Sunday, January 28, 2018

தமிழா! தமிழா! விழித்தெழு! செயல்படு!

IndiBlogger - The Indian Blogger Community தமிழா! தமிழா! விழித்தெழு! செயல்படு!
திரைகடலோடி திரவியம் சேர்த்த தமிழா!
சொந்த மண் பாலைவனமாகுது தமிழா!
சூதும், சூழ்ச்சியும் உன்னைக் கவ்வுது தமிழா!
முத்தமிழை வளர்த்தாய் தமிழா!
மூவேந்தருனை சீராட்டினர் தமிழா!
மூவாயிரம் வருட சரித்திரத் தமிழா!
வீரத்தமிழச்சியின் முலைப்பால் உண்ட தமிழா!
மானம், ஞானம் நிறைந்த தமிழா!
மாண்புடன் வணிகம் வளர்த்த தமிழா!
அகமும், புறமும் மிளிரும் தமிழா!
ஆயக்கலை தாலாட்டில் உறங்கிய தமிழா!
காவியங்கள் படைத்த பெருந்தமிழா!
பெருமைகள்,பேறுகள் காக்க வா தமிழா!
உன் சந்ததிக்கு கொண்டுசெல்ல வா தமிழா!
பேய் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் பிணம் தின்னும்
பாரதியாம் ஞானக்கிறுக்கனின் சத்தியவாக்கு
கண் முன்னே அரங்கேறுது, ஐயகோ! காண்கிலையோ?சோறுடைத்து சோணாடு - அது பழைய கதை!
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சையென்றது
மறந்து, மறைந்து போகும் கடந்தகால பெருமை!
ஏன்? எதற்கு? எப்படி? என
அத்தனையையும் வினவச் சொன்னான் கிரேக்க ஞானி சாக்ரடீஸ்!வற்றாத நதி வரண்டதேன்?
வயலெல்லாம் காய்ந்து போனதேன்?
விவசாயிகள் மாய்ந்து போவதேன்?
விளைச்சல் நிலத்தை பாலைவனமாக்கும்
விபரீத சதித்திட்டம் விளங்கவில்லையா?
நெடுவாசல், நன்னிலம், கதிராமங்கலம் சொல்லும் சேதி என்ன?நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களென்ன?
மண்ணை மலடாக்கி பொன் குவிக்கும் பேராசை புரியவில்லையா?அசுர பலம் கொண்ட பகாசுரர்க்கு
கால் காசுக்கு மண்ணை விற்குது அரசு;
புதிய சாலைகள் அமைக்குது;
அதிக புகைவண்டிகள் விட ஏற்பாடு;
பொதுமக்கள் நலனுக்கா? இல்லவே இல்லை!
அசுரர்க்கு தாரை வார்க்க சாகர்மாலா துறைமுகங்கள்!
வெட்டிய மலைகளின் கற்களை,
சுரங்கத்து கணிமங்களை
சுளுவாக நாடு கடத்தி கொடுங்கோலர் பை நிறைக்க!
புதிர் துண்டுகள் போல் பரவிக்கிடக்கும்
பாவிகளின் சதித்திட்டங்களை
இணைத்துப்பார் இணையில்லாத்தமிழா!
வெட்டவெளிச்சமாய் தெரியும் மொத்தத் தந்திரமும்!
பீட்டாவை ஏவி மாணவனை ஒடுக்கி,
பாவத்துக்கு அஞ்சாமல் மீனவனை அடக்கி,
உண்ணும் உணவை உற்பத்தி செய்யும்
அப்பாவி விவசாயியை பூண்டோடழித்து
கண்டவன் உன் மண்ணை சுரண்டிக் கொழுக்க
சும்மாயிருந்து அனுமதிக்கப் போகிறாயா தமிழா?
வீரனின் மகனாய், வீரனின் தந்தையாய்
அறமும், மறமும் கட்டிக்காத்து தரணியாண்ட
வீரத்தமிழ் பரம்பரையே! எங்குல சிங்கமே!
திரண்டு வா! வெகுண்டு வா! விரைந்து வா!
IndiBlogger - The Indian Blogger Community