Saturday, March 13, 2010

பதைப்பு

காலம் மாறிப் போச்சோ
கலி முத்திப் போச்சோ
பருவங்கள் மாறுது
மாதங்கள் மயங்குது
மனசு ஏனோ பதைக்குது
மருண்டுதான் போகுது

அதிசயமாய் இருக்குது
ஆடியிலே காற்றில்லை
அம்மி பறக்கவில்லை
புழுதியிறைக்கவில்லை
கண்ணில் தூசி உறுத்தவில்லை
மனதில் ஏதோ உறுத்தியதே

பங்குனி பிறந்துச்சி
பதைபதைக்கும் வெயிலில்லை
மப்பும் மந்தாரமுமாச்சி
விடாமல் ஒரு வாரம்
அடைச்சி மழை பெய்யலாச்சி
வானம் பாத்த பூமி கூட
வெள்ளக்காடா மாறிப் போச்சி
விளைஞ்ச பயிர் நாசமாச்சி

காணாத காற்றழுத்தம்
கடலிலே புயலடிக்குதாம்
ஏனிந்த தடுமாற்றம் இதுவரை
இல்லாத பருவ மாற்றம்
அரிதான கொந்தளிப்பு
அதிகமான நிலநடுக்கம்
எதிர்பாராத சுனாமி
அளக்க முடியா இழப்புகள்

வாகனப்புகையும் ஆலைக்கரியும்
வான மண்டலத்தை கெடுக்குது
ஆராய்ச்சிக் கழிவும் அழியாத குப்பையும்
நீர்நிலைகளை நச்சாக்குது
அநியாய வேட்டையில்
வனவிலங்கும் அழியுது
கண்ணிகள் அறுந்த சங்கிலியில்
உயிரினங்கள் ஊசலாடுது

மரபணுவை பிளந்து மாத்தி
விளைச்சலிலே விளையாடி
பெருசு பெருசா காயும் கனியும்
கண்ணைத்தான் கவர்ந்திழுக்குது
வீரிய தானியம் முளைக்குது
விதை நெல் என்ன ஆச்சி
வெள்ளாமையிலே புரட்சி
வரிசையாய் வியாதி காத்திருக்கு

அறிவு மட்டும் வளருதா
விந்தை காண விளையுதா
விபரீதம் அதில் விளையுதா
விவேகமே இல்லாமல்
பின்விளைவை அறியாமல்
பொறுப்பின்றி விளையாடினால்
பூமிக்கோளமே நடுங்குதோ
நாளை என்ன நடக்குமோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community