Monday, March 15, 2010

புதுப் பேச்சு

ஏ புள்ள கருப்பாயி
வாடி கிட்ட என் தாயி
ஊரு உலகம் போற போக்க
நாட்டு நடப்ப சொல்லுவேன்

பட்டிக்காட்டு கருப்பாயி
பவுசாக நீ மாற வேணாமா
பட்டணத்து பவுனம்மா
போல நீ மினுக்க வேணாமா

குழச்சிப் பூச கிரீமிருக்க
அரச்ச மஞ்சள் ஏதுக்கடி
செரச்ச மேனி மின்னுமடி
செகப்பழகு ஆள தின்னுமடி

பதவிசாக பாதம் பதிச்சி
வரப்பில் நடக்கும் பொம்பள
குதி உசந்த செருப்பு மாட்டி
குதித்து நடந்து காட்டடி

முழம் முழமா நீளமா
மூடுற சேலய உதறு
தொடை வரை டவுசர் மாட்டு
தொப்புள் தெரிய கச்சை கட்டு

பணியாரமென்னத்துக்கடி
பர்கரும் பிட்சாவும் போதுமடி
பிட்டுப் பிட்டு தின்போமடி
பிரியமான சீமாட்டி நீயடி

கருப்பட்டி மணக்க மணக்க
காய்ச்சிய காப்பி வேணாம்
கழனித் தண்ணியும் வேணாம்
கோக் குடிக்க வேணுமடி

பல்லு போயி சொல்லு போயி
தலை நரச்சி நடை தளந்து
மூப்பு வந்து மூச்சடங்கி
போவதினி ஏதுக்கடி

வாய்க்குள் நுழையாத பேரு
நோய்கள் வரட்டும் நூறு
நடக்கட்டும் மருந்து ஆராய்ச்சி
பிடிக்குதாடி என் புதுப் பேச்சு

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community