Sunday, March 7, 2010

இல்லத்தரசன்

அடியே என் கண்ணாட்டி
கடியாரம் ஓடுதடி
நேரந்தான் ஆகுதடி
மெதுவாக எழுந்திரடி
இந்தா காப்பித் தண்ணி
சூடா குடிச்சிரு தாயி
குளிச்சிபுட்டு வந்துவிடு

முந்திரியும் மிளகும் மினுக்க
வெண்பொங்கலும் உனக்காக
மல்லியப்பூ இட்டிலியும்
கொத்தமல்லி சட்டினியும்
பூரியும் கிழங்கும் கூட
மேசையிலே வச்சிருக்கேன்
பரிமாற காத்திருக்கேன்

பிள்ளைகள குளிப்பாட்டி
உடுத்திவிட்டு உண்ணவச்சி
மத்தியான உணவு கட்டி
புத்தகப்பையோட பள்ளிக்கு
அனுப்பி வச்ச கையோட
கழுவிக் கவுத்தி முடிச்சிருவேன்
பெருக்கித் துடச்சி வச்சிருவேன்
துவச்சிக் காய போட்டுப்புட்டு
சின்னத் தூக்கம் போடுவேன்

சிற்றுண்டி செஞ்ச பின்னே
பள்ளி விட்டு வந்ததுகளுக்கு
மூக்கு சிந்தி முகம் கழுவி
பாடம் சொல்லிக் கொடுத்து
கூட விளையாடி கதை சொல்லி
படுக்க வச்சி போர்த்திப்புட்டு
கொட்டாவிகள விட்டபடி
தொலைகாட்சி பாத்துக்கிட்டு
நீ வரும் வழி மேல விழி வச்சி
காத்துத்தான் கிடப்பேனே

களச்சிப் போயி வருவாயே
உன் விரல் நீவி விட்டபடி
ஆசையா பேசி அசதி போக்கி
உணவூட்டி உறங்க வைப்பேன்
மாடா உழச்சி ஓடா தேஞ்சி நீ
கட்டு கட்டா கொண்டு வந்து
குடும்பத்தோட கும்பி குளிர
கஞ்சி ஊத்தி காப்பாத்துற
உன் கை பிடிச்ச பாக்கியசாலி
கரண்டி பிடிச்ச கணவன் நான்
நிழலில் வாடாம நானிருக்க
நிதமும் வதங்குற வனிதைய
வாதையின்றி வச்சிருப்பேனே
அந்நிம்மதியில் உறங்குவேன்
அதிகாலைல எந்திரிக்கணுங்கற
ஒத்த நெனப்போடதானே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community