Sunday, March 7, 2010

தோழி

என் பிரியமான தோழியே
விபரம் தெரிந்த வயதிலே
அறிமுகம் ஆனவளே
இன்று வரை என் முகம்
பார்த்து நேசிப்பவளே

மையிட்டு பொட்டு வைத்து
அணிமணிகள் பூட்டிக் கொண்டு
தலை நிறைய பூவை சூட்டிய
அலங்காரம் ரசிப்பவளே
என் வளர்ச்சியை மலர்ச்சியை
பார்த்து பூரித்துப் போனவளே

என் கடைக்கண்ணில்
ஒளிந்திருக்கும் கள்ளச்சிரிப்பை
கண்டு மகிழ்ந்திடுவாயே
கண்ணுக்கடியில் கருவளையம்
கரிசனமாய் கவனிப்பாயே

சட்டென்று முகவாட்டத்தை
எண்ணங்களின் ஓட்டத்தை
கண்களில் எழும் கனவுகளை
இதழோரம் பூக்கும் முறுவலை
கோபத்தில் கன்றிப் போனதை
கண நேரத்தில் கணித்திடுவாயே

கனிவாய் துணையாய் நிற்பாயே
அந்தரங்கமாய் நான் கொட்டும்
குதூகலங்களை குமுறல்களை
குலுங்காமல் தாங்குவாயே

காதோரம் முதல் நரை கண்டு
நான் கலவரம் மிகக் கொண்டு
துக்கித்து நின்றபோது
துடுக்காக கேலி பேசி
தடுத்தாட்கொண்டவளே
தனை உணர வைத்தவளே
உனைப் போல் உண்மையான
நம்பகமான நட்பு நிறைந்த
உறுதுணை வேறறியேனே

சம்சார சலசலப்பை உன்னோடு
பகிர்ந்து கொண்டபோதும்
பாதித்த அத்தனை அனுபவமும்
பாடம் போல் ஒப்பித்தபோதும்
உலகம் அழகாய் தோன்றியபோதும்
ஊரும் உறவும் வெறுப்பேற்றியபோதும்
பருவத்தோடு பக்குவமாய் வளர்ந்து
நுரை அடங்கி நிதானம் வந்தபோதும்
நெஞ்சத்து எல்லைகள் “நானை” தாண்டி
வானத்துப் பறவையாய் எழும்பிய போதும்
வாய் திறவாது வாழ்த்தியவளே
தோள் கொடுக்கும் தோழியே
தாயே குருவே மனசாட்சியே
கண்கண்ட மௌன சாட்சியே
என் உள்ளக்கிடக்கையை உருவத்தை
உள்ளபடி பிரதிபலிக்கின்றாய்
பாதரசம் பூசிய பளிங்கே
போற்றுவேன் உனை எப்போதுமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community