எந்த சித்தாந்ததிற்குள்ளும் சிக்கிவிடாமல் சௌக்கியமாக நழுவி
ஓடிக்கொண்டிருக்கும் நான் இன்று முதன்முறையாக ‘அனாத்மா’ என்ற வார்த்தையை கீதை
உரையில் கேட்டேன்! கிர்ரடித்த தலைக்குள் உதித்த கவிதை:
ஹே, ஆத்மாவே!
நிழலும் நிசமும் போல்
என்னோடு ஒட்டியிருப்பவனே!
நிச்சயமாய் சதிபதியாய்
நகமும் சதையுமாய் நாமில்லை
பசியறியாய் ருசியறியாய்
பனியில்லை வெயிலில்லை
கண்டித்தாயா கை தட்டினாயா
கூட அழுதாயா கூடி களித்தாயா
தாமரை இலை நீர் போல் நீ
ஒட்டாமல் ஒதுங்கி நிற்கிறாய்
லௌகீகத்தில்
உருண்டு புரள்கிறேன்
ஒய்யாரமாய் மோன தவத்தில் நீ
பந்தபாசத்தில் பிணையும் ஏக்கம் எனக்கு
பரமாத்மாவில் இணையும் நோக்கம் உனக்கு
விசித்திரமான ஒட்டுண்ணியே உடும்பே
யாருக்கு வந்த விருந்தோ என இருக்கின்றாய்
வசிக்க ஒரு வாடகை வீடோ நானுக்கு
அனாத்மா என்னுடன் நீ உறைய காரணமென்ன
அகமெனை அழிக்க சதியோ
பிரம்மத்தில் சேரும் விதியோ
பெரிய கேள்விக்கு பதிலென்ன
சிறிய மூளைக்கு புரிவதெப்போ