Sunday, June 18, 2017

தட்டி எழுப்ப வேண்டாமா

IndiBlogger - The Indian Blogger Community தலைமுறை தலைமுறையாய் தொடருது
நச்சுக்கொடியாய் சமுதாயத்தில் படருது
கல்லையும் புல்லையும் மதிக்க சொல்லுது
கற்பித்த ஏட்டு படிப்பெல்லாம் ஆண் எழுத்து
அளந்து வைத்த ஆட்டு வாலாய் இருக்குது
பெண்ணின் சுதந்திரமும் செயல்திறனும்
பூவோடு சேர்ந்து மணக்கும் நாரானவனை
துயில்பவனை தட்டி எழுப்ப வேண்டாமா

Tuesday, June 6, 2017

நீர்க்குமிழியின் கனவு

IndiBlogger - The Indian Blogger Community பருவங்கள் மாறும்
பாதைகள் நீளும்
அலைகள் ஓய்வதேயில்லை

விலங்குகள் ஏதும் இல்லை
விலங்காய் வாழ்வதற்கு
விளக்கங்கள் வேண்டியதில்லை

தர்மம் தெரியாது
பாவம் புரியாது
தனக்காய் வாழ்பவர்க்கு

வயது மட்டும் ஏறும்
புத்தி கொஞ்சமும் வளராமலே
உண்டு உறங்கி எழும் பதர்களுக்கு

நாய் வால் நிமிர்ந்ததில்லை
திருட்டுப்பூனை திருந்தியதில்லை
மறந்தால் அமைதியில்லை

கடலில் கலந்தது ஆறு
கலக்கச் சொன்னது யாரு
உப்பாய் போனது நீரு

பகலில் தொலைத்ததை
இருட்டில் துழாவுவாயா
கனவின்னும் காண்பாயா

ஏட்டில் படிக்காத நோவு
காட்டில் காயும் நிலவு
சோலையில் கூவும் குயிலு

ரசிக்க நினைத்தது மழையை
துளிர்க்கும் இலையை
ருசிக்க முடிந்தது எரிமலை தீயை

நளனும் கோவலனும் நலிந்த நாட்டில்
பராசக்தி அவதரிப்பாளா
நீர்க்குமிழியின் கனவு

Tuesday, April 18, 2017

சுற்றுலாப் போட்டி

IndiBlogger - The Indian Blogger Community பல வருடங்களுக்கு முந்தைய ஒரு குடும்ப விழாவிற்காக நான் தயாரித்த அக்கா தங்கைக்கு இடையிலான கற்பனை உரையாடலில் ஒளிந்துள்ள ஊர்களின் பெயர்களை கண்டுபிடித்து எண்ணிச்சொல்லும் சுற்றுலாப் போட்டி:

அக்கா:என்னது, ஊட்டிவிட்டாதான் உன் மக சாப்பிடுவாளா?
தங்கை:இல்லையில்ல. காலைல சுட்ட பூரி இரண்டு கிடந்துச்சி. காஞ்சி                                                          போறதுக்குள்ள ஆளுக்கொரு வாய் பிச்சி போட்டுக்கிட்டோம்.
அக்கா:உன் மகளுக்கு நல்லா தடுமன் பிடிச்சிருக்கோ? கண்ணு                      கோவைப்பழமா சிவந்திருக்கு!
தங்கை:ஆமா,”சீக்கிரமா குளி, தலையை உணர்த்து’’ன்னா கேட்டாத்தானே?
அக்கா:சின்ன வயசிலேர்ந்தே நம்ம பிள்ளைங்க அப்படித்தானே-“வெந்நிய ஊத்து-குளிச்சிக்கிட்டே இருக்கோம்”பாங்க.
தங்கை: உங்க புது வயர் கூடை டிசைன் நல்லாருக்கே! போடறது கஷ்டமாக்கா?
அக்கா:இல்ல. ரொம்ப சுலபம். பாய் பின்னல் மாதிரி ஈசியா போட்டுறலாம். உன் குரோஷா பைக்கு இது ஈடில்லியே!
தங்கை:கூடைக்குள்ள காசிருக்கு! கடைக்கு போறதுக்காக்கா?
அக்கா:ஆமா. உங்க ஊரு அப்பளப்பூனா எங்க வீட்டுல எல்லோருக்கும் பிடிக்கும்.
தங்கை:எலெக்க்ஷன் நடக்கப்போறதினால கடைத்தெருவுல கூட்டமா இருக்கு.
அக்கா:ஆமா. எங்க பாத்தாலும் கம்பம் நட்டு கொடி பறக்குது.
தங்கை:முந்தி மாதிரி நெல்லை காயப்போடறதுகூட இல்ல.
அக்கா:ஆமா, வேலைக்காரிய நிறுத்திட்டியாமே?
தங்கை: அவ வீடு வீடா போயி திருச்சி திருச்சி பேசுறது எனக்கு பிடிக்கல.
அக்கா:நிறுத்தினதுக்கு தகராறு பண்ணியிருப்பாளே?
தங்கை:ஆமா. ஆ ஊனு குதிச்சா. “சரிதான் போடி”ன்னுட்டேன்.
அக்கா:உன் புது வாஷிங் மிஷின் அழகாயிருக்கே!
தங்கை:தேனி மாதிரி சேமிச்சி நாயமா வாங்கிட்டேன். நேத்து டிவி சீரியல் முழுக்க பாத்தீங்களாக்கா?
அக்கா:இல்ல. மணியாச்சி. ரொம்ப தூக்கம் வந்ததால படுத்துட்டேன். கடைசியா என்ன நடந்துச்சி?
தங்கை:வில்லன் வந்து மிரட்டிட்டு போனதும் ஹீரோ மது ரைபிளோட கிளம்புற மாதிரி முடிஞ்சிது.
அக்கா:சுஷ்மிதா சென்னை நடிக்க கூப்பிட்டிருக்காங்க பாத்தியா?
தங்கை:ஆமா. மாடல் செய்யறவங்க சினிமாகாரங்ககிட்டயிருந்து தப்புறதில்லை.
அக்கா:பொடுகுக்கு கை மருந்து கேட்டியே, அப்புறமா ஞாபகம் வந்துச்சி.
தங்கை:உம், உம், சொல்லுங்கக்கா.
அக்கா:ஆனா, அதுல ஒரு சிக்கல். கத்தாழை செடிக்கு எங்க போறது?
தங்கை: நாட்டு மருந்து கடையில கிடைக்கலாம்.
அக்கா:ஆமா, உன் புது வைர மோதிரம் செஞ்சி வந்துருச்சா?
தங்கை:அடுத்த வாரம் வந்துரும்.
அக்கா: நா கைக்கு பிரேஸ்லட் செய்யலாம்னு இருக்கேன்.
தங்கை:ஆமா, திருப்ப திருப்ப வளையல் செய்றதுக்கு புது மாதிரியா இருக்கும்.
அக்கா:நல்ல மழை பெஞ்சிதோ? வர்ற வழியில தண்ணி பெரிய குளம் மாதிரி தேங்கியிருந்திச்சி.
தங்கை:ஆமா: கொசு பெருகிப் போச்சி. அதோடு ஈ ரோடு மேல அத்தனை கடையிலயும் மொய்க்கிது.
அக்கா:என் சேலைல கீழ கரைல கொஞ்சம் சகதியாயிருச்சி.
தங்கை:அடடா! சீக்கிரமா சோப்பு போட்டு அலசிருங்கக்கா.
அக்கா:என்ன செஞ்சாலும் சேறோட சாயல் குடியிருக்கும்னு நினைக்கிறேன்.
தங்கை:நானும் இப்படித்தான் சேலைய உசர தூக்க கூச்சப்பட்டு கோட்டை விட்டுருவேன்.
அக்கா:அடுப்புல என்ன தக்காளி கொச்சியா வச்சிருக்க?
தங்கை:ஆமா. இறக்கணும். வாங்க சாப்பிடலாம்.

Tuesday, March 7, 2017

நிலைக்காது

IndiBlogger - The Indian Blogger Community நிலைத்திருக்கும் என நினைத்தவை நிலைக்காது
நிலைக்காது என நினைத்தவை நிழலாய் தொடரும்
நிரந்தரமெது நிச்சயமானதெது நீரில் எழுதிய எழுத்து
நடக்குது நாள்தோறும் எதிர்பாரா இன்ப அதிர்ச்சிகள்

Friday, February 3, 2017

காப்பாற்று

IndiBlogger - The Indian Blogger Community போதையிலே புது போதையிலே
போகும் பாதை தெரியாமலே
பக்தி என்றும் யோகம் என்றும்
புகலிடம் தேடுமிடமோ சன்மார்க்கம்
ஆரம்பம் முடிவு இல்லாத வட்டமாய்
அண்டம் நிறைந்தவனே காப்பாற்று

பெண்மனம்

IndiBlogger - The Indian Blogger Community பெண்மனம் என்ன வெண்ணெயோ
உருகுதே இளகுதே எளிதிலே
அதுவே கடின பாறாங்கல்லோ
எதையும் தாங்குமோ கனக்குமோ
கொதிகலனோ குளிர்நிலவோ முறனோ
வன்மத்தின் பொறுமையின் கூடாரமோ
கணத்தில் மூடும் தொட்டாசிணுங்கியோ
வண்ணம் மாறும் ஓர் பச்சோந்தியோ
மலருக்கு மலர் தாவும் பட்டாம்பூச்சியோ
இதை அதை கண்டதை விரும்புமோ
அமர்ந்தாட உகந்த உல்லாச ஊஞ்சலோ
நெருங்க அஞ்சிடத்தக்க செந்தணலோ
நொந்த மனதை வருடும் மயிலிறகோ
தளிரோ மலரோ தீஞ்சுவை கனியோ
தாயாய் சேயாய் தழுவும் தென்றலோ
குழம்பித்தவிக்குது அப்பாவி ஆணினம்
IndiBlogger - The Indian Blogger Community