Friday, March 12, 2010

எலியும் பூனையும்

சிறிய குழந்தைகள் வியக்க
'பெரிய' குழந்தைகள் ரசிக்க
டாம் என்றொரு பூனையும்
ஜெர்ரி என்றொரு எலியும்
நடத்தும் ஓயாத போர்
வெற்றியும் தோல்வியும் இன்றி
இனிதே தொடரும் வாடிக்கை
என்றும் அலுக்காத வேடிக்கை

ஆக்ரோஷம் ஆத்திரம் வேகம்
அந்தப் பூனையின் அடையாளம்
சாமர்த்தியம் கூர்மதி விவேகம்
சின்ன எலியின் ஆயுதம்
பாய்ந்து துரத்தும் பூனை
பதுங்கி கவிழ்க்கும் எலி
புயலாய் விரட்டும் பூனை
பத்திரமாய் பம்மும் எலி

உடல் வலிமையில் பிறந்த
ஆவேசமெல்லாம் வீணாக
தெளிவான அறிவில் உதித்த
எளிதான உத்திகள் பலிக்க
ஒன்றை ஒன்று துரத்தி
நடத்துகின்ற பகைப் பாவனை
உணர்த்தும் பாடம் உளதோ
வெறும் கதை இதுவோ

புஜபலமுள்ள ஆண்தான்
ஆதிக்க நாயகந்தான்
அந்தோ! என்னாச்சு அவன் வலி?
சினமென்ன? சீற்றமென்ன?
புஸ்வாணமாகும் இறுதியிலே
புத்தியுள்ள பெண் முன்னாலே
விதைத்து வினை அறுத்து
நோவான் பரிதாபமாகவே

யோசனையில்லா கொதிப்புகள்
அவசரமான அவன் செய்கைகள்
ஓசையில்லா துரித தீர்வுகள்
தவறாத அவள் கணிப்புகள்
அடக்கும் எண்ணம் ஓயாமல்
அடங்கும் சாத்தியம் இல்லாமல்
அகிலம் உள்ள மட்டும்
அரங்கேறும் அழகு காவியம்.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community