Wednesday, February 23, 2022

தருவாயா இறைவா

IndiBlogger - The Indian Blogger Community தருவாயா இறைவா தினமும் இதே நிழலை
காலையில் கொஞ்ச நேரம் கொஞ்சல்
தோட்டத்து மஞ்சள், சிகப்பு, வெள்ளை, ரோஸ்
மலர்கள், பல வித பச்சை நிறத்து இலைகள்
கைபேசியில் உலகை சுற்றி பறந்து வர
சுற்றமும் நட்பும் நலமென நிம்மதியாய்
காயும் கனியும் பருப்புகளும் கொறித்து
குட்டி தூக்கம் வாசிப்பு பந்தங்களின் விசாரிப்பு
கோபப்பறவை விளையாட்டில் குழந்தையாகி
பள்ளித்தோழிகளுடன் ஜுமில் கலந்துரையாடி
மலையாய் பாக்கியங்கள் ஓங்கி நின்றிட
மன உடல் வருத்தங்கள் ஓடி ஒளிந்து கொள்ள
வாடவோ தேடவோ தேவையில்லாத மோனம்
ஒளியில் குளிக்கும் ஆவி பாடாதோ கானம்

Monday, February 21, 2022

பந்தம்

IndiBlogger - The Indian Blogger Community பந்தம்
இணைந்தே இருக்கும் இனியவளே
நிழலாய் நடக்கும் நல்லவளே
காப்பியில் சீனியாய் கலந்தவளே
குழம்பில் உப்பாய் கரைந்தவளே
வெயிலும் மழையும் பொருட்டில்லை
குடையாய் நீ கூடவே இருக்கையிலே
பேசியே கழிந்த பொழுதுகள்
பேசாமல் களித்த மௌனங்கள்
கடந்தோம் நாம் நெடுந்தூரம்
அடைவோம் அந்த தொடுவானம்
படித்தோம் புதிய இலக்கியம்
படைத்தோம் நீண்ட காவியம்
சேர்ந்தே சிந்திக்கிறோம்
சோர்வின்றி விவாதிக்கிறோம்
விளக்கவியலா சுகந்தானோ
விளங்காத வரம் இதுவன்றோ
சாத்திரமில்லா ஓர் உறவு
சாத்தியமானது பல கனவு
பிரிவே இல்லாத பந்தம்
பிரியம் மிகுந்த சொந்தம்
குழந்தையாய் தவழ்ந்த போதிருந்து
கூனுடன் கோலுடன் தள்ளாடும் வரை
கூடவே இருக்கும் துணையே
தனிமையெனும் தோழியே
கவிஞர் பாடிய நானும்
ஞானியர் தேடிய நானும்
சாமியார் உரைக்கும் நானும்
சாமான்யர் அறியாத நானும்
முகத்தின் இரண்டு கண்களாய்
முட்டையின் மஞ்சள் வெள்ளை கருவாய்
உறைகின்றோம் ஒன்றாய் ஓருடலில்
திளைக்கின்றோம் பேரின்ப தேடலில்
களைப்பில்லை சலிப்பில்லை
நானும் நானும் போல் வேறில்லை

Thursday, February 10, 2022

நவீன சுயம்வரம்

IndiBlogger - The Indian Blogger Community நவீன சுயம்வரம்

(கடந்த ஞாயிறன்று எங்கள் குடியிருப்பின் நற்பணி மன்றத்தின் துவக்க விழா கொண்டாட்டத்தில் எங்கள் பக்கத்து வீட்டுக்காரரின் இரு மகள்கள் - சுரேகா, விபுலா, கல்லூரி மாணவிகள்- எழுதி, இயக்கி, நடித்த நாடகம்)

Narrator: ராஜா காலத்திலெல்லாம் பொண்ணுங்கதான் அவங்களுக்கு ஏற்ற மாப்பிள்ளையை select பண்ணினார்கள் . ஆனால் இப்ப காலம் மாறி பையன்கள் தான் பெண் பார்க்க வர்றாங்க. அந்தக் காலத்து சுயம்வரம் திரும்பவும் இந்தக் காலகட்டத்துக்கு வந்துச்சுன்னா எப்படி இருக்கும்னு ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை இது உங்களுக்காக.

மாப்பிள்ளை வீட்டில் இப்ப என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.

காட்சி 1

மாப்பிள்ளையின் அம்மா: டேய், கல்யாணம், இன்னைக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கப்பா. இன்னைக்கு கொஞ்சம் அடக்கம் ஒடுக்கமா இரு.

கல்யாணசுந்தரம்(மாப்பிள்ளை): இதையே எத்தனை தடவை சொல்வீங்கம்மா? ஏற்கனவே பத்து பொண்ணுங்க பார்த்துட்டுப் போய்ட்டாங்க. பழகிப் போச்சும்மா.

அம்மா: உனக்கு கல்யாணசுந்தரம்னு பேரு வச்சாலும் வச்சேன் கல்யாணமே ஆகமாட்டேங்குது!

மாப்பிள்ளை: ஏம்மா புலம்பிக்கிட்டே இருக்கீங்க?

மா.அம்மா: அப்புறம் என்னப்பா செய்ய? இனியாவது நல்ல காலம் வருதான்னு பார்க்கலாம்.

சகாதேவன்(மாப்பிள்ளையின் தம்பி): அண்ணா, இந்த மோதிரத்தை எடுத்து போட்டுக்கோ.

மாப்பிள்ளை: சரிடா.

மகாதேவன்(மற்றொரு தம்பி): அண்ணா, உன் chain-ஐ எடுத்து வெளியே போடு. அப்பத்தான் அழகா இருப்பே.

மாப்பிள்ளை: சரிடா. (தன் செயினை வெளியே எடுத்து சரி செய்து கொள்கிறார்)

அம்மா (மாப்பிள்ளையின் தம்பிகளைப் பார்த்து): வாசலில் நின்னு பொண்ணு வீட்டுக்காரங்க வராங்களான்னு பாருங்க.

காட்சி 2

(பெண் வீட்டார் காரில் வந்து இறங்குகின்றனர்)

மா.தம்பி: அம்மா, அவங்க வந்துட்டாங்கம்மா.

அம்மா: சரிடா, வர்றேன். அவங்கள உள்ளே வரச் சொல். கல்யாணம், ரெடியாயிட்டியா? அவங்க வந்துட்டாங்க.

மாப்பிள்ளை: ரெடி ஆயிட்டே இருக்கேம்மா.

அம்மா: (பெண் வீட்டார்களை பார்த்து) வாங்க, வாங்க. உட்காருங்க. fanஐ- போடு.

நிம்மி(மணப்பெண்): ஒரு AC கூட இல்லையா? It is too hot, mummy!

பெண்ணின் அம்மா: நாங்கள் எப்போதும் AC-யில் தான் இருப்போம்.

மா. அம்மா: இந்த சம்பந்தம் முடிஞ்சா AC-யை மாட்டிவிடுவோம்.

(அம்மாவும், மகளும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்கிறார்கள்)

பெ. அம்மா: சீக்கிரம் பையனைக் கூட்டிட்டு வாங்க. நாங்க நிறைய appointments வச்சிருக்கோம்.

மா.அம்மா: சரிங்க. சகாதேவன்! போய் அண்ணனைக் கூட்டிட்டு வா.

(காப்பியை பையனிடம் கொடுத்து அவர்களிடம் கொடுக்கச் சொல்கிறாள். கல்யாணம் தலைக் குனிந்து கொண்டே காபியை நீட்டுகிறார்).

பெ.அம்மா: பையனோட அப்பா எங்கே?

மா.அம்மா: அவருக்கு கூச்ச சுபாவம். உள்ளே பஜ்ஜி போட்டுக்கிட்டு இருக்காரு.

பெ.அம்மா: சரி, நிம்மி, பையன்கிட்ட என்னமும் கேட்கணும்னா கேளு.

பெண்: சரிம்மா. (மாப்பிள்ளையை பார்த்து) என்ன பண்ணறீங்க?

மாப்பிள்ளை: degree முடிச்சிட்டு இரண்டு வருசமா training எடுத்திக்கிட்டு இருக்கேன்.

பெ. அம்மா: என்ன training?

மாப்பிள்ளை: என் அப்பாகிட்டேர்ந்து வீட்டு வேலை, சமையல் இவற்றைதாங்க படிக்கிறேன்.

பெ. அம்மா:Very good!

பெண்: பாட்டு பாடத் தெரியுமா?

மாப்பிள்ளை: சுமாரா பாடுவேங்க.

மாப்பிள்ளை: (Mirinda advertisement போல) அம்மாடி, ஆத்தாடி, உன்னை எனக்கு தர்றீயாடி, நீ பாதி, நான் பாதி சொல்லிப்புட்டா.. அரச்ச மாவ அரைப்போமா, துவச்ச துணிய துவைப்போமா(என்று பாடியபடியே ஆட ஆரம்பிக்க, பெண், மாப்பிள்ளையின் தம்பிகள் எல்லோருமாய் ஆட ரம்பிக்கிறார்கள்)

பெ.அம்மா: Stop it!

சகாதேவன்: எவ அவ?

பெண்: I like this chap, mom!

பெ.அம்மா: சரி. உன் conditions-ஐ சொல்லு. சரி வருதான்னு பார்க்கலாம்.

பெண்: (கையை சொடுக்கியபடி) conditions எல்லாம் ஒழுங்கா கேட்டுக்கோங்க.

condition No1: காலை 5 மணிக்கு எழுந்திடணும்.

condition No2: என்னை 6 மணிக்கு எழுப்பும் போது தலைக்கு குளிச்சிட்டு bed coffeeயோடதான் முன்னாடி வந்து நிக்கணும். ஆமா, உங்களுக்கு filter coffee போடத் தெரியுமா?

மாப்பிள்ளை: பேஷ், பேஷ். ரொம்ப நன்னா போடுவேன்.

பெ.அம்மா: ரொம்ப முக்கியமான condition-ஐ விட்டுட்டியே!

பெண்: 3: நான் போடுற menu-க்கு ஏத்த மாதிரிதான் சமைக்கணும். சமையலெல்லாம் எப்படி?

மாப்பிள்ளை: நான் north Indian, chinese, south Indian எல்லாம் சமைப்பேன். எல்லாம் 2 வருசம் அப்பாகிட்ட training எடுத்ததுதான் . தெரியாததை படித்துக் கொள்கிறேன்.

பெ.அம்மா: இந்த conditions எல்லாம் சரி. எவ்வளவு போடுவீங்க? 50 பவுன் நகை போட்டு ஒரு கார் குடுத்துடணும்.

மா.அம்மா: எனக்கு கல்யாணத்துக்கு பிறகு ஏழு பசங்க இருக்காங்க. இவனக் கரை சேர்த்தாதான் மத்தவங்களுக்கும் செய்ய முடியும். கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

பெ.அம்மா: சரி, 30 பவுன் போட்டுருங்க.

மா.அம்மா: சரிங்க. நாங்க செய்து வைக்கிறோம்.

காட்சி 3

(திருமணத்திற்கு பிறகு)

கல்யாணம் அவனுடைய தாயின் பக்கம் நின்று கண்ணை கசக்கிக் கொண்டிருக்கிறார்.

மகாதேவன், சகாதேவன்: அண்ணா, எங்கள மறந்துடாத. எங்களை வந்து பாத்துட்டு போ.

மாப்பிள்ளை: சரிடா. நல்லா படிக்கணும். நல்ல பிள்ளைகளா இருங்க.

பெண்: உங்க பையனை கண் கலங்காம பாத்துக்கிறேன். நீங்க கவலப்படாதீங்க. உங்கள பாக்க வருசத்துக்கு ஒரு தடவ கூட்டிட்டு வர்றேன்.

(மணப்பெண் மாப்பிள்ளையைக் கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறாள்)
IndiBlogger - The Indian Blogger Community