Monday, March 15, 2010

பருவ மழை

ஏதோ ஏதோ எதிர்பார்ப்பு
எங்கும் எதிலும் பரபரப்பு
மெல்ல மேகம் திரண்டது
வெட்டி வெட்டி மின்னியது
கடகடவென உருட்டியது
வானம் சிவந்து கிடந்தது
ஆயத்தம் பலமாய் நடந்தது
பருவமழையின் அரங்கேற்றம்
அற்புதமாய் அங்கு துவங்கியது
அமர்க்களமாய் தொடர்ந்தது

சாரல் தூறல் வலுத்தது
நனைய நனைய பெய்தது
நாளும் இது தொடர்ந்தது
நடப்பாய் பழகிப்போனது
பல நாள் இதுதான் வாடிக்கை
சில நாள் கனமழை வேடிக்கை
ஊஊவென காற்று சுழன்றது
சடசடவென மழையடித்தது
பேயாய் மரங்கள் ஆடியது
குளிரக் குளிர ஊறியது

இதமாய் பதமாய் ஓர் சுகம்
இறுக்கம் மறைந்து போனது
பூமியின் தாகம் தீர்ந்தது
நீரை மடியில் சேமித்தது
காற்றும் கடலும் மலையும்
சேர்ந்து நடத்தும் நாடகம்
இனிய இயல்பான சுழற்சி
இயற்கையின் மறுமலர்ச்சி
மண்ணில் மனதில் ஈரம்
வறட்சி விலகும் தூரம்

சிறகை விரிக்கும் கற்பனை
சிந்தும் சிங்கார வர்ணனை
வானிலே நடந்தது விழாக்காலம்
விளைந்ததோ வண்ணக்கோலம்
பூமகள் பூணுவாள் பட்டாடை
மணநாள் மங்கையின் சாடை
விழிகளில் விரிந்தது விருந்து
வருந்திய இதயத்தின் மருந்து
ஆண்டிற்கு ஒரு முறை உற்சவம்
அடுத்த முறை வரை உற்சாகம்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community