பல வருடங்களுக்கு முந்தைய ஒரு குடும்ப விழாவிற்காக நான் தயாரித்த அக்கா
தங்கைக்கு இடையிலான கற்பனை உரையாடலில் ஒளிந்துள்ள ஊர்களின் பெயர்களை கண்டுபிடித்து
எண்ணிச்சொல்லும் சுற்றுலாப் போட்டி:
அக்கா:என்னது, ஊட்டிவிட்டாதான் உன் மக சாப்பிடுவாளா?
தங்கை:இல்லையில்ல. காலைல சுட்ட பூரி இரண்டு கிடந்துச்சி. காஞ்சி போறதுக்குள்ள ஆளுக்கொரு
வாய் பிச்சி போட்டுக்கிட்டோம்.
அக்கா:உன் மகளுக்கு நல்லா தடுமன் பிடிச்சிருக்கோ? கண்ணு கோவைப்பழமா சிவந்திருக்கு!
தங்கை:ஆமா,”சீக்கிரமா குளி, தலையை உணர்த்து’’ன்னா கேட்டாத்தானே?
அக்கா:சின்ன வயசிலேர்ந்தே நம்ம பிள்ளைங்க அப்படித்தானே-“வெந்நிய ஊத்து-குளிச்சிக்கிட்டே இருக்கோம்”பாங்க.
தங்கை: உங்க புது வயர் கூடை டிசைன்
நல்லாருக்கே! போடறது கஷ்டமாக்கா?
அக்கா:இல்ல. ரொம்ப சுலபம். பாய்
பின்னல் மாதிரி ஈசியா போட்டுறலாம். உன் குரோஷா பைக்கு இது ஈடில்லியே!
தங்கை:கூடைக்குள்ள காசிருக்கு! கடைக்கு
போறதுக்காக்கா?
அக்கா:ஆமா. உங்க ஊரு அப்பளப்பூனா எங்க
வீட்டுல எல்லோருக்கும் பிடிக்கும்.
தங்கை:எலெக்க்ஷன் நடக்கப்போறதினால
கடைத்தெருவுல கூட்டமா இருக்கு.
அக்கா:ஆமா. எங்க பாத்தாலும் கம்பம்
நட்டு கொடி பறக்குது.
தங்கை:முந்தி மாதிரி நெல்லை காயப்போடறதுகூட
இல்ல.
அக்கா:ஆமா, வேலைக்காரிய நிறுத்திட்டியாமே?
தங்கை: அவ வீடு வீடா போயி திருச்சி
திருச்சி பேசுறது எனக்கு பிடிக்கல.
அக்கா:நிறுத்தினதுக்கு தகராறு
பண்ணியிருப்பாளே?
தங்கை:ஆமா. ஆ ஊனு குதிச்சா. “சரிதான்
போடி”ன்னுட்டேன்.
அக்கா:உன் புது வாஷிங் மிஷின் அழகாயிருக்கே!
தங்கை:தேனி மாதிரி சேமிச்சி நாயமா
வாங்கிட்டேன். நேத்து டிவி சீரியல் முழுக்க பாத்தீங்களாக்கா?
அக்கா:இல்ல. மணியாச்சி. ரொம்ப தூக்கம்
வந்ததால படுத்துட்டேன். கடைசியா என்ன நடந்துச்சி?
தங்கை:வில்லன் வந்து மிரட்டிட்டு
போனதும் ஹீரோ மது ரைபிளோட கிளம்புற மாதிரி முடிஞ்சிது.
அக்கா:சுஷ்மிதா சென்னை நடிக்க
கூப்பிட்டிருக்காங்க பாத்தியா?
தங்கை:ஆமா. மாடல் செய்யறவங்க
சினிமாகாரங்ககிட்டயிருந்து தப்புறதில்லை.
அக்கா:பொடுகுக்கு கை மருந்து கேட்டியே,
அப்புறமா ஞாபகம் வந்துச்சி.
தங்கை:உம், உம், சொல்லுங்கக்கா.
அக்கா:ஆனா, அதுல ஒரு சிக்கல். கத்தாழை
செடிக்கு எங்க போறது?
தங்கை: நாட்டு மருந்து கடையில
கிடைக்கலாம்.
அக்கா:ஆமா, உன் புது வைர மோதிரம்
செஞ்சி வந்துருச்சா?
தங்கை:அடுத்த வாரம் வந்துரும்.
அக்கா: நா கைக்கு பிரேஸ்லட் செய்யலாம்னு இருக்கேன்.
தங்கை:ஆமா, திருப்ப திருப்ப வளையல்
செய்றதுக்கு புது மாதிரியா இருக்கும்.
அக்கா:நல்ல மழை பெஞ்சிதோ? வர்ற வழியில தண்ணி
பெரிய குளம் மாதிரி தேங்கியிருந்திச்சி.
தங்கை:ஆமா: கொசு பெருகிப் போச்சி.
அதோடு ஈ ரோடு மேல அத்தனை கடையிலயும் மொய்க்கிது.
அக்கா:என் சேலைல கீழ கரைல கொஞ்சம்
சகதியாயிருச்சி.
தங்கை:அடடா! சீக்கிரமா சோப்பு போட்டு
அலசிருங்கக்கா.
அக்கா:என்ன செஞ்சாலும் சேறோட சாயல்
குடியிருக்கும்னு நினைக்கிறேன்.
தங்கை:நானும் இப்படித்தான் சேலைய உசர
தூக்க கூச்சப்பட்டு கோட்டை விட்டுருவேன்.
அக்கா:அடுப்புல என்ன தக்காளி கொச்சியா
வச்சிருக்க?
தங்கை:ஆமா. இறக்கணும். வாங்க
சாப்பிடலாம்.