Sunday, March 7, 2010

மொழி

பல்கலை கழகங்கள் பல கட்டி
பல் மொழிகள் செம்மையாய்
வளர்கின்ற வழக்கமுண்டு-
இலக்கணங்கள் ஏதுமின்றி
இதிகாச சுவை மிஞ்சி
ஈடின்றி இணையின்றி
எதுகை மோனை துணையின்றி
ஏதுவான இணைப்பாவது
எக்காலமும் உவப்பானது
அவனியெங்கும் அறிந்தது
எம்மொழி என்றறிவீரோ

கன்னியரின் கன்னல் மொழியல்ல
காதலின் கள்ளொக்கும் மொழியல்ல
குழலை விஞ்சும் மழலை பேசும்
மணியான மொழியே அது
ஒலிகளின் கூட்டே வார்த்தையாய்
பண்டங்களின் பெயர்கள் அதிலே
பக்குவமாய் அவிந்திருக்க
ஆண்பால் பெண்பால் மயக்கமுற
வல்லினமும் மெல்லினமும் மருவிட
இடையினத்தின் இடுக்கிலே
பாதிப்பெயர் மட்டும் நீட்டி
ஒயிலானதோர் உச்சரிப்பைக் கூட்டி
வண்டொத்த கண்களால்
சுட்டுகின்ற சிறு விரலால்
காட்டிய பொருளை தெரியாமல்
பொருள் புரியாமல் போனதுண்டோ
அகராதி அறியாத வார்த்தைகள்
அழகான ஒலி சேர்க்கைகள்
அத்தனையும் தேன்கனிகள்
பச்சைக்கிளியாய் ஒப்புவிக்கும்
பல சொல்லும் அதிசயங்கள்
சொல்லிக் கொடுத்த சொற்களன்றி
சொல்லித்தராத பல பாடங்கள்
சிறு செவிக்குள்ளே செல்வதுண்டு
சித்திரம் போலவே செப்புவதுண்டு
சிதைந்து போன வார்த்தைகள்
இத்தனை இனிப்பானவையா
விசித்திர ஒலிச்சேர்க்கைகளில்
வானவில்லின் ஒளி சிந்துது
கோடி இன்பம் ஒளிந்திருக்கும்
குழந்தை மொழியினை கேட்டிட
கொடுத்து வைத்திருக்க வேண்டுமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community