Thursday, January 14, 2016

வயித்தெரிச்சல்

IndiBlogger - The Indian Blogger Community கை நிறைய காசு புரண்டதுமே
ஹார்மோன் செய்த சேட்டையிலே
வாலிப வயது வேட்கையிலே
வித விதமா அனுபவிக்கயெண்ணி
கலர் கலரா கனவு கண்டேன்
காலாகாலத்தில் வந்த ஒரு
கல்யாண ஆசையிலே நான்
கிறு கிறுத்துப் போயிருந்தேனே
உறவுக்குள்ள பெண்ணிருக்க
வேண்டாமுன்னு உதறிப்புட்டு
நாகரிக பொண்ணு வேண்டி
நாலு பக்கம் தேடியலைஞ்சி
பட்டணத்துப் பாவையை
படித்த மாமேதையை
பதமா கைபிடிச்சேன்
பாங்கா வாழவந்தேன்
சின்ன இடையில் சென்ட்டு மணத்தில்
நளினமான நடை உடையில்
நுனி நாக்கு ஆங்கிலத்தில்
தேன் குடித்த நரியானேன்
நாளாக நாளாக குடித்தனம்
பழகப் பழகப் புரியுது
பல விஷயம் தெரியுது
ஆழமான கடலிது
அரைக்கால் டிரெளசரும்
தொள தொள பனியனும்
கருப்புக் கண்ணாடியும்
காரிலே சவாரியும்
பவுசாத்தான் இருக்குது
பாத்த கண்ணு வெறிக்குது
பசி அதுல அடங்குச்சா
பதில்தானே தெரியல
பாவிப்பய அடிமனசில
படிஞ்சி போன ருசிகள
புரட்டிப்போட முடியலியே
பழசயெல்லாம் மறக்கலையே
நூல் நூலா நூடுல்ஸ
முள்ளு கரண்டியோட வைக்கிறா
நொந்து நூலா போனேனே
நாக்கு செத்துப் போனதே
கல்லு கல்லா இட்டிலி
உப்பு உரப்பில்லா சட்டினி
மஞ்சத்தண்ணியா சாம்பாரு
நல்லாயிருக்கான்னு கேக்குறா
வேகாத தோசையைப் பாத்து
நாந்தான் வெந்துபோனேனே
பூரி சுடவும் தெரியல
கிழங்கு வாய்க்கு விளங்கல
வாயால தாளிச்சா போதுமா
கடுகு உளுந்து பொரிச்ச வாசன வரல
எள்ளும் கொள்ளும் முகத்துல வெடிக்காம போகல
என்னை வறுத்து எடுக்குறா
என்னத்த நான் சொல்ல
மெல்லவும் முடியல
முழுங்கவும் முடியல
முடியுமா இந்தக் கொடுமை
சுள்ளாப்பா புளிக்குழம்பும்
அரைச்சு வச்ச துவையலும்
ஆத்தா உன் கைமணமும்
நினச்சு நினச்சு வேகுறேன்
உள்ளத சொல்ல முடியுமா
யுத்தம் வெல்ல முடியுமா
பங்கு போட வந்தவளை
பகைச்சுக்கொள்ள முடியுமா
சொல்லிக்குடுக்கக் காத்திருக்கா
சுமந்து வளத்த பொம்பள
ரோசம் ரொம்ப பாக்குறா
சுமக்க வந்த பொம்பள
ஆம்பளயில்லாம புள்ள பொறக்குது
ஆம்பளக்கி புள்ள பொறக்குது
மாறிப்போன கலிகாலத்துல
மாறலியே பொம்பள புத்தி
இருந்தும் இல்லாதவனானே
கைக்கெட்டியது வாய்க்கெட்டலியே
நாக்கை வளத்துக் கொண்டதால
வந்ததிங்கே வயித்தெரிச்சல்
முள்ளில் விழுந்த சேலையா
முட்டாளா முழிக்கிறேன்
முழுசா பிழைப்பேனா
மூச்சு முட்டி சாவேனா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community