உலக கவிதை தினத்திற்காக
அனுபவம்
புதுமை
அனுபவம் புதுமை
வரலாறு காணாத நிலைமை
ஒன்றானது உலக சமுதாயம்
ஒரிதயமாய் துடிக்குது மானிடம்
எல்லைகள் கடந்து
நாடுகள் தாண்டி
பரவுது நோயின் தீவிரம்
பதறுது கதறுது நெஞ்சம்
ஓங்கி உலாவுது உயிர் பயம்
ஒதுங்கி ஓடுது மத இன பாகுபாடு
ஓயாது உழைக்குது மருத்துவர் செவிலியர் குழாம்
ஒ போடுவோம் அந்த நடமாடும் தெய்வங்களுக்கு
இணையத்தின் சேவை
உணர்த்தும் நம் தேவை
தொட்டால் குத்தம் பட்டால் குத்தம்
தும்மினால் போச்சு இருமினால் போச்சு
புத்தியில் உறைக்குது பேணிடவேணும் சுத்தம்
பட்டபின் கற்றுக்கொண்ட பெரிய பாடம்
பகாசுர பசியில் நோய் அரக்கன்
பதுங்கி பரவும் பயங்கர கொடூரன்
பலிக்கவில்லை மருந்தும் மாயமும்
பலியாகுது மொட்டும் பிஞ்சும் கனியும்
பரவாமல் தடுப்பதே குறிக்கோளாய்
போராடும் மொத்த உலக மக்கள்
போர்க்கால நடவடிக்கைகள்
கூர் மதியுடன் தீட்டிய திட்டங்கள்
வெளி நடமாட்டம் கட்டுப்பாட்டில்
விடுமுறை விட்டாச்சு மாணவர்களுக்கு
வீட்டிலிருந்தே அலுவலக பணியாற்றலாச்சு
எதிலும் எச்சரிக்கை எங்கும் எச்சரிக்கை
அஞ்சுவதற்கு அஞ்சும் அறிவுடைமை
பன்னிரண்டு மணி நேர ஆயுள் எதிரியை
பதினான்கு மணி நேரம் ஒளிந்திருந்து ஒழிப்போம்
பாதித்தவர் பத்திரமாய் தனிமையில்
சந்தேகத்துக்குட்பட்டோர் தீவிர கண்காணிப்பில்
முன்னோர் பகர்ந்த மூலிகை ரகசியம்
முழுக்க புரியுது இன்றதன் அவசியம்
அஞ்சரைப்பெட்டியின் மருத்துவ மகிமை
அறிந்துணர்ந்தோம் பாரம்பரிய பெருமை
கூட்டுக்குள் கதகதப்பாய் குஞ்சுகளுடன்
குன்றாத நெருக்கம் பிணைப்பு சுகமே
புதிதாய் நுழைந்த வாங்கி உண்ணும் பழக்கம்
புறந்தள்ளப்பட்டதுவே சுவையான சமையல்
நா மணக்க நாசி மணக்க நன்றாய் நடக்குதே
நச்சான கல்விக்கொள்கைகள் தகர்ந்தனவே
தீதான பொழுதுபோக்குகள் மறைந்தனவே
தேடாமல் கிடைத்த தீர்வுகள்தான் எத்தனை
ஆணவமாய் இயற்கையை அழிக்கும் துணிவு
அதற்கும் எதிர்பாராது வந்தது திடீர் முடிவு
மூச்சுவிடத் துவங்குது நீர் நில வாழ் உயிரினம்
முடியாது தொடர்ந்திட வேண்டும் இந்நிலை
இணைந்து விரட்டுவோம் கொரோனாவை
இனியதாய் மாற்றுவோம் மானிடர் வாழ்வை
விடியாத இரவுமில்லை விலகாத கிரகணமுமில்லை
விடுதலை பெறுவோம் விரைந்ததை பெறுவோம்