Monday, October 12, 2015

வையம் காப்பாளா?

IndiBlogger - The Indian Blogger Community ஆமை போல் ஐம்புலனை 
அடக்கச் சொன்னான் 
அறியாத வள்ளுவன் 
இன்பத்தை அள்ளுவதில் 
இருபாலருக்கும் தெளிவாய் 
இலக்கணம் வகுத்தான் 
முப்பாலும் தொகுத்து 
முழுவதும் உணர்ந்தவன் 

புராண காலம் முதலே 
பிறன்மனை நோக்கலும் 
பரத்தையர் நாடலும் 
புருஷ லட்சணமாம் 
சேல் அகற்றிய மாதர் 
சிலரே இருந்தனர் 
பிறரோ பெரும்பான்மை 
போற்றினர் கற்பை 

வீட்டுக்குள் இயங்கி 
வம்சம் பெருக்கி 
ஆணின் அடியொற்றி 
அவன் சேவையிலே 
வாய் ருசி குறையாது 
வயிற்றை நிறைத்து 
சுற்றம் அணைத்து 
தானும் அடங்கினாள் 

வெளி உலகம் அறியாள் 
வேறு விவகாரம் வேண்டாள் 
சிறப்பான கைநேர்த்தியும் 
சீரான சிந்தனைகளும் 
நேரான நியமங்களும் 
நெறியோடு கடைபிடித்து 
நிம்மதியாய் நடந்திட்டாள் 
நல்வாழ்வை நடத்திட்டாள் 

ஆணைகளை ஏற்றவள் 
ஆண்மகனை சார்ந்தவள் 
கேள்விகள் கேளாதவள் 
நிறைவாக வாழ்ந்தவள் 
புது ஒளியில் குளித்தாள் 
புலன்கள் சிலிர்த்தாள் 
குறைகள் கண்டாள் 
குறுகிப்போனாள் 

கண் விரித்துப் பார்த்தாள் 
ஆண் போக்கை அளந்தாள் 
அவன் பாதையில் நடந்தாள் 
அடக்கம் துறந்தாள் 
அகந்தை வளர்த்தாள் 
கட்டுக்கள் உடைத்தாள் 
காமத்தை போற்றினாள் 
புலன் போதையில் உழன்றாள் 

தான் தன்சுகமென 
தனிப்பாதை வகுத்தாள் 
தாதியாய் பேணவில்லை 
முதியோரை மழலையரை 
தாரமாய் மணக்கவில்லை 
சதியவளிடம் இணக்கமில்லை 
இல்லத்தின் ஒளிவிளக்காய் 
இருந்திட விருப்பமில்லை 

இருட்டியபின்னும் அலுவலாம் 
இடம் மாறி பணிகளாம் 
இடுப்பொடிய நோகிறாள் 
கடுப்படிக்கும் சூழல்களில் 
பந்தயக்குதிரையாய் 
சாதித்து முறிக்கிறாள் 
எதையெதை தொலைத்தாள் 
எதைத்தான் ஈட்டினாள் 


நாணமில்லா கயல்விழிகள் 
மறைக்காத வனப்புகள் 
கொச்சையான அழைப்புகள் 
கூசாத பெண் தேகம் 
காளையாய் மாறிய பெண்கள் 
காளைகள் திணறுவது உண்மை 
ஆண்பெண் சமத்துவமா 
அவரவர் மாண்பின் இறக்கமா 

தளிர்மேனியாள் தாரமா 
குளிர் தருவான தாயா 
கூட வரும் நிழலா 
குடை பிடிக்கும் ஆலா 
பெண்மையின் நிறமெது 
பணமா பதவியா பலமா 
தனைத் தேய்த்து மணப்பாளா 
தானே வையம் காப்பாளா

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community