“Impact of tasmac shops on women’s life in Tamil Nadu”
“தமிழ் நாட்டுப் பெண்களின் வாழ்க்கையில் டாஸ்மாக் கடைகளின் பாதிப்பு”
அவள் பெயர் ஜோதிமணி. வயது 1௦. அனைத்துப் பத்திரிக்கைகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்டாள். அப்படி அவள் என்ன சாதித்தாள்? மதுரையில் நான்காம் வகுப்பு படிக்கும் இச்சிறுமி மதுக்கடைகளை மூடக்கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தாள்.
அவளுடைய அப்பா தினமும் குடித்துவிட்டுவந்து அவள் அம்மாவுடன் சண்டை போடுவதையும், அவள் அம்மாவை அடிப்பதையும், அதை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதையும் பார்த்து அந்த பிஞ்சு மனம் வேதனையிலும், அவமானத்திலும் வாடியது.
“ப்ளிஸ்ப்பா, குடிக்காதீங்க” என்று அவள் தினமும் கெஞ்சியும் அவள் அப்பா கேட்கவில்லை. ஒரு தடவை ஸ்கூல் ஃபீஸ் கட்ட வைத்திருந்த காசை குடிக்க எடுத்துக் கொண்டதால்அவள் இரண்டாம் வகுப்பிலேயே இரண்டாம் முறை படிக்கவைக்கப்பட்டாள். அப்புறமும் விடாமல் அவள் தன அப்பாவிடம் தினமும் குடிக்கவேண்டாம் என்று கெஞ்சியதில் அவர் மனம் மாறி குடிப்பதை நிறுத்தி விட்டார்.
அவளைப்போல் எண்ணற்ற சிறுமிகள் குடிப்பழக்கமுள்ள அப்பாக்களால் அவதிப்படுவதை உணர்ந்து அந்த குழந்தைகளுக்கும் நல்ல வாழ்வு கிடைப்பதற்காக ஜோதிமணி கலெக்டர் அலுவலகம் முன்பு மதுக்கடைகடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினாள். கலெக்டர் அவளை அழைத்து பதினெட்டு வயதாகாத அவளை உண்ணாவிரதமிருக்க அனுமதிக்க முடியாது என்று அன்பாக கடிந்து கொண்டு அவளிடமிருந்து ஒரு மனுவை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
பொம்மைகளுடன் விளையாட வேண்டிய வயதில் ஜோதிமணி எவ்வளவு பெரிய பொறுப்பை தோளில் சுமக்க முன்வந்தாள் என்னும் அவலம் மதுவுக்கு எதிராக போராட குழந்தைகள் கூட களத்தில் இறங்கிவிட்டார்கள் என்பதை தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. விழித்துக் கொள்ளுமா தமிழக அரசு? வெட்கப்படுமா தமிழக அரசு? வேதனைப்படுமா தமிழக அரசு?
ஜோதிமணிக்குத்தான் உண்ணாவிரதமிருக்க வயது போதவில்லை. மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினியும் அவள் தந்தையும் மதுவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தபோது தற்கொலைக்கு முயன்றதாகக் கைது செய்துள்ளது போலீஸ்! அவமானம்! அடக்குமுறையால் தன தவறுகளை மறைக்க முயலும் தமிழக அரசின் இயலாமையை எண்ணி குமுறுகின்றது பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் நாட்டுப் பெண்களின் நெஞ்சம்.
வீட்டில் உலை கொதிக்கவில்லை, பெண்கள் குலைதான் நடுங்குகிறது. பிள்ளைகள் வயிறு காய்கிறது. சிந்திய வியர்வையின் பலனை அனுபவிக்க முடியாமல் பெண்களின் வாழ்வில் வில்லனாய் வந்து வாய்த்திருப்பது மதுக்கடைகளே.
உடல் நோக நாள் முழுதும் உழைத்துக் கொண்டு வந்த காசினை ஏழைப் பெண்கள் தங்கள் பசியோடிருக்கும் பிள்ளைகளுக்கு கஞ்சி வடித்துக் கொடுக்க விடாமல் அடித்துப் பிடுங்கிச் செல்லும் குடிகாரக்கணவர்கள் திருந்துவது எப்படி? ஊரெங்கும் மதுக்கடைகளை வியாபித்திருக்கச் செய்து அரசாங்கம் அவற்றின் முலம் வருமானம் ஈட்டுவது மாபாதகம் இல்லையா?
குடும்பத்தலைவனையும் மதுவிடம் தொலைத்து பெற்ற பிள்ளைகளும் விடலைப் பருவத்திலே வெம்பிப் போனால் ஏழைப்பெண் அனுபவிக்கும் நரக வேதனையை வர்ணிக்க வார்த்தையில்லை.
பகாசுர பசியுடன் படித்து அறிவை வளர்க்க வேண்டிய வயதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி குறை மனிதர்களாய், குற்றவாளிகளாய் வளர்வதைக் கண்டு அரசு பதற வேண்டாமா? நாளைய தூண்களைத் தகர்த்து சாய்த்துவிட்டு எந்த மாட மாளிகையை கட்டப்போகிறது மாநில அரசு? எதிர்கால மன்னர்களை, ஜனநாயகத்தின் சந்ததிகளை கொன்றுவிட்டு மாய மந்திரத்திலா அடுத்த தலைமுறையின் சாம்ராஜ்யத்தை எழுப்ப முடியும்?
சுவரை வைத்துத்தானே சித்திரம் வரையவேண்டும்? சுவர்களான இளந்தலைமுறையை தகர்த்துவிட்டால் கட்டிடம் கட்டத்தான் முடியுமா?
தழைத்து வளர வேண்டிய தளிர்கள் தள்ளாட்டத்தில் வளர்வது மாநில அரசிற்கு வெட்கக்கேடல்லவா? ஒழுக்கமும், புலனடக்கமும் ஓடி ஒளிந்து கொண்டதே மது அரக்கனின் கோரத் தாண்டவத்தின் உக்கிரம் தாங்காமல்!
தேனும்,பாலும் ஓடாவிட்டாலும் பரவாயில்லை, மது வாடை அறியாத மாநிலமாய், அண்டை மாநிலங்களின் சரக்குகள் புகாதபடியான கெடுபிடி நிறைந்த எல்லைகளுடன் சுபிட்சமாய்த்தான் வளர்ந்து வந்தோம். இன்றோ முக்குக்கு முக்கு மதுக்கடை கூவிக் கூவி அழைக்க சபலத்தில் விழுந்த விட்டில் பூச்சிகள் நிறைந்த மாநிலமாகவன்றோ மாறிவிட்டோம். அன்றாட வாழ்வு நரகம், எதிர்காலமும் காரிருளில் என்பதுதான் இன்றைய அடிமட்ட தமிழ் நாட்டு பெண்களின் நிலைமை.
வருத்தப்படாத வாலிபர்களும், பரதேசிகளும், பேட்டை ரவுடிகளும் வளம் வரும் மாநிலத்திலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெருமை இல்லை, வளர்ச்சி இல்லை, மகிழ்ச்சி இல்லை.
குடிமகன்களுக்கு கவலையிலிருந்து விடுதலை அளிக்கிறது போதை. கவலை, துன்பம், துயரமெல்லாம் சுற்றியிருப்பவர்களுக்கே. குடிகாரன் குடல் வெந்து, ஈரல் கெட்டு சாவான் அல்லது சாலை விபத்தில் சாவான். நோயில் செத்த குடிகாரன் குடும்பத்தை கடனில் ஆழ்த்தி, துடுப்பில்லா படகாக்கி பொறுப்பில்லாமல் போய் சேருவான். சாலை விபத்துக்குக் காரணமாகி சாகின்ற குடிகாரன் அப்பாவி பொதுமக்களையும் கூடவே எமலோகத்துக்கு அழைத்துப் போவான்.
குடியால் சீரழிந்த குடும்பங்கள்தான் எத்தனை! நாகரிகத்திற்காக, நட்பிற்காக, ஆறுதலுக்காக, கவலை மறக்க, கொண்டாட-அடடா எத்தனை காரணங்கள் குடிப்பதற்கு! நம் மதிப்புக்குறியீடுகள் அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கின்றன. எவ்வளவு கவலைக்குரிய விஷயம் இது!
என்னவொரு அசிங்கமான கலாச்சாரத்தை ஆழப்பதிய வைத்திருக்கிறார்கள் கிராதக நெஞ்சம் படைத்த, பேராசை பிடித்த திரைப்படத்துறை வியாபாரிகள்! சுய அறிவைத் தொலைத்த செம்மறியாட்டு கூட்டமாய் விசிறிகள் இன்று அடிக்கிற கொட்டத்திற்கு அளவேயில்லை. தன சொந்த குடும்பத்தைப் பேணிக் காக்க மறந்து தங்களது ஆதர்ச நடிகர்களின் கட்டவுட்டுகளுக்கு பீர் அபிஷேகம் நடத்தும் அனாச்சாரத்தை என்னவென்பது?
நாறிப்போயின தமிழ்நாட்டில் வீடுகளும், ரோடுகளும் குடிமகன்களின் வாந்தியாலும், வசை மொழியாலும். கண்கொண்டு காணவோ, காது கொடுத்து கேட்கவோ சகிக்கவில்லை. திரைப்படக் காட்சிகளும், பாடல்களும், வசனங்களும் மது விற்பனையில் திளைத்திருக்கும் மாநில அரசிற்கு முழு ஆதரவு தந்து எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றி வளர்ப்பது கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே!. குவார்ட்டரை வைத்து கல்லா கட்டும் இவர்களுக்கு கருட புராணத்தில் என்ன கொடுமையான தண்டனை காத்திருக்கின்றதோ!
மூளையை மழுங்கச் செய்து கட்டவிழ்த்த மிருகமாய், சுயநினைவில்லா ஜடமாய் இயங்கவைக்கும் மதுவைக் குடிக்க வைத்துவிட்டு பின்னர் கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, சாலை விபத்து போன்றவற்றைத்தானே எதிர்பார்க்க முடியும்? விதைத்ததுதானே முளைக்கும்?
தெருவில் போதையுடன் சுதந்திரமாய் திரியும் குடிமகன்களால் பெண்கள் பாதுகாப்பாய் தெருவில் நடக்க முடியவில்லை. பள்ளிக்கூடம், வழிபாட்டுத்தலங்கள், அலுவலகங்கள், கடைகள், பேருந்து நிறுத்தங்கள் இவற்றிற்கு செல்லும் வழி எங்கும் அரசின் மதுக்கடைகடைகள் நிறைந்துள்ளன. வக்கிரங்களை வளர்க்கும் இந்நச்சுக்கூடங்களை அவை தரும் வருமானத்திற்காக இனியும் மாநில அரசு அனுமதித்துக் கொண்டிருக்கலாமா?
தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகைத் தினங்களில் மது விற்பனை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது என்று ஊடகங்கள் செய்தி வாசிக்கின்றன. நாய் விற்ற காசு குரைக்காது என்பது எவ்வளவு நயவஞ்சகமான பழமொழியாகிவிட்டது நம் அரசுக்கு!
மாணவர்கள், ஆசிரியர்கள், மகளிர் என பலரும் தமிழ் நாட்டின் பல ஊர்களில் ஊர்வலம், சாலை மறியல், கோரிக்கை மனுக்கள், பொதுநல வழக்குகள் மூலம் தங்கள் தீவிர எதிர்ப்பினை தெரிவித்தும் குடிமகன்களின் அசிங்கங்கள், அத்துமீறல்கள், கலாட்டாக்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
மது அரக்கன் பல குடும்பங்களை அழித்து பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளான். இதை நம்பாதவர்கள் ஒரு முறை ஒரு பொது மருத்துவமனைக்குச் சென்றால் மதுவினால் விளைந்த கோரங்களை நேரில் காணலாம். குடித்து உடல்நலம் கெட்டு உயிர் ஊசலாடுபவர்களை மட்டுமல்ல, குடித்துவிட்டு வாகனம் ஒட்டிய கிராதகர்கள் விளைவித்த விபத்துகளில் சிக்கி மண்டை உடைந்து, எலும்புகள் நொறுங்கி, சதை பிய்ந்து குற்றுயுரும் குறையுயிருமாய் கிடப்பவர்களையும் காணலாம்.
சமுதாயத்தின் அடித்தட்டில் வாழும் குடும்பத்துப் பெண்களின் கண்ணீர் கதைகளைக் கேட்டால் கல்லும் கரையும். அந்தக் கதைகள் அரசின் காதுகளை எட்டவில்லையா? அல்லது அரசின் மனம் கரையாத கல்லா?
எத்தனையோ எளிய, வறிய பெண்கள் சத்தியவானை எமனிடமிருந்து மீட்ட சாவித்திரிகளாகத்தான் திகழ்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையே முடிவில்லா பெரும் போராட்டமாய் இருக்கிறது. என் வீட்டில் வேலை செய்யும் இளம்பெண்ணின் கதையே ஒரு சிறந்த உதாரணம். ஆணொன்று, பெண்ணொன்று என இரு மகவுகளைப் பெற்ற அவள் அழகிய குடும்பத்தின் நிம்மதி அவள் கணவனின் குடிப்பழக்கத்தால் தொலைந்தது. மதுவின் இறுக்கமான பிடியிலிருந்தவன் நோய்வாய்பட்டு பெரியாஸ்பத்திரியில் பல நாள் படுக்கையில் கிடந்தான். அவளுடைய கவனமான பராமரிப்பினாலும், மருத்துவர்கள் வழங்கிய விலையுயர்ந்த மாத்திரைகளாலும் அவள் கணவன் உயிர் பிழைத்து இன்று குடியை மறந்து சிறிது சிறிதாக பழைய ஆரோக்கியத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிறான்.
உடம்பெல்லாம் காயத்துடன் (குடிகாரக் கணவனின் அன்புப் பரிசுகள்), மனதில் ரணத்துடன் வலம் வந்தவள் இப்போதுதான் கொஞ்சம் மலர்ச்சியுடன் காணப்படுகிறாள். அவள் சந்தித்த சோதனைகள், கஷ்டங்கள், அம்மம்மா, மிகவும் நெஞ்சைத் தொடுவதாய் இருந்தன. இப்படித்தானே இன்னும் பல்லாயிரம் பெண்கள் எதிர்நீச்சல் போட்டு மதுவின் தீய விளைவுகளில் உழன்று கொண்டிருக்கிறார்கள்?
வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத வறுமை போராட்டம். நோய்க்கும் வைத்தியத்துக்கும் இடையே உழலும் போராட்டம். உடலால், மனதால் நொந்து நம்பிக்கையிழக்காமல் தனியாளாய் குடும்ப பாரம் சுமக்கும் இந்த பரிதாபமான பெண்களுக்கு விடிவுகாலம் வரவேண்டும். அது அரசின் கையில்தான் இருக்கிறது.
மக்களின் மகிழ்ச்சியான, ஒழுக்கமான வாழ்வைப் புறக்கணித்து அபரிதமான வருமானத்தை வழங்கும் மதுக்கடைகளை ஆதரிக்கும் அதர்மமான, அநியாயமான போக்கினை அரசு உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். நல்ல அரசினால் நிச்சயமாக நல்லபடியாக முன்னேற்றப் பாதையில் நம்மை நடத்திச்செல்ல முடியும்.
முதலில் அரசு யந்திரத்தின் ஓட்டைகளை அடைக்க வேண்டும். கருப்பாடுகளை கண்டறிந்து களைய வேண்டும், நேர்மையான அதிகாரிகளை செயல் புரிய விடாமல் முடக்கும், பந்தாடும், மிரட்டும் போக்கினை நிறுத்த வேண்டும்.
குறுக்கு வழியிலே, சுயநலமிகளாய், யதேச்சாதிகாரமாய் சம்பாதிக்க எண்ணுபவர்களை, ஊழல் பேயை ஊட்டி வளர்ப்பவர்களை தலையெடுக்க விடக்கூடாது. ஒழுங்கீனமான காரியங்களை செய்பவர்களை அரசின் அனைத்து மட்டங்களிலும் இனம் கண்டு இரும்புக் கரத்துடன் ஒடுக்க வேண்டும்.
தீர்க்கதரிசனத்துடன், பொதுநல சிந்தனையுடன் துலங்கும் நுண்மதி கொண்ட நல்லவர்களை அரசின் ஆலோசகர்களாக நியமிக்கவேண்டும். கிடப்பில் போடப்பட்ட நல்ல பல திட்டங்களை உயிர்ப்பிக்க வேண்டும். உலகப்பந்து உருளும் அசுர வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் சிறப்பான, சீர்மிகு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் விரும்பிய மாதிரியான ஊக்கமுள்ள செயல்வீரர்களை, சாரணர்களை திரட்ட வேண்டும். தேக்கம் மறைந்து, தள்ளாட்டம் மறைந்து, தன்னிறைவை வெகு விரைவில் எட்டலாம். உன்னால் முடியும் தம்பி என்று ஊக்குவித்த உதயமூர்த்திகள் உதித்த மாநிலம் இது. தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு.
குடியை ஒழிக்க முடியாது; குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாது; மதுக்கடைகளை மூடினால் மது கள்ளச் சந்தையில் புழங்க ஆரம்பிக்கும் என்ற வாதங்கள் நம் முன் வைக்கப்படுகின்றன. ஆழமாய் வேரூன்றிவிட்ட இந்த நச்சுச்செடியை கெல்லி எறிவது சிரமான காரியந்தான், ஆனால் முடியாத காரியமில்லை.
இடையறாத முயற்சியால், ஆசிரியர்கள், பெற்றோர்களின் இணைந்த முயற்சியால், நயமான போதனைகளால், உருப்படியான திரைப்படங்களால், பொறுப்புணர்ச்சியுள்ள ஊடகங்களால் ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கி நிரந்தரமான மகிழ்ச்சியை, ஏற்றத்தை சமுதாயத்தில் நிலவச் செய்யலாம். அரசு தீவிரமாக திரைப்படத்துறையை தணிக்கை செய்யவும் தவறக் கூடாது. இவ்வாறான மறுமலர்ச்சி சாத்தியங்கள் புத்திக்கு தெளிவாக தெரியும் போது எதிர்மறை வாதங்கள் நம்மையும் அரசையும் தடுக்கவோ, தடுமாறச் செய்யவோ கூடாது.
மதுக்கடைகள் சமூக விரோத செயல்களின் பிறப்பிடங்கள். அவை தரும் அளவிலா வருமானம் தரும் போதையில், கண்ணை மறைக்கும் மதியீனத்தில் தமிழக அரசு வெறித்தனமாக மேலும் மேலும் மதுக்கடைகளை திறந்த வண்ணமுள்ளது. பெருவாரியான மக்களின் துன்பத்திலும், துயரித்திலும் எழுப்பப்பட்ட அரசின் வெற்றிக்கோட்டை விரைவிலேயே வீழ்ந்துவிடும் என்று அரசு ஏன் உணரவில்லை?
அரசின் எண்ணற்ற நலத்திட்டங்கள் தந்த நல்ல பெயரை குடம் பாலில் விழுந்த துளி விஷமாய் மதுக்கடைகள் கெடுத்துவிடுவதை அரசு ஏன் உணரவில்லை? மக்களின் நலனில் உண்மையான அக்கறை உள்ள எந்த கட்சியும், அரசும் இக்காரியத்தை செய்யாது.
தேர்தலில் வெல்வதற்காக இலவசங்களை அள்ளிவிட தண்ணீராய் செலவழிக்கத் தேவையான பணத்தை அரசியல்வாதிகளுக்கு மதுக்கடைகள் கொடுக்கின்றன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரியும் விஷயம். இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக்குமே தவிர வேறு பலனில்லை.
அதி நவீன மதுக்கடைகளை திறப்பதில் ஆர்வமும், முனைப்பும் காட்டும் அரசு ஏன் எழுத்தறிவை வளர்க்க அதி நவீன கல்விக்கூடங்களையும், சுகாதாரம் காக்க அதி நவீன கழிப்பறைகளையும் கட்டுவதில் அக்கறை காட்டுவதில்லை?
“குடி குடியைக் கெடுக்கும்” என்று சொல்லி நல்ல வேஷம் போட்டுக் கொண்டே லாப நோக்குடன் மதுக்கடைகளை நடத்துவது நியாயமேயில்லை. லாபம் மட்டுமே ஒரு அரசின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. மக்கள் நலனும், ஆரோக்கியமும், முன்னேற்றமும் அதைவிட அதிக முக்கியமானது.
மதுவருந்துவதை அங்கீகரிக்கும், ஆதரிக்கும் அரசு அடுத்து விபச்சாரம் செய்வதையும், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உட்கொள்வதையும் சட்டப்படி செல்லும் காரியங்களாக்கி விடுமோ என்ற அச்சமும் எழுகிறது.
விளைநிலத்தைப் பாதுகாத்து, கல்வித்தரம் உயர்த்தி, வளர்ச்சிப்பணிகள் தொடங்கி, தொழிற்சாலைகள் நிறுவி, தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள் தீட்டி, வேலை வாய்ப்புகளை குவித்து மாநிலத்தை முன்மாதிரியான மாநிலமாய் மாற்றி மக்கள் முகத்தில் மலர்ச்சியை காண வேண்டிய மாநில அரசு செய்வதென்ன?
மக்களைக் கொன்று, மகிழ்ச்சியைக் கொன்று, மதுவை விற்று கோடிகளில் வருமானம் ஈட்டுவதில் பெருமையுளதோ? தார்மீக நியாயம் உளதோ? மாநிலத்தின் வருங்கால நலன்தான் உளதோ? கண்ணை விற்று ஓவியம் வாங்குவது மடமையல்லவோ? மாநில அரசே, மாற்றி யோசி!
No comments:
Post a Comment