பாரடா அவள் அழுவதை
ஏங்கி ஏங்கி
தேம்பி தேம்பி
விம்மி விம்மி
அடி வாங்கிய குழந்தையாய்
வற்றாத குளமோ
வஞ்சியின் கண்கள்
வடிக்கின்ற கண்ணீரில்
வடியாத வேதனை
வாழ முடியா ரோதனை
பாவியே பதரே பதடியே
உத்திரத்திற்காகா உதியமரமே
பகுத்தறிவில்லா மிருகமே
ஒன்றா இரண்டா உனக்கு காரணம்
வெறியாட்டம் ஆட விளைவதற்கு
உள்ளே வளர்க்கிறாய் ஒரு பூதம்
முளையில் கிள்ளாத ஆலவிருட்சம்
கதைகளில் கேட்ட ராட்சத அரக்கன்
உரைக்கும் வார்த்தைக்கு பொருளறியாய்
உடைக்கும் பொருளின் மதிப்பறியாய்
நாயாய் பேயாய் திரிந்திட
நாறப்பிறவி எடுத்தாய்
நம்பி வந்தவளின் நரகம் ஆனாய்
நல்லறத்தை கொன்றாய்
நட்டாற்றில் விட்டாய்
மொத்தமாய் தனை மறந்து
மனித சாடையை தொலைத்து
கூசாமல் தலை நிமிர்த்தி
வேசம் மட்டும் போடுகிறாய்
யாரை ஏமாற்ற உன்னைத் தவிர
வெக்கமில்லை துக்கமில்லையுனக்கு
அதையெல்லாம் ஏற்றினாய் அவள் தோளில்
பேதை சுமக்கின்ற சிலுவை
ஆணியறையும் நாள் என்று
ஆனந்த முடிவெப்போது
ஒளியில்லா விழி அருளில்லா வதனம்
உயிரில்லா உன் உடலின் பெயரென்ன
பூ சூடிய பொட்டு வைத்த
விதவை ஒருத்தி உன் வீட்டில்
ஊரறியா ஊமை நாடகம்
இஷ்டம் போல் வளர்ந்தாய்
இடிப்பாரின்றி கெட்டாய்
இறுமாப்பில் மிதக்கிறாய்
இம்மியும் அறியாய் நிசத்தை
இப்படியே இருக்கப் போகிறாயா
(ஒரு சோகக் கதையை படித்தபின் பொங்கிய ஊற்றின் பெருக்கிது)