Saturday, March 13, 2010

கடைசியில்

காரிருள் வானில்
கண்ணைச் சிமிட்டும்
ஒற்றைத் தாரகை
வாடைக் காற்றில்
ஒரே தேவை
ஒரு கை அணைக்க

ஓடிக் களைத்து
ஓய்ந்து நின்று
இழுத்துவிட்ட மூச்சு
வந்த பாதை வியந்து
மீதிப் பயணம் மலைத்து
திகைக்கின்ற கணத்திலே

பல்லும் முடியும் உதிர
பற்றும் பொறுப்பும் அகல
அயர்வும் சோர்வும் அமர
கனவாய்க் காலம் தோன்ற
கனிவாய் நினைவும் மாற
கணக்கு சரியாய் முடிய

தனியாய் வந்து
திருவிழாவில் வளர்ந்து
தனியாய்ப் போக
தாமரை இலையில்
உருளும் நீராய்
உள்ளம் மாறிட

புள்ளியாய் உதித்து
பூவாய்ப் பூத்து
புனலாய்ப் பாய்ந்து
பரந்தோடி ஓய்ந்து
துளியாய்க் கரைய
காத்திருக்கும் சங்கமம்

தளிராய் இளசாய்
பச்சையாய் பளபளப்பாய்
முற்றலாய் சருகாய்
காய்ந்திடும் இலை
கடைசியில் தானாய்
வலிக்காமல் உதிரும்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community