Friday, January 4, 2019

வாடி என் செல்லக்குட்டி

IndiBlogger - The Indian Blogger Community
வாடி என் செல்லக்குட்டி
கிட்ட வாடி என் வெல்லக்கட்டி

போடா மூக்கோடிப்பயலே
எட்டிப் போடா போக்கிரிப்பயலே

கரிச்சிக் கரிச்சிக் கொட்டாதேடி
என் கரிசனம் ஏன் புரியலேடி

புளிச்சிப் புளிச்சிப் போச்சுடா
பொல்லாத பாசாங்குப் பேச்சுடா

கண் கலங்காம உன்னை பாத்துக்குவேண்டி
கால் செருப்பாக நான் உனக்கு இருப்பேண்டி

கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுவாயடா
மிதியடியாய்த்தான் என்னை மதிப்பாயடா

சமைச்ச கைக்கு வைர வளையல் வாங்கித்தருவேண்டி
கூடமாட ஒத்தாசையா வேலை செய்ய வருவேண்டி

குத்தம் சொல்லாம தின்ன புருஷன் இருக்கானாடா
வீட்டு வேலை செய்யும் லட்சணம் தெரியாதாடா

கேட்டதெல்லாம் வாங்கித்தருவேண்டி நானுனக்கு
கடுமையாய் தினம் உழைப்பேனடி நான் அதற்கு

வானத்து நட்சத்திரமா எவளும் வாங்கித்தர சொல்லுறா
விடுதலைதானடா இன்றைக்கு கேட்கிறா வெடுக்கென்று

சத்தியமா கெட்ட பய நானில்லையடி
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை நானடி

காரியமாகுறதுக்கு கல்கண்டா பேசுவே
கடைசியிலே கருவேப்பிலையா வீசுவே

குடையாய் காப்பேனடி வெயில் மழை தாக்காம
குடும்பவிளக்கென உன்னை கும்பிடுவேனடி

பொட்டையின்னு ரொம்பத் திமிரா பேசுவே
கூசாம கை நீட்டுவே கூனிக்குறுகி நிக்க வைப்பே

குச்சி ஐஸ நீ ரசிச்சி சாப்பிடுறதே அழகுதானடி குட்டிப்பெண்ணே
குதர்க்கம் பேசிப் பேசி நழுவிச் செல்லும் செல்லக்கண்ணே

ஐஸையும் உருகாமல் நான் சாப்பிடுவேன் பொடிப்பயலே
யோசிக்காமல் மாட்டிக்கொள்ளவும் மாட்டேன் சின்னப்பயலே

நாளைக்காவது நல்ல பதிலை சொல்லடி தங்கமே
இப்ப மணியடிச்சாச்சி நாம் வகுப்புக்கு போகணுமே

நான்காம் வாய்ப்பாடு மனப்பாடம் பண்ண திணறும் பையா
தூண்டில் இரையில் சிக்கும் மீனென பெண்ணை எண்ணினாயா

சிறப்பாக செய்வேனடி விருதெல்லாம் வாங்கி குவிப்பேனடி
நாளை நாட்டை ஆளும் நம்பிக்கை நட்சத்திரம் நானடி

காட்சிகள் மாறுமா அறியேனடா அறிவாளியே
சரித்திரம் தொடருமா என தெரியலையேடா

நல்ல துணையாய் நண்பனாய் நானிருப்பேனடி
ஊன்றுகோலாய் பற்றிக்கொள்ள இறுதி வரை

ஓடுகிற தண்ணியில எழுதடா உன் வார்த்தைகளை
ஓடிப்போவாயடா கடமையை எல்லாம் கைவிட்டு

புது இலக்கணம் வகுப்பேன் ஆண்மைக்கு என் கண்ணே
விடை கொடுப்பேன் வன்முறைக்கு சின்னப்பெண்ணே

கனவெல்லாம் காணத் தெரிந்தவனே சின்னவனே
கணக்கெல்லாம் தப்பாய் போவதெப்படி எப்போது

அவலங்கள் தொடராது சபதம் எடுப்போமடி
கண்ணியமாய் வாழும் கலை கற்போமடி

காத்திருப்பேன் இளையவனே இனியவனே
கனவானே கனவிது நிசமாய் பலிக்கும் வரை

(பிரதிலிபி கவிதை போட்டிக்கு எழுதியது)

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community