Saturday, March 6, 2010

தேரோடும் எங்க சீரான மதுரையில்

தேரோடும் எங்க சீரான மதுரையில் நேற்றிரவு என்ன ஓடியது தெரியுமா? வளமான காலத்தை, பொற்காலத்தைக் குறிக்க சாலையில் தேனோடியது, பால் ஓடியது என்ற வர்ணனைகள் கேட்டதுண்டு- ஒரு மாறுதலுக்கு எங்கள் சாலையில் தங்கமீன் ஓடியது!

சற்று தள்ளியுள்ள அலங்கார மீன் பண்ணையிலிருந்து வெளியூருக்கு அனுப்ப தங்க மீன்களை பெரிய பாலிதீன் பைகளில் அடைத்து வண்டியில் ஏற்றி விரைந்து செல்கையில் சரியாக பிரதான சாலையின் மேல் அமைந்திருக்கும் எங்கள் கூட்டுக்குடியிருப்பின் முன்னால் ஒரு மீன்கள் பை விழுந்துவிட, அதை கவனிக்காமல் வாகன ஓட்டி விரைந்துவிட, பை தெறித்து மீன்கள் சிதறி தெருவில் துள்ள, சர் சர்ரென விரைந்து செல்லும் வாகனங்கள் அவற்றில் சிலவற்றை நசுக்கிச் செல்ல, கவனித்த சிலர்- சுற்றிலுமுள்ள சிறு கடையாட்கள்- ஓடி வந்து மீன்களை அள்ளியிருக்கின்றனர். அவர்களில் ஒருவன் எங்கள் குடியிருப்பின் வாயிற்காப்போன்!

என்னுடைய பொழுதுபோக்குகளும் ஆர்வங்களும் விநோதமானவை: வாசலில் ஒரு செவ்வக சிமிண்டு தொட்டியில் நீர் நிரப்பி அல்லி வளர்த்து வருகிறேன். தினமும் காலை காப்பிக்கு நிகராக அந்த மலர்களை கண்டபின்பே பொழுது நன்றாக புலர்ந்ததான உணர்வு வரும், நாளை உற்சாகமாக துவங்க இயலும்!
எனக்கு துளியும் நம்பிக்கையோ ஆர்வமோ இல்லாத வாஸ்து சாஸ்திரத்துக்காக அதை நான் வாசலில் வைத்திருப்பதாக பலர் பவ்யமாக எண்ணுவதுண்டு!

எங்கள் வாயிற்காப்போனுக்கு என் தோட்டக்கலை மற்றும் பல வெட்டிவேலை ஆர்வங்கள் எல்லாம் அத்துப்படி. எனவே கை நிறைய தங்க மீன்களை அள்ளியவன் அவற்றை அப்படியே கொண்டு வந்து எங்கள் அல்லி தொட்டியில் விட்டான். எதிர் கடைக்காரர்கள் பொறுக்கி சேகரித்த மீன்களில் கொஞ்சத்தையும் அள்ளிக் கொண்டு வந்து போட்டான். இருட்டில் ஒன்றும் செய்ய முடியவில்லை என்னால். ஏற்கனவே அந்த தொட்டியில் ஒரு இயற்கை சூழல் நிலவ ஆசையாக சில சிறு வகை அலங்கார மீன்களை வளர்த்து வருகிறேன்.('வேலையில்லா மாமியா..' பழமொழிக்கு இலக்கணமாய் வாழபவள் நானல்லவோ!)
அபூர்வமாய் வருகை தரும் பேரப்பிள்ளைகள் மன மகிழ்ச்சிக்காக வீட்டு வரவேற்பரையில் ஒரு சிறு கண்ணாடி தொட்டியிலும் மீன் வளர்த்து பராமரித்து வருகிறேன். எனக்கு தங்க மீன் மேல் பிரீதி கிடையாது- தத்தி மாதிரி திரியும், நீருக்குள் செடி வளர்த்தால் பிய்த்துப்போடும், மற்ற மீன்கள் இடும் குஞ்சுகளை கபளீகரம் செய்யும் போன்ற காரணங்களுக்காக. அழகான கப்பி, பிளாக் மோலி, பிளாட்டி போன்ற சிறு வகை மீன்கள்தான் எனக்கு பிடித்தமானவை. அவை இடும் குஞ்சுகளை அரித்தெடுத்து இன்னொறு சிமிண்டு தொட்டியில்(அதற்கு நான் வைத்திருக்கும் செல்லப் பெயர்-நர்சரி)விட்டு ஆசை பார்ப்பேன்.

இந்நிலையில் இந்த புது தங்கமீன்களின் வரவு மண்டையை குடைய ஆரம்பித்தது. சில பல யோசனைகள் தோன்ற தூங்க சென்றேன். காலையில் எழுந்ததும் அல்லி தொட்டியின் நீரை இறைத்து தங்க மீன்களை வலையால் பிடித்து ஒரு வாளியில் விட்டேன். என்னவரின் உதவி இல்லாமலா? எனக்கு போக்கு காட்டிய ஒன்றிரண்டை அவர் லாவகமாய் பிடித்துக் கொடுத்தார். இறந்து கிடந்த ஒரு மீனை தவிர மொத்தம் தேறியது 14 தங்கமீன்!

எங்கள் நடவடிக்கைகளை ஆர்வமாய் வாயிற்காப்போன் ரசித்துக்கொண்டு நின்றுகொண்டேயிருக்க எனக்கு புரிந்துவிட்டது: உடனே என்னவருக்கு கண் காட்டினேன். அவரும் புரிந்துகொண்டு ஒரு நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தார். ஒரு பத்தோ இருபதோ போதாதோ என்று நான் பிற்பாடு கடிந்துகொண்டதற்கு ‘விலை உயர்ந்த மீன்களாயிற்றே, பாதியாவது கொடுக்க வேண்டாமா’ என்று தன்னிலை விளக்கம் தந்தார்! என்னவோ அவன் தான் விற்ற மாதிரியும் நாங்கள் விரும்பி அவற்றை வாங்கியது மாதிரியும்!

அடுத்து வீட்டிற்குள் இருந்த சிறு கண்ணாடி தொட்டியில் இருந்த சிறு மீன்களை பிடித்து அல்லித் தொட்டிக்கு மாற்றிவிட்டு தங்கமீன்களை அதில் விட்டேன். அதிக ஜனத்தொகையாய் இருக்கிறது! பாதியை நாத்தனார் வீட்டு பெரிய கண்ணடித்தொட்டிக்கு அனுப்பிவிட எண்ணியுள்ளேன்.

நேற்றிரவு வெளிநாட்டிலிருக்கும் மூத்த மகனிடம் இணையத்தில் அளவளாவும் போது இந்த வேடிக்கை சம்பவத்தை சொன்னதும் அவன் இளகிய மனது வருந்தியது. ‘இத்தனை உயிர்களையாவது காப்பாற்ற முடிந்ததே’ என்றான்.

நீதி: இவ்வளவும் ஷேக்ஸ்பியரின் Much Ado about Nothing அல்ல, முண்டாசு கவிஞன் பாடிய ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்’ என்பதற்காக!!!


No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community