கதை கதையாம்...
குமாரு பேப்பரில் எழுதின கதைய
உணர்ச்சியோட வாசிக்க காது குடுத்து நானும் கேட்டதை அப்பிடியே சொல்றேன்.
தூரத்தில் சக்தியின் ஹெலிகாப்டர் வருகின்ற சத்தம் கேட்டதுமே ஊஞ்சலில் உட்கார்ந்து நாவல் படித்துக் கொண்டிருந்த சக்தியின் நான்காவது புருஷன் நல்லமுத்து அலறியடித்து புத்தகத்தை ஒளித்து வைத்துவிட்டு அடுக்களையில் கடைசிகட்ட வேலையை முடித்துக் கொண்டிருந்த சக்தியின் முதல் புருஷன் முருகன் பக்கத்தில் போய் ஒத்தாசை செய்வது போல் நின்று கொண்டான்.
இந்த குமாருப்பயலோட குப்பத்தொட்டியான எனக்குள்ள குமிஞ்சி கிடக்குற
ரத்தினங்களப் பத்தி யார்கிட்டயாவது சொல்லியே ஆகணும்னு ரொம்ப நாளா
நினச்சிக்கிட்டுருக்கேன். குப்பத்தொட்டி இப்படி வெவரமா பேசுமான்னு யோசிக்கிறீங்களா?
எல்லாம் சகவாசதோசந்தான். விக்கிரமாதித்தன் சிம்மாசனம் மாதிரி எனக்கும் பவர்
இருக்கறதா வச்சுக்கோங்களேன்.
இந்த பயபுள்ள குமாரு விஸ்காம் படிச்சிட்டு கோடம்பாக்கத்து ஸ்டூடியோ
ஒன்னு விடாம நுழஞ்ச்சி பாத்துட்டான். மண்டை நிறைய அபூர்வமான யோசனைகளை சுமந்துகிட்டு
திரியறான். ஏதோ சினிமா மூலமா பரலோகத்தில இருக்கிற பரமபிதா மாதிரி மக்கள
இரட்சிக்கப் போறதா கனா கண்டுகிட்டிருக்கான்.
திரைக்கதை, வசனம், டைரக்சன், பாடல்னு அத்தனைளையும் பய கில்லாடிதான்.
ஆனா, என்ன பண்றது, போட்டி நிறைஞ்ச அந்தத்
துறையில நுழைஞ்சி கால் பதிக்கிறது என்ன சாமான்யமான காரியமா? சரியான அங்கீகாரம்
கிடைக்கிறதுக்காக பய நாயா பேயா அலையறான்.
முதல்ல ஒன்லைன் எழுதி எடுத்துக்கிட்டு பழம் தின்னு கோட்டை போட்ட
பிரபலங்களை எல்லாம் பாத்துட்டு வெறுத்து திரும்பினான். கொண்டு போன பேப்பரை கசக்கி
என்கிட்டே வீசுவான். நானும் படிச்சி படிச்சி அவனோட தீவிர ரசிகனாயிட்டேன். நல்லா
ஆங்கிள் பாத்து சீன் அமைச்சி காமரா கண்ணோட அவன் எழுதின இந்தக் கதையப் பாருங்க:
மகப்பேறு மருத்துவ மனையை விட்டு கார்
வெளியேறியதும் முன் சீட்டில் அமர்ந்திருந்த வீணா விசும்பினாள். டிஷ்யூ பேப்பரில்
மூக்கை உறிஞ்சினாள். கணவன் முகேஷின் இடது கை அவள் தொடையை ஆதரவாய் அழுத்தியது.
“ரொம்ப ஃபீல் பண்ணாத டார்லிங்! ஸ்கேன்
ரிசல்டை பார்த்ததும் நல்லா யோசிச்சித்தானே அபார்ட் பண்ண முடிவெடுத்தோம்?
வீட்டுக்குப் போய் நல்லா ரெஸ்ட் எடு. அடுத்த தடவை நம் மனம் போல கிடைக்கும்.
கோடிக்கணக்கான சொத்தை ஆளுறதுக்கு வாரிசு வேணும்னு நம்ம வீட்டு பெரியவங்க
வர்புருத்துனதுல தப்பே இல்ல. அவங்க வழிகாட்டல் நமக்கு என்னைக்கும் நல்லதைத்தான்
தரும்.”
...
“இந்த ‘ஏ’ சென்டர் கதையெல்லாம் கல்லாவ
நிறைக்காது. வேற ஏதாவது நல்லதா, நச்சுனு மாஸ்கிட்ட ரீச்சாகிற மாதிரி கொண்டு வாப்பா”ன்னு
சொல்லி பிடரியப் பிடிச்சி தள்ளாத குறையா வெளியேத்திட்டானாம்-சிநேகிதன்கிட்ட சொல்லி
மாஞ்சி போனான்.
சரின்னு அதே சிசுவேஷன ‘பி’ சென்டருக்கு
தகுந்த மாதிரி மாத்தி எழுதிகிட்டு வேறொரு டைரக்டர்கிட்ட போனான். இதுதாங்க
என்கிட்டே வந்து சேர்ந்த அந்தக் கதை:
“நீங்க சொல்றது கொஞ்சங்கூட நல்லா இல்லீங்க.
உங்கம்மா பேச்ச கேட்டு ஆடாதீங்க.”
“என்னடி வாய் நீளுது? ஓங்கி அறைஞ்சேன்னா
பல்லெல்லாம் கழண்டுறும்.”
“நீங்க கொபப்படுரதுல அர்த்தமே இல்லீங்க.
என் மனசு இதுக்கு ஒப்பவே மாட்டேங்குது.”
“நான் ஒருத்தன் படுற கஷ்டம், சுமக்குற வலி
எல்லாம் உனக்கு கொஞ்சமாவது புரியுதாடி? வெசம் போல விலைவாசி ஏறுது. ஆயுசுக்கும்
என்ன இப்படியே வேகச்
சொல்றியா?”
அவள் கட்சி எடுபடவேயில்லை. தோற்றுத்தான்
போனாள்.
அந்த டைரக்டர் என்ன சொன்னாராம் தெரியுமா?
“இந்த நடுத்தர வர்க்கத்து கஷ்டமெல்லாம் படம் பாக்க வர்ற ஜனங்களுக்கு போரடிச்சி போச்சிப்பா. இப்பல்லாம் கிராமம் தான் கிரேஸ். அதுதான் வசூல
அள்ளுது.”
நம்ம ஆளு அசரல. “சி’ சென்டர டார்கெட் பண்ணி
எழுதுகிட்டு கிளம்பினாரு.
“யக்கா! ராமக்கா! மருமக புள்ள
பெத்துட்டாளா?”
“ஆஆஆஆமா”.
“ஆ”கார நீட்டலில் அத்தனை அலுப்பு.
“என்ன புள்ளக்கா?”
“பொட்ட”
(அந்த ஒத்தை சொல்லு அடக்கிய சாயங்களை எந்த
அகராதியும் விளக்க முடியாது. குப்பத்தொட்டி எனக்கு கண்ணுல வேர்த்திருச்சி.)
அக்கறையாய் சொன்னவள் அகன்றதும் உள்ளே நுழைந்தான் அவள் புருஷன்.
“என்னடி, ஆயாவ வரச்சொல்லிட்டியா? கள்ளிப்பாலோ,
நெல்லுமணியோ ..என்ன எழவோ.. அவள காதும் காதும் வச்சாப்பல கமுக்கமா காரியத்த
முடிக்கச் சொல்லு.” கறாராய் பேசினான் பெரிய மனுஷன். தலை குனிந்தபடியே சம்மதமாய்
கேட்டுக்கொண்டிருந்தான் அவன் பெத்த மகன்.
அந்த புது டைரக்டர் சீறினாராம்: “இதெல்லாம்
‘கருத்தம்மா’வுலையே பாத்தாச்சு. அரச்ச மாவ அரச்சி கைய சுட்டுக்க சொல்றியா? புதுசா
யோசிய்யா!”
புதுசா யோசிக்கணுமாம். சுத்தியும்
இத்தன அவலம் கோர தாண்டவமாடுது. அதக் காட்டவே ஆயுசு பத்தாது. ..விட்டலாச்சார்யா
கதையெல்லாம் என் லெவலில்லை. ஆடு, யானை, பாம்பு அப்படின்னு படம் பண்ணும் ஆசையும் எனக்கில்லை.
பய தனியா உக்காந்து புலம்பித் தள்ளிட்டான்.
ஆடுன காலும் பாடுன வாயும்
சும்மாயிருக்குமா? பய பேனாவ தூக்கிட்டான். வக்கணையா அடுத்த கற்பனைய வடிச்சான். கருத்தம்மா
கருவ அவ்வளவு லேசா கலைக்க மனசில்லாம பய தீவிரமா யோசிச்சி தொலைநோக்கோட எழுதினான்.
ஆம்பள பொம்பள சதவீதம் எக்குதப்பா மாறிப்போனா என்ன விபரீதம் நடக்கக்
காத்திருக்குன்னு வெவரமாவே எழுதிபுட்டான்.
ஆனா அந்தக் கதை கசக்கப்பட்டு எனக்குள்ள
வந்து விழல. ஏன்னு கேக்குறீங்களா? இதோ ஃபிளாஷ்பேக்: குமாரு பய அவன் சிநேகிதன
அவசரமா போன்ல கூப்பிட்டு “உடனே வாடா, குட் நியூஸ்” என்றான். அவனும் அடுத்த
அஞ்சாவது நிமிஷம் வந்து நின்னான். “என்னடா குட் நியூஸ்? உன் பட்டிக்காட்டு மாமா
மகளை கட்டிகுடுக்க நாள் பாத்துட்டு உடனே கிளம்பி வான்னுட்டாரா?”
“இல்லடா, இது நிஜமாவே சந்தோஷமான சேதி.””அப்பா,
மாமா மகள் கட்டிக்கிறது சந்தோஷமான சேதி இல்லியா? பட்டிக்காட்டு கிளி கசக்குதாடா?”
“கேலி பேசாம நான் சொல்றத கேளுடா. என்
கதை அந்த டைரக்டருக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சுடா. உடனே ஷூட் போறோம்.”
“கங்கிராட்ஸ்டா! எப்படிடா? எப்படிடா?
என்ன கதை? யாரு டைரக்டர்?”
“பொறி தட்டுனாப்புல இப்ப நடக்குற
ட்ரென்டோட விளைவு மனக்கண்ணுல பட்டுச்சி. அத வச்சி எழுதி எடுத்துகிட்டு நேரா அந்த
புது டைரக்டர்கிட்ட போனேன். ஆணாதிக்கம் நிறைஞ்சிருக்கிற திரைப்படத் துறையின் எல்லா
பிரிவிலேயும் இப்ப துணிச்சலா பெண்களும் நுழைஞ்சி கலக்க ஆரம்பிச்சிட்டாங்களே!
அந்த பெண் டைரக்டர்கிட்ட என் கதையை
சொன்னதும் அது அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிப்போச்சி. “இத உடனே படமா எடுக்கறோம்.
நானே ஹீரோயின் ரோலை எடுத்துக்கப்போறேன். வயசான பழைய ஹீரோக்கள் அஞ்சி பேரை போடறதா,
புதுசா திமிறிக்கிட்டிருக்கிற இளவட்ட ஹீரோக்கள்ல அஞ்சு பேரை செலெக்ட் பண்ணலாமான்னு
ப்ரட்யூசர்கிட்ட கலந்துகிட்டு முடிவ சொல்றேன். ஆனா கன்ஃபர்மா இந்த படத்த எடுக்கறோம்.
தயாராயிருங்க.” அப்படீன்னு சொன்னாங்கடா. குமாரு குஷியில சிநேகிதன அலாக்கா தூக்கி
தட்டாமாலை சுத்திட்டான். “விடுடா! விடுடா! புது முக ஹீரோவா அறிமுகமாகி அந்த
டைரக்டர் ஹீரோயினை தூக்குறதுக்கு ரிகர்சலா? படவா, முதல்ல கதை என்னன்னு சொல்லுடா!”
தூரத்தில் சக்தியின் ஹெலிகாப்டர் வருகின்ற சத்தம் கேட்டதுமே ஊஞ்சலில் உட்கார்ந்து நாவல் படித்துக் கொண்டிருந்த சக்தியின் நான்காவது புருஷன் நல்லமுத்து அலறியடித்து புத்தகத்தை ஒளித்து வைத்துவிட்டு அடுக்களையில் கடைசிகட்ட வேலையை முடித்துக் கொண்டிருந்த சக்தியின் முதல் புருஷன் முருகன் பக்கத்தில் போய் ஒத்தாசை செய்வது போல் நின்று கொண்டான்.
தோட்டத்தில் நின்ற மூன்றாவது புருஷன்
மூக்கன் பீடியை அவசரமாய் கடாசிவிட்டு செடிகளுக்கு தண்ணீர் விட ஆரம்பித்தான்.
ஹெலிகாப்டரை ஒட்டி வந்த இரண்டாவது
புருஷன் இளங்கோவன் குறிப்பு நாட்டுடன் ஒரு எட்டு பின் வர சக்தி அமர்க்களமாய்
ஹாலுக்குள் நுழைந்து சோபாவில் வந்து அமர்ந்தாள். பின்னாலேயே கைகொள்ளா
பார்சல்களுடன் வந்த ஐந்தாவது புருஷன் அகிலன் மாடிப்படியேறி சென்றான்.
“என்னய்யா டிபன் பண்ணியிருக்க?”
அடுக்களையைப் பார்த்து கூவினால் சக்தி. “நீங்க சொன்ன மாதிரி புரோட்டாவும் சில்லி
சிக்கனும்” என்றான் முருகன் பவ்யமாக. “அதெல்லாம் நீங்களே கொட்டிக்கங்க. எனக்கு
இப்ப சோளாபட்டூராவும் சன்னாவும் சாப்பிடணும் போல இருக்கு. சரியா பத்து நிமிஷத்துல
வேணும்...அந்த மூக்கன் தடியன் மோட்டாரை ரிப்பேர் பாத்துட்டானா? ..டே, நல்லமுத்து!
கம்ப்யூட்டர்ல நான் குடுத்த மேட்டர டைப் அடிச்சி சேவ் பண்ணிட்டியா?”
உள்ளேயிருந்து இரண்டு குழந்தைகள் ஓடி
வந்தன. “அம்மா, நான் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போட்டுமா?” மகன் மருதனின் கெஞ்சல். “போதும்
போதும் நீ கம்ப்யூட்டர் படிச்சி கிழிச்சது. வேட்டித்தண்டம். உன்ன கட்டிக்குடுக்க
கோடிய கொட்டிக்குடுக்கமேணுன்னு என் கவலை. போற இடத்துல நல்ல பேர் எடுக்குராப்புல
போய் பூரி செய்ய பழகு.” “மம்மி, என் நெயில் பாலிஷ் நல்லாருக்கா?” என மடியில்
சாய்ந்து கொஞ்சிய மகள் சுமியின் தலையை வாஞ்சையுடன் வருடியபடி “இன்னிக்கி கிட்டார்
கிளாஸ்ல என்னம்மா படிச்ச?”
கதைய கேட்ட சிநேகிதனும்
உற்சாகமாயிட்டான். “கியாரண்டியா நூறு நாள் ஓடும்டா. கோடில வசூல் கொட்டப்போகுது!
தாய்க்குலத்தோட தனிப்பெரும் ஆதரவு கண்டிப்பா கிடைக்கும்டா. அம்மாக்களோட ஆட்சின்னா
சும்மாவா?”
எப்பூடி?
அம்மாக்களோட ஆட்சின்னா சும்மாவா?”!!!!!!
ReplyDeleteஹி..ஹி..சரிதானே, இராஜராஜேஸ்வரி?
ReplyDelete