Monday, October 12, 2015

வாழ்க்கை விளையாட்டு

IndiBlogger - The Indian Blogger Community பரமபத ஆட்டத்திலே 
மாத்தி மாத்தி 
பாம்பு கொத்தினாலும் 
எத்தனையோ ஏணிகள் 
ஏத்திவிட இருந்தனவே 

ஓடுமென்ற குதிரை 
காலை வாரிவிட்டது 
எதிர்பாரா கழுதையும் 
காசை அள்ளித் தந்தது 
என்ன விந்தையிது 

தாயமா மாயமா 
யோகமா நேரமா 
எதுவென்று தெரியவில்லை 
நல்லதும் அல்லாததும் 
நினைக்காமல் வருவது 

நம்பிக்கை இழக்காமல் 
ஆடும் வரை சுவையுண்டு 
நிச்சயமில்லா வெற்றி 
நிரந்தரமில்லா தோல்வி 
நித்தியமான நியதி 

ஏற்றமும் இறக்கமும் 
இரவும் பகலுமாம் 
சுழலும் சக்கரமிது 
உருளும் சொக்கட்டானிது 
ஓயாது விளையாடு 

சொக்கி சிக்கி 
திக்குமுக்காடி 
நம்பி வெம்பி 
மயங்கித் தெளிந்து 
விரும்பி வெறுத்து 

விதவிதமாய் தவித்து 
மாறி மாறி அனுபவித்து 
சூதாட்டமிதில் 
சதிராடாதோர் யார் 
வினையோ விதியோ 

அலுக்காத சலிப்பும் 
அலுங்காத கெலிப்பும் 
பகடையாய் உருள 
சகடம் செல்லும் 
காலம் வெல்லும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community