அமெரிக்காவின் பரபரப்பான பாஸ்டன் ஏர்போர்ட்டில் குனிந்து கைபேசியில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்த ரகுவின் நாசியில் பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் மெல்லிய ஓடிகொலோன் வாசனை வீசியதும் திடுக்கிட்டு தலை நிமிர்ந்து பார்த்தான். அதே வினாடி அவனைத் தாண்டிச் சென்ற புடவை அணிந்த பெண்ணும் அதிர்ச்சி அடைந்தது போல் நின்று அவன் முகத்தை பார்த்தாள்.
சுமதிதானா இவள் என்று உற்றுப் பார்த்தான். அவளேதான். சந்தேகமேயில்லை. அதே நேர் கொண்ட பார்வை. தலை முடி பாதி நரைத்திருந்தது. டை அடிப்பதை அறவே வெறுப்பவள் என்று அவனுக்கு அப்போதே தெரியும்.
அவளுக்குப் பிடித்த அதே ஓடிகொலோன் வாசனை அவளிடமிருந்து வந்ததுதான் அவனை உலுக்கி எழுப்பியது. அவள் கண்களிலும் நம்ப முடியாத அதிர்ச்சியும் ஆவலும் தெரிந்தது. அவள்தான் முதலில் மௌனத்தை கலைத்தாள்.
“ரகு, நீயா? நீ எப்படி இங்கே?”
“சுமதி, நான் கேட்க வேண்டியதை நீ கேட்கிறாய்!”
இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. நேற்றுத்தான் பிரிந்தவர்கள் போல் பேசத் துவங்கினார்கள்.
“என் நண்பனை இந்தியாவுக்கு வழியனுப்ப வந்தேன், சுமதி!”
“நான் இங்கே கல்லூரி பேராசிரியர் வேலையில் சேர வந்திருக்கிறேன், ரகு!”
“அப்படியா? ரொம்ப சந்தோஷமா இருக்கு, சுமதி! வா, அங்கே காப்பி சாப்பிட்டுக்கொண்டே பேசலாம்!”
கொசுவத்திச் சுருள் போல் கடந்த காலத்து காட்சியாக இருபது வயதை தாண்டிய காதலர்கள் இருவர் பிரிய நேர்ந்தது கண் முன் விரிகிறது.
வெளியூரிலிருந்து ரகுவின் பக்கத்து வீட்டிற்கு குடி வந்த குடும்பத்தில் சுமதி என்று ஒரு சூட்டிக்கையான பெண் இருந்தாள். அவளும் ரகு படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்தாள். துருதுருவென்றிருந்த அந்த பெண்ணுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். நிமிர்ந்த நடையும், தைரியமான பேச்சும், புத்திசாலித்தனமும் கொண்ட சுமதியை எல்லோருக்கும் பிடிக்கும்.
நாளாக நாளாக ரகு சுமதிக்கிடையேயான நட்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. பள்ளிப்படிப்பு முடிந்ததும் இருவரும் வெளியூரில் ஒரே கல்லூரியில் சேர்ந்து ஹாஸ்டலில் தங்கி வேறு வேறு பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்து படிக்கத் துவங்கினார்கள். நட்பில் துவங்கிய அவர்கள் காதல் அழகாக வளர்ந்தது. படிப்பு முடியும் காலமும் நெருங்கியது.
ஒரு நாள் மதிய இடைவேளையில் சுமதி முகம் நிறைய சந்தோஷத்துடன் ரகுவை தேடி வந்தாள்.
“என்ன விஷயம், சுமதி? இவ்வளவு சந்தோஷமா இருக்கே?” என்று கேட்டான் ரகு.
‘இப்போதான் அப்பாகிட்டேர்ந்து போன் வந்துச்சி. நாளைக்கு அப்பா ஊர்லேர்ந்து வர்றார். கூட அத்தை மகன் முரளியும் வர்றான்..
“ஓ!” என்றான் ரகு. அந்த ஒற்றை எழுத்தின் உச்சரிப்பிலிருந்த ஏற்ற இறக்கத்தில் ஓராயிரம் அர்த்தங்கள் தொனித்தது. அதை கவனிக்காமல் அவள்
“முரளியை மாலுக்குக் கூட்டிட்டு போகணும். ஷாப்பிங் பண்ணிட்டு, சாப்பிட்டுட்டு ஒரு மூவி பார்த்துட்டு வரணும்.” என்றாள் உற்சாகம் பொங்க.
அவனிடமிருந்து மீண்டும் ஒரு “ஓ!” இம்முறை மேலும் அழுத்தமான எள்ளலுடன். கொஞ்சம் குழப்பத்துடன் அவனை பார்த்தாள் சுமதி.
“முரளியுடன் நாளை பொழுதை எப்படி கழிப்பது என்று ரொம்ப மெனக்கெட்டு திட்டமெல்லாம் போட்டிருக்கிறாய்!”
“ஆமா. அவன் ரொம்ப கலகலப்பானவன். சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். அவனுடன் இருக்கும்போது பொழுது போவதே தெரியாது.”
“அப்படியா? அவர் என்ன படித்திருக்கிறார்? இப்போது என்ன வேலை செய்கிறார்?”
“என்ன ரகு இது? அவர் என்கிறாய் முரளியை! அவன் பத்தாம் வகுப்பு படிக்கும் சின்னப் பையன்!” ரகுமிடமிருந்து இதற்கும் “ஓ!” இந்தத் தடவை காற்றுப்போன பலூன் மாதிரி ஒரு பாவத்தில்.
சுமதியின் பெண்மன உள்ளுணர்வு விழித்துக்கொண்டது. ரகுவின் விபரீத கற்பனையையும், அர்த்தமில்லாத பொறாமையையும் தெளிவாக புரிந்து கொண்டாள். மனசுக்குள் கசந்தது.
ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், “அப்ப நான் வரட்டுமா, ரகு?” என்று கேட்டபடியே அவள் வகுப்பறையை நோக்கி நடந்தாள்.
அடுத்து வந்த வாரங்களில் ஒரு நாள் காலேஜ் லைப்ரரியை தாண்டி இருவரும் சென்று கொண்டிருக்கையில் உள்ளேயிருந்து லைப்ரேரியன் “சுமதி, ரொம்ப நாளா கேட்டுக்கிட்டிருந்தியே அந்த புத்தகம் இன்று சாயந்திரம் ரிடர்ன் ஆகுது. ஹாஸ்டலுக்கு போகும் முன்னால வந்து வாங்கிக்கோம்மா, நான் காத்திருக்கிறேன்.”
“சரி ஸார்! அப்படியே செய்றேன்.” என்று சுமதி மகிழ்ச்சியாக பதிலளித்துவிட்டு நடந்தாள்.
சிறிது தூரம் சென்றதும் ரகு,”கிழத்துக்கு ஜொள்ளு ஜாஸ்தி! என்ன தைரியமா உன்னை தனியா வரச்சொல்லுது? நீ காலையில் போய் வாங்கிக்கோ” என்று கடுகடுத்தான்.
கராத்தேயில் கருப்பு பெல்ட் வாங்கியிருந்த சுமதிக்கு அவன் எச்சரிக்கை அநாவசியமாகப்பட்டது. எரிச்சலாகவும் இருந்தது.
அடுத்தடுத்து இதே மாதிரி அவனிடமிருந்து அதிக கட்டுப்பாடுகள் வந்தது. இறுதியாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்கள் பிரிவுபச்சார விழாவில் அவள் அழகாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதை அனைவரும் பாராட்டியபோது அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
முக்கியமான இறுதியாண்டு தேர்விற்கு படிக்க உட்கார்ந்தால் அவள் மனதில் நடந்த பிரளயத்தால் அவள் கவனம் சிதறியது. கவலை அதிகரித்தது.
இவனோடு சேர்ந்து வாழப்போகும் வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்கவே மிரட்சியாக இருந்தது. அமைதியாக உட்கார்ந்து ஆழமாக சிந்தித்து ரகுவின் போக்கை தெளிவாய் உணர்ந்து ஒரு நல்ல முடிவை எடுத்த பிறகே அவளால் நிம்மதியாய் பரிட்சைக்கு படிக்க முடிந்தது.
பரிட்சை முடிந்த பிறகு ஹாஸ்டலை விட்டு வெளியேறும் நாளும் வந்தது. ரகு சுமதியின் அருகில் வந்து அமர்ந்தான்.
“சுமதி, நாம் நமது வருங்காலத்தைப் பற்றி, நம் திருமணத்தைப் பற்றி திட்டமிட வேண்டும். நம் பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க வேண்டும்” என்றான்.
சுமதியோ, “நாம் இருவரும் சந்தோஷமாய் சேர்ந்து வாழ முடியும் என்று எனக்கு தோன்றவில்லை, ரகு! என் சுதந்திரத்தையோ, சுயமரியாதையையோ என்னால் இழக்க முடியாது. நீ என் மீது அத்து மீறி அதிகாரம் செய்ய விரும்பும் ஆணின பிரதிநிதியாய் இருக்கிறாய். அதற்கு நான் உடன்பட முடியாது.”
ரகுவின் கலங்கிய முகத்தை பார்த்தபடியே சுமதி சொன்னாள் "ரோஜா இதழ்கள் தூவிய பாதையில் தான் பாதம் பதித்து நடக்க விரும்பும் பேராசைக்காரியில்லை நான். ஆனால் நெருஞ்சி முள் இரைந்து கிடக்கும் பாதையில் நடக்கத் துணியும் பைத்தியமுமில்லை. நாம் நல்ல நண்பர்களாய் பிரிவோம்” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டாள்.
அதற்குப் பிறகு இருவரும் சந்திக்கவேயில்லை. அவள் டில்லி கல்லூரி ஒன்றில் பணி புரிய சென்றுவிட்டாள். அவன் சென்னையிலேயே ஒரு வேலை தேடிக்கொண்டான்.
முப்பது வருடம் கழித்து பாஸ்டன் நகரில் இருவரும் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டார்கள்.
"பத்து வருஷமாக இங்கேதான் வேலை பார்க்கிறேன், சுமதி!" என்றான் ரகு.
"உங்கள் குடும்பத்தையும் அழைத்து வந்துவிட்டீர்களா, ரகு?" என்று வினவினாள் சுமதி.
பெரிய நகைச்சுவையை கேட்டது போல் சிரித்துவிட்டு, "நான் கல்யாணமே செய்துகொள்ளவில்லை, சுமதி! உன்னுடன் மானசீகமாக வாழ்ந்த வாழ்கையை மறக்க முடியவில்லை, சுமதி!"
பிரமிப்புடன் பார்த்தவளிடம், "உன் குடும்பம் எப்போது இங்கே வரப்போகிறது, சுமதி?" என்று கேட்டான்.
சோகமான குரலில் "எனக்கும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள தோன்றவில்லை. பெற்றோர்கள் ரொம்ப நச்சரித்துப் பார்த்துத் தோற்றுப்போனார்கள்."
இருவர் கண்களும் நெடுநேரம் நேரூக்கு நேர் நோக்கிய போது நிறைய செய்திகளை பரிமாறிக் கொண்டன.
"ஒண்டிக்கட்டையாய், சுதந்திரமாய் வாழ்ந்தாலும் ஒரு இனம்புரியாத வெறுமை என்னை வாட்டுகிறது, சுமதி!"
"நானும் எவ்வளவோ சாதித்த பிறகும் ஏதோ குறைவதாக என் தனிமை என்னை சுட்டுக்கொண்டே இருக்கிறது, ரகு!"
சிறிது நேர கனத்த மௌனத்திற்குப் பிறகு சுமதி தொடர்ந்தாள்.
"உன் ஆதிக்கத்தில் மாட்டிக்கொண்டு ஆயுளுக்கும் அவஸ்த்தைப்படக்கூடாது என்று நான் பயந்தது நிஜம். ஆனால் கரையிலேயே நின்று கொண்டு குளிப்பதெப்படி? சம்சார சாகரத்தில் இறங்க தைரியமில்லாமல் போய்விட்டதே!"
அளவிட முடியாத சோகத்துடன் ரகு சொன்னான், "வாலிப வேகத்தில், உன் மேலிருந்த அளவு கடந்த காதலில், நான் அத்துமீறி அதிகாரம் செய்தது தவறு என்று வயது கூட கூட புரிய ஆரம்பித்தது, சுமதி! விலை மதிப்பில்லாத என் பொக்கிஷத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் அரக்கனாக நடந்து கொண்டிருந்திருக்கிறேன்."
"நான் என் சுதந்திரத்தை இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் உன்னை தவறாக புரிந்துகொண்டேன் என்று ரொம்ப காலம் கழித்துத்தான் எனக்கும் புரிந்தது, ரகு!"
மீண்டும் நான்கு கண்களின் நீண்ட சந்திப்பு. பிறகு இருவர் முகத்திலும் பிரகாசமான புன்சிரிப்பு. பகலவனின் வரவில் விலகும் பனிமூட்டம் போல் பல்லாண்டு கால சோகம் கரைந்தது.
அகங்காரம், அறியாமை இருள் அகல இத்தனை ஆண்டுகள் தேவைப் பட்டிருக்கிறது. அவசரமாய் எடுத்த முடிவை சாவகாசமாய் ஆராய்ந்து பார்த்தாயிற்று. நல்ல துணையின் அத்தியாவசியத்தை உணர்ந்தாயிற்று. தனிமைத் தீயின் வெக்கையை போதுமான அளவு அனுபவித்தாயிற்று.
ஆண்டவன் கருணையால் இருவர் துன்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வந்துவிட்டது. தாமதமானாலும் தடதடத்து ஓடிய நதி சமுத்திரத்தில் சங்கமிக்கும் தருணம் கலங்கிய குட்டை போலிருந்த மனதுடன் பிரிந்தவர்கள் தெளிந்த ஓடையாய் சேரும் ப்ராப்தம் இருந்திருக்கிறது. சூத்திரதாரியின் திட்டம் இதுவாக இருந்திருக்கிறது.
அலை அலையாய் எழும்பிய எண்ணங்களில் இருவரும் மூழ்கி கிடந்து விட்டு சுற்றுப்புற பிரக்ஞை வர அடுத்து ஆக வேண்டியதை பார்க்கும் முடிவோடு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க இரண்டு இதயமும் ஒரே தாளகதியில் அடித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.
காட்டாற்று வெள்ளமாய் அடித்துச் சென்ற கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டு அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று சுதாரிக்கலானான் ரகு.
'என் இதயக்கதவோடு இப்போது என் இல்லக் கதவும் என் மகாராணிக்காக திறந்திருக்கிறது" என்றான் ரகு முகம் நிறைய மகிழ்ச்சியோடு.
சுமதி மனசுக்குள் பொங்கிய சந்தோஷத்தை மறைக்க முடியாமல் மறைத்துக்கொண்டு, "குடியேற மகாராணிக்கு ஆட்சேபணை இல்லைதான். ஆனால் அதற்கு சட்டம், சம்பிரதாயம் எல்லாம் கிடையாதா?" என்று முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு கேட்டாள் சுமதி.
"இல்லாமலென்ன? முதல் வேலையே அதுதானே? உன்னை சட்டப்படி என்னவளாக்குவேன்..இன்று மட்டும் உன்னை என் விருந்தாளியாக நினைத்துக்கொள். ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க மாட்டோமா?" என்றான் ரகு பொறுப்பான ஆண்மகனாக.
லக்கேஜை பெற நடந்தவர்கள் மனம் நிறைய குதூகலம்.