Friday, November 17, 2017

உண்மைகள்.

IndiBlogger - The Indian Blogger Community  இயற்கையில் ஆணினத்திற்கும், பெண்ணினத்திற்கும் பிரத்தியேக குணாதிசயங்களும், கடமைகளும், திறமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகில் உயிரினம் பெருக, செழிக்க, தொடர இவற்றை புரட்டிப் போடாமல் இருப்பது முக்கியம். ஆணினமும், பெண்ணினமும் இயல்பாகவே ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. விலங்கினத்தில் இதைப் பற்றிய தெளிவு இருக்கிறது, குழப்பமில்லாமல் சங்கிலி தொடர்கிறது. பகுத்தறிவு படைத்த மனித இனத்தில் சில புரட்சிக் கருத்துக்கள் விபரீத விளைவுகளையும் பல சமயங்களில் ஏற்படுத்துகிறது. பெண் ஆசைப்பட்டால் ஆணின் சட்டையை அணிந்து ஆனந்தமடையலாம். ஆனால் ஆணுக்கு சேலை கட்டிவிட விரும்புவது எல்லை மீறிய செயலாகும். சில மாற்றங்கள் சாத்தியம், அவசியம். பல மாற்றங்கள் சாத்தியமில்லை, அநாவசியம். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஆணிடமிருந்துதான் பெண் கருவை பெற முடியும், ஆணால் ஒரு நாளும் கருவை சுமக்க முடியாது. இந்த மாதிரியான மாற்ற முடியாத இயற்கை நியதிகளுடன் முரண்படாமல் வாழும் வாழ்க்கையில் பிரச்சினைகள் குறைவு, நிம்மதி அதிகம்.

Thursday, November 16, 2017

தலைமுறை (தடு)மாற்றங்கள்

IndiBlogger - The Indian Blogger Community       
காடுகளிலும், குகைகளிலும் மனிதன் வாழத்துவங்கிய கற்காலத்திலேயே உடல் வலுவுடன் மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்து குடும்பம் நடத்திய காலத்திலிருந்தே ஆண்மகனுக்கு தன் வீட்டு பெண்டுகளை மனம் போல தடியால், கட்டையால் காட்டுமிராண்டித்தனமாக அடித்து துன்புறுத்த முழு சுதந்திரம், அதிகாரம், பழக்கம் இருந்தது.
மனித நாகரிக வளர்ச்சியில் நகரங்கள் அமைத்து, விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்கள் கற்று, கட்டுக்கோப்பான அரசாங்க முறைகளும் வந்த பிறகும் ஆணின் சுதந்திரம், அதிகாரம்(எதேச்சாதிகாரம்) குடும்பத்தில் குறைவின்றி தொடர்ந்தது.
இருண்ட வீட்டுக்குள் அடைபட்டு, அடிமைப்பட்டு வாழ்வது பெண்களுக்கு பரம்பரையாய் பழக்கமான ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. பின்னர் யந்திர புரட்சி, சிந்தனை மறுமலர்ச்சி எல்லாம் தோன்றியது உலகெங்கிலும்.
தகவல் தொடர்பு மிகக்குறைவான அந்த காலகட்டத்தில் மேன்மையான குணம் கொண்ட சில ஆண் சிந்தனையாளர்கள் – காந்தியடிகள், பாரதியார், பெரியார் போன்றவர்கள் – நம் நாட்டு பெண்களின் அடிமை வாழ்வை, சிறுமை நிலையை நோக்கி நொந்தனர். சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பத் துவங்கினர்.
தான் தொழுவத்தில் கட்டி வைத்த ஐந்தறிவு ஜீவனல்ல என்ற புதிய புரிதல் பெண்ணுக்கு ஏற்பட்டது. எழுத்தறிவு கிடைத்தது. அவளது இருண்ட உலகில் சாளரங்கள் திறந்து ஒளியை பாய்ச்சின.
பரந்த உலகின் நடப்புகளை ஊடகங்கள் உணர்த்தின. சுதந்திரம் என்றால் என்ன என்று உணரத் தொடங்கிய இந்திய மாது மேலை சமுதாயத்துப் பெண் தன்னைவிட வெகுதூரம் முன்னோக்கி நடப்பதை கவனித்தாள். ஏக்கத்துடன் ஊக்கமாய் காலை முன்னே வைத்து நடக்கத் துவங்கினாள்.
கல்வி கற்றாள், பட்டங்கள் பெற்றாள், சட்டங்களை கையிலெடுத்தாள். சுயமாய் சிந்திக்கத் துவங்கிய காலோடு, சுயசம்பாத்திய வாய்ப்புகளை கைப்பற்றி சொந்தக்காலில் நிற்கும் துணிவைப் பெற்றாள்.
மாற்றங்கள் இத்தனையும் கேட்க நன்றாகத்தானே இருக்கின்றன? எங்கேயிருந்து வந்தன தடுமாற்றங்கள்? சமுதாயத்தில் மதிப்பு கூடி, மரியாதை கிடைத்து மகிழ வேண்டிய நேரத்தில் சில அடிப்படை உண்மைகளை பெண் மறந்தது ஏன்?
ஆணும், பெண்ணும் இயற்கையின் இரு அற்புத படைப்புகள், அவை இணைந்து இணக்கமாய் வாழ்வது இன்பம் என்பது புரியாமல் போனது ஏன்? இத்தனை நூற்றாண்டுகள் காட்டுமிராண்டித்தனமாய் நடத்திய ஆணை பல்வேறு விதமாய் ஆட்டிவைக்கவும், பழி வாங்கவும் கிளம்பியதேன்?
உணர்வுகள் இல்லாத ஜடங்கள் போல பெண்கள் பல நூற்றாண்டுகளாய் யந்திரங்களாய் மானம், மரியாதை, ரோஷம், சூடு, சொரணை எதுவும் இல்லாதவர்களாய் ஆக்கி, அவித்து, பெற்று வளர்த்து, மாடாக உழைத்த நிலை கடந்த சில தலைமுறைகளாய் மாறத்துவங்கியது.
கொடுமைப்படுத்துகிறான் ஆண்மகன் என்று உணரத்துவங்கியது கூண்டுக்கிளி. தப்பிக்க வழியின்றி சகிப்புத்தன்மையும், வலிய வரவழைத்துக்கொண்ட பொறுமையுமாய் வாழ்க்கை முடிந்தது.
சமீபகாலமாய் அம்மாக்களின் மனதில் பெட்டிப்பாம்பாய் தான் கிடந்தது போல் தன பெண் கிடந்துவிடக்கூடாது என்ற எண்ணம் விதை விட்டது. அது கற்பகத்தருவாய் வளராமல் விஷவிருட்சமாய் வளர்ந்து நிற்பது துரதிர்ஷ்டமே!
குடும்பம் தழைக்க தேவையான அடிப்படையான குணங்களை குழி தோண்டிப் புதைக்க முற்பட்டால் அழியப்போவது மொத்த சமுதாயமுமே.
இருட்டறையிலிருந்து வெளிவந்ததும் கண் கூசி தடுமாறுவது இயல்பு. காட்டாற்று வெள்ளம் புரண்டு வரும்போது நெடுக சேதம் விளைவது இயற்கை. ஆரம்ப தாக்கத்தின் பிறகு நிதானத்திற்கு வரவேண்டாமா?
குளிப்பாட்டிய தண்ணீரோடு குழந்தையையும் வீசிகொட்டுவது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அப்படித்தான் இருக்கிறது இப்போது நடப்பது.
ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை என்றார் கவி. ஐயகோ! அதை நிரூபிக்க இத்தனை வக்கிர வழிகளா? உனக்கு நான் ஏன் சமைத்துப்போட வேண்டும்? உனக்கு மட்டுந்தான் குடிக்கவும், கூத்தியாளுடன் கூத்தடிக்கவும் தெரியுமா? லட்சுமணன் கோட்டை சீதை தாண்டி யுகங்களாகிவிட்டன என்று ஆணிடம் சொடக்கு போட்டு, மீசையை முறுக்காதே, என்னை கேள்வி கேட்காதே, என்னிடம் எந்த உதவியையும் எதிர்பார்க்காதே என்று பெண் சவடால் பேசும் போது மனிதம் செத்துப்போகிறது.
வர்த்தகப்பைசாசத்தின் பிடியில் சிக்கிய உலகில், ரத்தம் குடிக்கும் வக்கிர ஊடகங்கள் பாதிப்பில் அழகான ஆண் பெண் உறவு அநியாயமாய் சின்னாபின்னமாய் சிதைவதை கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே!

Wednesday, November 1, 2017

எண்ணிப் பார்க்கையில்

IndiBlogger - The Indian Blogger Community பத்து விரல் போதுமோ நம்
பாக்கியங்கள் பட்டியலிட?
ஒன்பது கிரகமும் ஒவ்வொரு பக்கம்
பார்ப்பது
எதிர்வரும் துன்பங்கள் எதிர்க்கவோ?
எட்டு திசையும் கொட்டுதோ முரசு
எட்டாத இலக்கில்லை இங்கென்று?
ஏழேதானா வண்ணங்கள் உலகில்
இன்பமான இயற்கையின் எழிலில்?
அறுசுவையும் குறைவதுண்டோ
வாழ்க்கை வழங்கும் விருந்திலே?
ஐந்து பூதங்கள் ஆக்கிய யாக்கை மீண்டும்
ஐக்கியமாகத்தானே இடையில் இந்த நாடகம்?
நான்கு பருவங்கள் துடுப்புப் போட
நகருதோ வருடங்கள் காலக்கடலிலே?
மூன்றாம் கண்ணாய் ஞானமிருந்தால்
பார்க்குமிடமெல்லாம் ஒளிமயமாகாதோ?
இரண்டுதான் கரங்கள் என்றாலும்
உழைப்பில் களிப்பன்றி களைப்புண்டோ?
ஒரு முறைதான் நாம் வாழ்வது அப்போது
ஒழுக்கமாய் இருப்பதுதானே விழுப்பம் தரும்?
IndiBlogger - The Indian Blogger Community