Sunday, March 7, 2010

ஒரு விரல்

தசரதன் தேர் சக்கரத்தில் ஒரு விரல்
கைகேயி அன்று வைத்தாள்- பின்னாளில்
மன்னன் கண்ணில் விரலை விட்டு ஆட்டியே
அவனை தானே நின்று கொன்றாள்.

அர்ச்சுனனை விஞ்சும் வில்வீரன்
அவன் பெயர் ஏகலைவன் என்பது
ஆனால் அந்தோ! பரிதாபம்!
தட்சிணை தந்தான் ஒரு விரல்.

முதலை வாயில் சிக்கிய யானையின்
“ஆதி மூலமே!” என்ற மரணப் பிளிறல்
அழைத்து வந்த அவசர உதவிச் சக்கரம்
அமருமிடம் திருமாலின் ஒரு விரல்.

பேதையவள் சீதை நீட்டினாள் ஒரு விரல்
சோதனையாய் வந்த மாயமானை நோக்கி-
வேதனையாய் மாறிய அவள் ஆயுள்
புதைந்து போனது பூமிக்குள்.

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றது
அறிஞர் அண்ணாவின் ஒரு விரல் முத்திரை;
ஆசிரியரிடம் மாணவனின் ஒரு விரல் சைகை
இயற்கை உந்துதல் நெருக்கும் காரணம்.

நீட்டிய ஒரு விரல் காட்டும் பாதையை,
குற்றம் சாட்ட நீட்டும் ஒரு சுட்டு விரல்
எதிரே உள்மடக்கிய மூன்று விரலால்
உன்னை சுட்டி உணர்த்தி பரிகசிக்கும்.

தரையை நோக்கி குத்தும் கட்டை விரல்
கதையை முடிக்கக் கோரும் சமிக்ஞை;
உயர்த்திக் காட்டும் ஒரு கட்டை விரல்
இலவச சவாரி, சவால், வெற்றியை குறிக்கும்.

டைப் அடிக்கும் என் ஒரு விரல் எனக்கு
“’ஒரு விரல்’ கிருஷ்ணாராவ்” என்றே என் மக்கள்
பட்டப் பெயர் வைத்து பகடி செய்திட
வாய்ப்பும் வாகாய் தந்ததுவே.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community