பசியாற்றி பசியாறிய அன்னபூரணிக்கு
வந்திருக்கு கடுஞ்சோதனை
பிரபஞ்சமாய் நிறைந்து நின்ற சக்திக்கு
புள்ளியாய் நிற்கச் சொல்லி போதனை
தன்னை இரண்டாமிடத்தில் நிறுத்தி
முதலிடத்தைப் பிடித்துக் கொண்ட சமர்த்தி
இனி ஆவாள் கூறுகெட்ட மடச்சி
இறக்குமதியாகுது புதியதோர் சதி
உப்பாய் சர்க்கரையாய் கரைந்து கலந்து
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பை ருசியில் உணர்த்தியவள்
கரையாமல் கலக்காமல் படைப்பாள்
வாய்க்கு விளங்காத விபரீத சமையல்
தனக்குள் உலகை அடக்கியவள்
தான் மட்டுமே உலகம் என்பாளாம்
தேர் சக்கரம் ஓட இன்றியமையாத அச்சாணி
தனியே கழன்று சென்று என்ன சாதிக்கும்
தேர் தான் எப்படி ஓடும்
அங்கமாய் இருந்து அனைத்துமாய் இயங்குபவள்
தனி அங்கமே உலகமென மயங்குவாளோ
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி
சுமுகமான சுகமான உறவுகளை உதறி
உன்னைப் பார் உன்னை மட்டும் முதலில் பார்
என்று உடுக்கடிக்கும் கூட்டத்தால் சிதறி
தொலைந்த கூட்டுக் குஞ்சுகள் பதறி
உருவாகும் தான்தோன்றி உலகில் இன்னும்
பார்க்கக் கொடுத்து வைத்தது என்னென்னவோ
No comments:
Post a Comment