இணைந்தே இருக்கும் இனியவளே
நிழலாய் நடக்கும் நல்லவளே
காப்பியில் சீனியாய் கலந்தவளே
குழம்பில் உப்பாய் கரைந்தவளே
வெயிலும் மழையும் பொருட்டில்லை
குடையாய் நீ கூடவே இருக்கையிலே
பேசியே கழிந்த பொழுதுகள்
பேசாமல் களித்த மௌனங்கள்
கடந்தோம் நாம் நெடுந்தூரம்
அடைவோம் அந்த தொடுவானம்
படித்தோம் புதிய இலக்கியம்
படைத்தோம் நீண்ட காவியம்
சேர்ந்தே சிந்திக்கிறோம்
சோர்வின்றி விவாதிக்கிறோம்
விளக்கவியலா சுகந்தானோ
விளங்காத வரம் இதுவன்றோ
சாத்திரமில்லா ஓர் உறவு
சாத்தியமானது பல கனவு
பிரிவே இல்லாத பந்தம்
பிரியம் மிகுந்த சொந்தம்
குழந்தையாய் தவழ்ந்த போதிருந்து
கூனுடன் கோலுடன் தள்ளாடும் வரை
கூடவே இருக்கும் துணையே
தனிமையெனும் தோழியே
கவிஞர் பாடிய நானும்
ஞானியர் தேடிய நானும்
சாமியார் உரைக்கும் நானும்
சாமான்யர் அறியாத நானும்
முகத்தின் இரண்டு கண்களாய்
முட்டையின் மஞ்சள் வெள்ளை கருவாய்
உறைகின்றோம் ஒன்றாய் ஓருடலில்
திளைக்கின்றோம் பேரின்ப தேடலில்
களைப்பில்லை சலிப்பில்லை
நானும் நானும் போல் வேறில்லை
No comments:
Post a Comment