Sunday, March 14, 2010

என் ஒருத்தியே

கருப்பட்டி வட்டுப் போல
கல்கண்டு கட்டி போல
கரும்புச்சாறு போல
கண்ணாட்டி நீயிருக்க
கழுநீர் தேடிப்போவேனோ

கொடிமுல்லை பூப்போல
கொய்யாத பிச்சி போல
கொழுந்து வெத்தலை போல
கனகமணி நீயிருக்க
கத்தாழை மேல் வீழ்வேனோ

கயல்மீனைப் போல
கடல் ஆழம் போல
கருவைரமணி போல
கண்மணி நீயிருக்க
கசடு எனை இழுக்குமோ

குத்துவிளக்குப் போல
குளிர்நிலவு போல
குன்றாத செல்வம் போல
குலமகள் நீயிருக்க
குப்பைமேட்டை பார்ப்பேனோ

காக்கும் தெய்வம் போல
கலங்கரை விளக்கம் போல
கலையாத கனவு போல
காதல்மனை நீயிருக்க
கண்டவளை நினைப்பேனோ

கானக்குயில் போல
கானக மயில் போல
கஸ்தூரி மான் போல
கட்டழகி நீயிருக்க
கால் தவறி நடப்பேனோ

கரைக்குள் ஓடும் ஆறு போல
களிப்பூட்டும் காற்று போல
கவிந்து மூடிய வானம் போல
காரிகையே நீயிருக்க
கயமை எண்ணம் தோன்றுமோ

கற்காத மொழி போல
கேளாத கதை போல
காணாத மாயம் போல
கவிதையே நீயிருக்க
கதி மாறிப்போவேனோ

என் ஒருத்தியே
எனை நிறுத்தியே
ஏற்றம் தந்தவளே
ஏழ்பிறவி இணைந்தவளே
இன்பம் இதுவல்லவோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community