Saturday, March 13, 2010

கிளிப் பேச்சு கேட்க வா

என் உள்ளங்கவர்ந்த பெண்கிளி ஊடல் கொண்டு ஓடினால் ஆண்கிளி நான் சும்மா இருப்பேனா? நிழல் போல் அவளை தொடர்கின்றேன்.

“சொக்கி! சொக்கி! என் கண்ணான கண்மனியே! கோபுரத்து மேலிருந்து கோபமாக பறந்ததென்ன?”

“சொக்கா! சொக்கா! எனைத் தொடரும் கட்டழகா! தெருவெல்லாம் சாக்கடைதான் பெருக்கெடுத்து ஓடுது, குப்பை மேடும் வளருது. கொசுக்கடித்து சாவேனா, வானில் பறந்து செல்வேனா?”

ஓ! அவ்வளவுதானா? அப்படியென்றால் பயமின்றி என் காதலை தெரிவிக்கலாம்.

“சௌந்தர்யமான சொக்கியே! இந்த இனிய காலை வேலையில் உன்னோடு ஜோடியாக பறப்பது எனக்கு எவ்வளவு பரவசமளிக்கிறது தெரியுமா? வானில் பறப்பது போல் இல்லை. சொர்க்கத்தில் மிதப்பது போல் இருக்கிறது.”

“சொரணையற்றுப்போன சொக்கா! சொர்க்கமா இது? எனக்கு மூச்சு திணறுகிறது. இது என்ன, நீல வானமா, நச்சு மண்டலமா? ஆலைகளின் புகையும், வாகனங்களின் வாயுவும் சேர்ந்து என்னை தாக்குது.”

அடடா! என் சொக்கி சாலையோரத்து இச்சி மரக்கிளையை நாடி வெறுப்புடனே அமர்கின்றாள். நான் நெருங்கி நெருங்கி சென்றாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அதற்காக விட்டுவிடுவேனா? முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதல்லவோ என் கொள்கை?

“கண்ணே, சொக்கி! ஏனிந்த பராமுகம்? கனிந்த இந்த மரத்திலே களிப்பாக நாம் குலவ வேண்டாமோ?”

“முட்டாள் சொக்கா! இந்தத் தோப்பைத்தான் அழித்து பல அடுக்கு மாடிகளை கட்டப் போகிறார்களே! அதற்குள் கொண்டாடிக் கொள்வோமென்கிறாயா?”

அப்பப்பா! மகாராணிக்குத்தான் எவ்வளவு கோபம்! ஆனால் அதற்கெல்லாம் அசரக்கூடாது.

“சுந்தர சொக்கி! இந்தத் தோப்பு போனாலென்ன? காட்டுக்குள் நாம் செல்வோம். எனக்கு உன் கடைக்கண் பார்வை அருள்வாய், என் கண்ணே!”

“மக்குச் சொக்கா! காட்டில் என்ன வாழுது? அதையுந்தானே வெட்டி எரிக்கிறான் மனசாட்சி இல்லாத மனிதன் என்னும் அரக்கனே?”

வார்த்தைக்கு வார்த்தை பதிலடி கொடுக்கிறாளே! நைச்சியமாக பேசித்தான் சாதிக்க வேண்டும்.

“ஓரமாக ஓரிடத்தில் ஒதுங்கி நாமும் வாழ்ந்திடலாம். என்னை மட்டும் ஒதுக்காதே, ஒயிலான என் சொக்கி!”

“அறிவு கெட்ட என் சொக்கா! அனைத்து ஜீவராசியுமே தொடரான ஓர் சங்கிலி என்றறியா மானிடனும் இரக்கமின்றி கொன்று விட்டான் பல இனங்களையே, அறுத்து விட்டான் அவசியமான அந்த கண்ணிகளையே.”

“அதனாலே நமக்கென்ன? அருமையான என் சொக்கி! அமைதியாக நாம் வாழ்ந்திடுவோம்.”

“தொடர் சங்கிலி அறுந்து போனால் தாரம் ஆட்டம் காணும், ஆகாரம் ஏதுமின்றி ஆவேசமாகிப் போகும். ஆகாத பேச்செல்லாம் என்கிட்ட பேசாதே, சொக்கா, ஆணழகா!”

போச்சுடா! கைக்கெட்டும் தூரத்தில் சொர்க்கத்தைக் காட்டுகிறேன் என்கிறேன் நான். அவளோ கண் காணா நரகத்தை வர்ணிக்கிறாளே!

“சொர்ணமே, சொக்கியே! சூடாக இருக்கிறாய், வா, அந்த நீரோடையிலே ஜலக்கிரீடை செய்திடுவோம், குளிர்ந்திடுவாய்.”

“ஓடையிலா? சொக்கா, மூடா! நகரத்து கழிவனைத்தும் அதில் தானே கலக்கிறது? தொழிற்சாலை கசடுகளும் சேர்வதினால் வழி நெடுக விளை நிலமும் தரிசாச்சி, கடல் நீரும் விஷமாகி மீனினமும் செத்தாச்சி.”

இதிலேயும் வில்லங்கமா? சமாதானம் பண்ணியே ஆக வேண்டுமே!

“கலங்காதே, என் செல்ல சொக்கி! வானத்து கருணையெல்லாம் மழையாகி வந்த பின்னே விஷமெல்லாம் முறிந்து போகும், விளைச்சலெல்லாம் நிறைஞ்சிருக்கும்.”

“உளறாதே, உன்மத்தம் பிடித்த சொக்கா! வானமே ஓட்டையா போயாச்சி. ஓசோன் கூரை பொத்தலிலே பூமி சூடேறிப் போகுது, வெள்ளிப்பனி மலைகள் உருகி ஓடப் போகுது, ஊழிப்பெருவெள்ளம் வந்துலகம் அழியப் போகுது.”

என் ஆத்திரம் இவளுக்கு புரியவில்லையே!

“என் ஆசை சொக்கியே! இந்தக் கணம் இங்குனக்கு என்ன குறை சொல்லிடுவாய்! இன்பமாக கொஞ்ச வேண்டும். எட்டி எட்டி போகாதே.”

“என்னருமை சொக்கா! கொஞ்சி கொஞ்சி பேசிய பின் என்ன செய்யப் போகிறாய்?”

ஆ! இறங்கி வருகிறாள்!

“என் பிரிய சொக்கியே! உன்னை என்னோடு குடும்பம் நடத்த கூப்பிடுவேன்.”

“சொக்கி நிற்கும் சொக்கா! நான் உன்னோடு குடும்பம் நடத்த வந்தால் என்ன நடக்கும் சொல்வாயா?”

“முட்டையிரண்டை நீ இடுவாய். குஞ்சிரண்டை நாம் பொரிப்போம்.”

“குஞ்சிரண்டும் என்ன செய்யும்?”

“பொன்னான குஞ்சிரண்டும் உன்னைப் போல், என்னைப் போல் பசுங்கிளியாய் வளர்ந்திடுமே, ஜோடி தேடி பறந்திடுமே!”

வெற்றி! வெற்றி! இனி மறுக்க மாட்டாள்.

“மதி மயங்கி பேசுகிறாய். நிஜத்தை நம்ப மறுக்கின்றாய். நாளை என்ன நடக்குமென்று நானுரைப்பேன், காதில் அதை வாங்கிடு. பசுங்கிளிகள் குலவிடவும், கூடி வாழ்ந்து பெருகிடவும் தோப்பில்லை, துரவில்லை, காடென்று ஒன்றில்லை. சிங்கார கிளிகளும் சிறகடித்து பறந்து செல்ல நீலவானம் இனியில்லை. குளிர் நீரில் குளித்திடவும் குற்றமில்லா நீரோடையில்லை. பசியாற பழமில்லை, பரிதவித்து பலனில்லை. துன்பமுண்டு, இன்பமில்லை. இதற்கா என்னை உன்னோடு ஜோடி சேரச் சொல்கின்றாய்?”

என்னடா, இது! கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாய் இருக்கு!

“சொக்கி..சொக்கி..நீ..தப்பாய்..தப்பாய்..”

“திக்காதே, திணறாதே, ஏமாந்த சொக்கா! தப்பென்று நீ நினைத்தால் என்னை மட்டும் பாராதே, உன்னைச் சுற்றிப்பாரு, கண்ணை திறந்து பாரு. என்னை மட்டும் சுற்றாதே, ஊரைச் சுற்றிப் பாரு, உலகை சுற்றிப் பாரு. போதும், போதும் குடும்ப ஆசை! போடுகிறேன் உனக்கொரு கும்பிடு. என்னை விட்டு விலகிச் செல்லு!”

ஆண்டவா! இது என்ன சோதனை! தத்தையின் இச்சை மொழி கேட்டிடவே காத்திருந்த என் தலையில் இடியும் வந்து விழுந்ததே! ஐயா, பாரதி, சரியாய்த்தான் சொன்னீரய்யா “கோலக்கிளி மொழியும் செவியில் குத்தலெடுத்ததடி” என்று. ஐயகோ! என் அஞ்சுகத்தின் நெஞ்சில் காதலுக்கு இடமில்லையாமே! இப்படி என்னை கதறி துடிக்க வைத்தாளே! என் மனதில் இடம் பிடித்த மாசறு பொன்மணியும் மணிமேகலையாய் மாறி விட்டாளே! மாசுற்ற மாநிலத்தை மாற்ற நான் என்ன செய்வேன்! என்ன செய்வேன்!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community