Friday, September 28, 2012

பாவியே



பாரடா அவள் அழுவதை
ஏங்கி ஏங்கி
தேம்பி தேம்பி
விம்மி விம்மி
அடி வாங்கிய குழந்தையாய்

வற்றாத குளமோ
வஞ்சியின் கண்கள்
வடிக்கின்ற கண்ணீரில் 
வடியாத வேதனை
வாழ முடியா ரோதனை

பாவியே பதரே பதடியே
உத்திரத்திற்காகா உதியமரமே
பகுத்தறிவில்லா மிருகமே
ஒன்றா இரண்டா உனக்கு காரணம்
வெறியாட்டம் ஆட விளைவதற்கு

உள்ளே வளர்க்கிறாய் ஒரு பூதம்
முளையில் கிள்ளாத ஆலவிருட்சம்
கதைகளில் கேட்ட ராட்சத அரக்கன்
உரைக்கும் வார்த்தைக்கு பொருளறியாய்
உடைக்கும் பொருளின் மதிப்பறியாய்

நாயாய் பேயாய் திரிந்திட
நாறப்பிறவி எடுத்தாய்
நம்பி வந்தவளின் நரகம் ஆனாய்
நல்லறத்தை கொன்றாய்
நட்டாற்றில் விட்டாய்

மொத்தமாய் தனை மறந்து
மனித சாடையை தொலைத்து
கூசாமல் தலை நிமிர்த்தி
வேசம் மட்டும் போடுகிறாய்
யாரை ஏமாற்ற உன்னைத் தவிர

வெக்கமில்லை துக்கமில்லையுனக்கு
அதையெல்லாம் ஏற்றினாய் அவள் தோளில்
பேதை சுமக்கின்ற சிலுவை
ஆணியறையும் நாள் என்று
ஆனந்த முடிவெப்போது

ஒளியில்லா விழி அருளில்லா வதனம்
உயிரில்லா உன் உடலின் பெயரென்ன
பூ சூடிய பொட்டு வைத்த
விதவை ஒருத்தி உன் வீட்டில்
ஊரறியா ஊமை நாடகம்

இஷ்டம் போல் வளர்ந்தாய்
இடிப்பாரின்றி கெட்டாய்
இறுமாப்பில் மிதக்கிறாய்
இம்மியும் அறியாய் நிசத்தை
இப்படியே இருக்கப் போகிறாயா

(ஒரு சோகக் கதையை படித்தபின் பொங்கிய ஊற்றின் பெருக்கிது) IndiBlogger - The Indian Blogger Community

Sunday, September 2, 2012

கண்ணை உறுத்தினால்

பெண்களுக்கு என்றும் எழுதப்பட்ட படாத சட்டங்கள் பல
கண்ணுக்குத் தெரிந்த தெரியாத வேலிகள் கோடுகள் பல
சட்டத்துக்குள் அடங்காத ஒரு சித்திரம் விசித்திரம்  அவள்
வேலிக்குள் கோட்டுக்குள் ஒடுங்காத வண்ணக்கோலம் அவள்
அணைக்கும் அலைக்கரங்களை கடலன்னை சாட்டையாக்குவாள்
கரைமேல் கறையும் கறையானும் அவள் கண்ணை உறுத்தினால் IndiBlogger - The Indian Blogger Community
IndiBlogger - The Indian Blogger Community