Tuesday, March 16, 2010

தொட்டுத் தொடரும் பாரம்பரியம்

இடுப்பில் குடத்தை சுமந்து கொண்டு ஊர் பொதுக்கிணற்றை நோக்கி ஒட்டமும் நடையுமாய் சென்று கொண்டிருந்த சிற்றாடை குமரிகளோ மலர்ந்தும் மலராத முக்கால் மொட்டுக்கள். அந்த வயதுக்கே உரிய விகல்பமில்லாத வெள்ளைச் சிரிப்பு வெடித்து பனைமர ஓலைகளில் சலசலத்து ஓய்ந்தது.

தண்ணீரை மடமடவென இறைத்து ஆனந்தக்குளியல் போட்டன அந்த பட்டாம்பூச்சிகள்.

வழக்கம் போல மஞ்சளை இழுத்து அரைத்து குழைத்து அவள் பூசும் போது தோழிகள் க்ளுக்கென்று சிரித்து பூடகமாய் ஒருத்தியை ஒருத்தி பார்ப்பதைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். பொசுக்கொன்று ஒரு கோபமும் ரோஷமும் உச்சந்தலைக்கு ஏறியது.

சரக்கென்று குடத்தை இடுப்பில் ஏற்றிக்கொண்டு விறுவிறுவென நடந்து வீட்டையடைந்தாள்.

"அம்மா," இரைந்து கூவினாள் ஆவேசமாய்.

"நான் மஞ்சள் பூசியதில் என்ன வேடிக்கையிருக்குது? ஒளிக்காமல் சொல்லுங்க" ஆணையில் காட்டமும் கண்டிப்பும் இருந்தது.

பதறிப்போன தாயின் பார்வையில் பரிதாபம் இழையோடியது. உண்மையை கூற வேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்ந்தாள். அவளுக்கு விவரம் தெரியா வயதிலே விவாகமாகி வாணிபம் செய்யச்சென்ற கணவன் இறந்துவிட்ட சேதியை வெளியிட்டாள்.

ஆதரவுடன் தலை கோதிய தாயின் கரத்தை வெருட்டென உதறினாள்.

"நம் குல வழக்கப்படி உடனே தீ வளருங்கள். என் உயிரை அதில் நான் மாய்த்துக்கொள்வேன். என் மடியில் கட்டிக்கொள்ளும் மஞ்சளும், மலரும் கருகாமலிருந்தால் என்னை 'மாதா'வாக வழிபடுங்கள். உங்கள் குலம் தழைக்க காவலிருப்பேன்."

பல நுஉறு வருடங்கள் கற்சிலையாய் கடல் மணலில் புதையுண்டு கிடக்கிறாள். மாசித்திங்களில் வந்து கூடும் உலகெங்கிலும் பரந்து விரிந்து கிடக்கும் குல விழுதுகளை கண்டு மகிழ்ந்து மண்ணுக்குள் மீண்டும் உறங்குகிறாள்.

கல்லும் முள்ளும் நிறைத்த காட்டுப்பாதையில் கட்டுசாதமும் கைமருந்தும் கைக்குழந்தைகளுமாய் கட்டைவண்டியில் நாட்கணக்கில் பயணித்தது தார் சாலையில் அதிநவீன மோட்டார் வாகனத்தில் சென்றடையும் சுகப்பிரயாணமாய் மாறியதேயன்றி முடி காணிக்கை, நேர்த்திக்கடன், நா ருசிக்க பதநீர், பனங்கிழங்கு, கருப்பட்டி, கடல்மீனென நியமங்கள் எதுவும் மாறவில்லை.

பால்ய விவாகமும் சதியும் ஒழிந்துபட்டது. விதவா விவாகத்தை பரந்தமனதுடன் ஏற்றுக்கொண்டாயிற்று. சொகுசும் அறிவும் கூடியது. குடும்ப மரியாதைகள் குறையவில்லை.

கூடி மகிழ்ந்து, கூடி உண்டு, கூடி பகிர்ந்து சமுதாய நலன் கட்டுக்கோப்பாய் இருந்திட காண்கையிலே பொதுவான புதுப்பிக்கப்பட்ட மனோபலம் உணரப்படுகையிலே வீண் ஆராய்ச்சியும் வேண்டாத வாதமும் ஓடி ஒளியத்தான் வேண்டுமன்றோ!

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community