தினம்தினம்தான் சூரியன் உதிக்கிறது
உலகினில் இறப்பும் பிறப்பும் நடக்கிறது
பூவாய் மலர்ந்து பொலிவாய் திகழ்ந்து
காற்றெங்கும் நறுமணத்தை நிறைத்து
நோகாமல் நொறுங்காமல் வதங்காமல்
உதிர்கின்ற பேர் ஆசீர்வதிக்கப்பட்டவரன்றோ
காந்தியத்தில் ஊறி கதருடுத்தி உழைத்து
நேர்மையும் நன்னெறியும் உயிர்மூச்சாகி
அடக்கமும் அமைதியும் அணிகலனாகி
பேரவா பொறாமை வன்முறையறியா
நோயென்றும் நொடியென்றும் என்றும்
படாமல் படுத்தாமல் பாசமலர்கள்
முகம் பார்த்து உறவாடிப் படுத்து
விடியும் நேரம் துயில் கலையாமல்
பெருவெளியில் பறந்து சென்றுவிட்டார்
பெரியவர் தொன்னூற்றியொன்று வயதினர்
என் துணைவரை ஈன்றவர் பாக்கியவான்
அந்த வரம் வாரிசெங்களுக்கும் வாய்க்கட்டும்
ஏதுமின்றி எது சாத்தியம்
நெருப்பின்றி புகையா
நீரின்றி நிலமா
கடலின்றி கரையா
வேரின்றி மரமா
பூவின்றி காயா
உடலின்றி உயிரா
ஊடலின்றி காதலா
நிஜமின்றி நிழலா
ஐயமின்றி தெளிவா
ஞாயிற்றுக் கிழமை சிறப்பை இழக்கும்
ஏழில் ஒன்றாய் சாதாரணமாய் நிற்கும்
மாறுதலின்றி விடிந்து முடிந்து போகும்
ஏனெனில் இது ஒரு இலையுதிர் காலம்
பக்குவத்தை நான் காணேனே
ஆடம்பரமான புது சொகுசுகளிலே
வெக்கைத் தொல்லை மறையவே
வந்த மின்விசிறியும் போதலியே
அறிவியல் ஒரு தந்திரம் தந்ததே
குளிரூட்டும் யந்திரமும் வந்ததே
வேர்வை சுரப்பிகளுக்கு ஓய்வே
கழிவுகளற்ற சிறுநீரகம் மட்டுமே
ஓயாது உழைத்து மூப்படையுதே
நாகரிக பவுசுக்கு விலையிதுவே
கண்ணை விற்று ஓவியம் வாங்கவே
விரைகின்றனர் இத்தலைமுறையினரே
நெஞ்சம் பதறுது
அங்கம் உதறுது
காதிலே விழுந்தது
கெட்ட கெட்ட சேதி
காடுகளை அழித்து
குரங்கினம் ஒழித்து
பல்லுயிர் தொலைத்து
தொழில்கள் வளர்த்து
முன்னேற்றமாயிது
மங்குது உன் அறிவு
மண்ணை தலையில் தானே
கொட்டிக்கொள்ளாதே மூடனே
சென்றுவிட்டான் காளை
வென்றுவிட்டான் காதலை
கொன்றுவிட்டான் பாசத்தை
பாவம் அந்த அறியாப் பேதை
புத்தன் அணைத்த கோதை
திணிக்கப்பட்டத் துறவுப் பாதை