மாடிப்படி ஏறுவது இவற்றை தவிர்க்க
வேண்டும். வீட்டிற்குள்ளும் MCR செருப்பு அணிந்து
நடப்பது நல்லது. தொடர்ச்சியாக மணிக்கணக்கில் ஒரே இடத்தில்/நாற்காலியில்
அமர்ந்திருக்காமல் நடுவே எழுந்து நடந்து இடைவேளை கொடுக்க வேண்டும். தினசரி
இல்லாவிட்டாலும் வாரத்தில் நாலைந்து நாட்களாவது நடைப்பயிற்ச்சி செய்ய வேண்டும்.
அப்போது முழங்கால் உறை அணிந்துகொள்ள வேண்டும்.
பலரிடமும் விசாரித்ததில் ஐம்பது வயதுக்கு மேல்
தலையெடுக்கும் இந்த பிரச்சினை அனைவரையும் பாதித்திருப்பது தெரிய வருகிறது.
பாதிப்பின் தீவிரத்திற்கு தகுந்தபடி கவனமாய் நடந்து கொண்டால் முடங்காமல் முனகாமல்
வாழ்ந்து முடிக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
No comments:
Post a Comment