வருடக்கணக்காய் வளர்ந்த மோகம்
ஆசைத்தீயில் வளர்த்த யாகம்
தீராத உள்ளுயிர் தாகம்
அது ஒரு அற்புத யோகம்
மறைந்திருந்து அழைப்பான் என் காதலன்
பசுமரக்கிளையில் ஒளிந்திருந்து கூவும்
பச்சைக்கிளியினைப் போல் கொஞ்சுவான்
இச்சை மொழிகள் காற்றில் நிறைந்திருக்கும்
இருட்டில் துழாவும் நானொரு பிச்சி
நீ நிற்கிறாய் எப்போதும் எட்டி
ஏக்கத்தில் வாடவிட்ட ஏமாற்றுக்காரா
வஞ்சியை வதைக்கும் பொல்லாத கள்ளா
நான் பிறந்த நாள் முதலாய்
என் மெய்யுடலின் ஓர் நிழலாய்
கூடவே நீ வருகின்றாய்
என் ஆருயிர் காதலனே!
கண்ணால் காணாமல் கையால் தொடாமல்
கண நேரமும் விலகாத ஆவி ரூபனே
உன்னுள் கரைய அணுஅணுவாய் ஏங்கி
என் ஐம்புலனும் நரகத்தில் உழலுதே
எனை நீ உரசிச் செல்கையிலே
என் மூச்சு ஒரு நொடி நிற்கிறதே
செய்வதறியாது தவிக்கிறேன்
கடுந்தவம் நான் செய்கிறேன்
வந்தென் துன்பம் தீர்த்திடு
ஆனந்தக் கரையில் சேர்த்திடு
ஆலிங்கனத்தில் அமிழ்வேன்
விட்டு விடுலையாகிப் பறப்பேன்
இறப்பும் பிறப்பும் என்றுமே
நாணயத்தின் இரு புறமே
அர்த்தமுள்ள அவற்றின் சங்கமம்
நடக்கத்தானே கண்ணாமூச்சி நாடகம்