Monday, October 12, 2015

உலகம்

IndiBlogger - The Indian Blogger Community உலகம் என்பது எத்தனை பேர்? 
ஊகம் செய்திட இயலுமோ? 
கண்டங்கள் அனைத்திலும் உரைபவரா? 
கடல்களின் கரைகளை கடந்தவரா? 
மொழி இனம் அடையாளம் கொண்டவரா? 
முழுமையான நல்லிணக்கம் விளைபவரா? 

வழி காட்டிய வல்லவர்களா? 
வலி நீக்கிய நல்லவர்களா? 
ஒளி கூட்டிய பகலவர்களா? 
எளிதாய் வாழ வைத்தவர்களா? 
அறிவியலாரா? பகுத்தறிவாளரா? 
பண்பாளரா? பலமுள்ளவரா? 

பார்த்தேயிராத நண்பர்களா? 
பக்கத்திலிருக்கும் பகைவர்களா? 
குறை காணும் நக்கீரர்களா? 
நிறைகுடமான தீரர்களா? 
குறும்பான வம்பர்களா? 
பொறுப்பான அன்பர்களா? 

கற்றறிந்த மேதைகளா? 
கற்றும் தெளிவில்லாத பேதைகளா? 
கொடுத்து மகிழும் கர்ணர்களா? 
கொடூரமான கஞ்சர்களா? 
கூட்டுக்குள் ஒடுங்கும் நத்தைகளா? 
குடையாய் விரிந்த ஆலமரங்களா? 

சமர் விரும்பும் சமர்த்தரா? 
சத்தம் போடாத ஆர்வலரா? 
வெள்ளை மனம் கொண்டவரா? 
வேடம் தரித்த வித்தகரா? 
நேசம் தெரியும் முகங்களா? 
மோசம் செய்யும் துரோகிகளா? 

யார்தான் உலகம்? 
யாரோடு ஒன்றாய் உணர்கிறேன்? 
யார் பார்வையை மதிக்கிறேன்? 
யார் எனை மதிக்க விரும்புகிறேன்? 
என்னை நானே வினவுகிறேன் 
என்னுள் விடையை தேடுகிறேன் 

புரிந்தும் புரியாத புதிரோ? 
அறிந்தும் அறியாத ரகசியமோ? 
தெரிந்தும் தெரியாத விபரமோ? 
புள்ளியாய் நானே உலகமோ? 
மெல்ல மெல்ல அது விரியுமோ? 
உறவென்றும், ஊரென்றும், உலகென்றும்? 

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community