Friday, March 12, 2010

எளிமையாய் ராமாயணம்

பொறுமையா இருடி, கைகேயி! தாடிக்கார சாமியார் வந்துட்டார்! ஏதாச்சும் விடிவுகாலம் வரும் போல தெரியுது!

அடியே கைகேயி, உன் சக்களத்திகளிடம் நீ ரொம்ப ஜாக்ரதையா இருக்கோணும்! ஆமா, ராசாவ அப்பிடியே அடிகண்ணால பாத்து பாத்து மடிச்சி வச்சுக்கோ! ஆமா, உனக்கு நல்லது எதுன்னு எனக்கு தெரியும், சொல்றபடி நடந்தியானா உனக்கும் உன் பிள்ளைக்கும் என்றைக்கும் பெரிய பேரும், பேறும் கிடைக்கும்!

உன்னை நான் எப்படி திருத்துவேன்? உலகமே தெரியாத வெகுளியாக இருக்கிறாயே! உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் உருவேற்ற வேண்டும்!

என் பிரியமான ராணி கைகேயியும் அவள் மகனும்தான் ராஜ்ஜியம் ஆள வேண்டும்! அதற்காக நான் அரும்பாடு படுவேன்! இது சத்தியம்!

ம்ம்ம்...இந்த மகாரஜா எப்பவும் ராமனுக்கு அதிகமா செல்லம் குடுக்குறாரு! கைகேயிக்கு சொரணையே இல்ல! காட்டுல ராட்சசர் தொந்தரவுன்னு அந்த முனிவர் வந்து இந்த 'வில்லன்' ராமரை கூட்டிட்டு போனாரு! அந்த சில்லுண்டி பயல் என் முதுகில மண் உருண்டை அடிசவந்தானே! தாடகை, ஸுபானுவை ஒழிச்சிட்டானாம்! புருஷன் சபிச்சதுல கல்லான அகலிகையை உயிர்ப்பிச்சானாம்! ஊருக்கு வர்ற வழியில முனிவர் அவர் பாட்டுக்கு லார்ட் மாதிரி ஜனக மகாராஜாவோட அரண்மணையில நடந்த சுயம்வரத்துக்கு அழைச்சிட்டு போனாராம்! வழியிலேயே சீதையை சைட் அடிச்சிகிட்டே போன ராமனும் வில்லை எடுத்து படக்குன்னு ஒடிச்சானாம், வளைக்க வேண்டிய வில்லை ஒடிச்சது விதிமுறையை மீறினதுன்னு யாரும் ஆட்சேபிக்க நேரம் குடுக்காம இந்த சீதை கள்ளி ஓடி வந்து இந்த மன்மதன் கழுத்துல படக்குன்னு மாலையை போட்டாளாம்! குடும்பஸ்தன் ஆயிட்டான்னு இந்த கிழட்டு மகாராஜாவும் மகனுக்கு பட்டம் சூட்டுறதுன்னு சபையில முடிவை தெரிவிச்சி ஓரே ஜே ஜேன்னு கிடக்கு! இந்த கைகேயி கடன்காரிக்கு புத்தியில ஏதாவது உறைக்குதா? கண்மனி பரதனை ஓரம்கட்டி, ஒதுக்கி, அவன் இல்லாத நேரத்துல இப்படி ஒரு ஓரவஞ்சனை நடக்குறத நான் எப்படி பாத்துகிட்டு சும்மா இருக்க முடியும்!

என் ரத்தம் கொதிக்குது இந்த அக்கிரமத்தை பார்த்து! இதை முறியடிச்சே தீருவேன்! கங்கை ஊதி கனன்றுகிட்டுருக்க வச்சி சாம்பிராணி புகையை போட்டு இந்த கிறுக்கி மனச மாத்தாட்டி என் பேரு மந்தரையில்ல!
எல்லோரோடவும் சேர்ந்துகிட்டு இவ ராமனை தலையில தூக்கிவச்சிகிட்டு கூத்தாடுறத உடனடியா நிறுத்தணும்! என்னமோ இவளே வயித்துல சுமந்து பெத்த பிள்ளை மாதிரி பாசம் பொங்கி வழியுது இவளுக்கு! இவ மட்டும் பிள்ளை பெறாத மலடியாவா இருந்துட்டா? இவ வயித்துல உதித்த முத்து அருமையா, அம்சமா, கம்பீரமான ராஜகுமாரனா வளந்து நிக்குறது இவ கண்ணுக்கு எப்படி தெரியாம போச்சி? இவ புத்தியை மறைக்கிற அஞ்ஞானத்தை முதல்ல உடைச்செறியணும்! மூணு ராணியில மூத்தவ என்ன, இளையவ என்ன? மூணு பெரும் சமமா இருக்கும் போது உரிமைக்கு குரல் குடுக்காம பெத்த மகனுக்கு துரோகம் செய்வாளா இந்த பாதகத்தி? நாளைக்கு யார் யார் எப்படி மாறுவாங்கன்னு எப்படி தெரியும்? ராஜமாதாவா கௌரவமா காலம் பூரா நிம்மதியா இருக்க வேண்டியவ இப்படி முட்டாளா இருக்காளே! சரி, பின்னே நான் எதுக்கு இங்க அவளுக்கு நிழலா இருக்கேன்? என் கடமையை செய்ய வேண்டிய அவசர கட்டமிது! ராஜாவோட ப்ரேமைக்கு உரிய ராணியா இருக்கிறவ, சாரதியா சேவை செஞ்சதோட விரலை கூசாமல் சக்கரத்தில் கொடுத்து புருஷனை காப்பாற்றி ஜெயிக்கவச்சவ- அந்த நன்றிக்கு கிடச்ச ரெண்டு வரமும் அப்படியே இருக்கு! அதுதான் இப்போ இவளுடைய துருப்பு சீட்டு! அருமை மகன் ராமனுக்கு பட்டம் சூட்டபோறேன்னு சந்தோஷமா அந்த கிழட்டு ராஜா இங்க வரும் போது இவ தலைவிரிகோலமா, ஆங்காரமா, கண்ணீர் சிந்திய கோலத்தில நின்றா அலஙாரவல்லியை இந்த கோலத்தில் பார்க்க மன்னன் அதிர்ச்சியில ஆடிப்போவான்; அதே சூட்டோட வரம் ரெண்டையும் இப்ப குடுய்யான்னு ஒத்தை கால்ல நின்னான்னா மனுஷன் வாயை தொறக்க முடியுமா? பதினாறு வருஷம் மர உரி தரிச்சி வனவாசம் செய்ய அனுப்பு உன் செல்ல மகனை, அரியணையில் ஏற்று என் கண்மணியைன்னு அருவாள போட்டான்னா அவன் அம்பேல்தான்!

கண்ணே கைகேயி, உன் தங்கமான மனசு யாருக்கு வரும்? பெறாத பிள்ளைக்கு நல்லது நடக்க இப்படி துடிக்கிறாயே? நீ 10 மாசம் சுமந்து பெத்த பிள்ளையை உனக்கு நினைவிருக்கிறதா?

அடியே, கைகேயி! நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளு! நீ இப்போ எடுக்கப்போற முடிவு உன் எதிர்காலத்தையே தீர்மானிக்கப்போகுது! ராஜமாதாவா கம்பீரமா உலா வரப்போறியா, இல்லை அரண்மணை மூலையில கௌசல்யாவும் சீதையும் என்ன சொல்வாங்களோன்னு பயத்துல முடங்கிப்போய் கிடக்கப்போறியா? ராமன் அரசாளும் போது அவன் அம்மாவும் அவன் பெண்டாட்டியும் தான் அதிகாரம் செய்வாங்க. கண்மூடித்தனமா ராமன் மேல பாசம் வச்சி அழிஞ்சி போகாதே! உன் மகன் பரதனும் தசரதனுக்கு பிறந்தவந்தானே? ராஜ்ஜியத்தை ஆள முழு உரிமை உள்ளவந்தானே? அவன் அரசனானால் எல்லோரும் உனக்கு கை கட்டி நிற்பார்கள். ராமன் அரசனானால் நீதான் அத்தனை பேருக்கும் கூஜா தூக்க வேண்டும்! நீ யார்? உன் பெருமை என்ன? உன் அரச வம்ச வீர தீரத்தை மறந்து கௌசல்யாவின் எடுபிடியாக தாழவேண்டுமா? யோசி! நீ எப்பேர்பட்ட புத்திசாலி! வரப்போகும் நாட்களில், வருடங்களில் நீ அடையப்போகும் சரிவை எண்ணிப்பார்! தலை நிமிர்ந்து ராஜாவின் அபிமான அரசியாய் சகல மரியாதையுடன் இருக்கும் நீ பெருமை இழக்கலாமா? யோசி! பெண்ணே யோசி!

நான் சொல்றது உனக்கு இப்போ புரியுதா? அடுத்து நீ என்ன செய்யணும்னு சொல்றேன் கேள்! இது சாமான்யமான வேலை இல்லை, அதன் விளைவுகளும் சாமான்யமாய் இருக்காது! ஆனா நெஞ்சிலே உரம் உள்ள நீ துணிச்சலாய் நின்று வெல்ல வேண்டிய விஷயம் இது! தசரதனை நீ உன் மகனுக்கு முடி சூட்டச் சொல்! அதிர்ச்சி அடைவான், மறுப்பான், சமாளிப்பான். உறுதியாய் நில்! அன்று கொடுத்த ரெண்டு வரத்தை இன்று கொடுங்கள் என்று அதிர்ச்சியை கொடு! இடுக்கியில் மாட்டிகொண்டு மீறமுடியாம முழிப்பான்! ரெண்டு வரம் என்ன என்று சொல்கிறேன், கவனமாக கேள்! பரதனுக்கு முடி சூட்ட வேண்டும், ராமன் மர உரி தரித்து 16 வருஷம் வன வாசம் செய்ய வேண்டும்! இந்த பிரமாண்டமான சாதனை புரிய நீ அதற்கு தகுந்த மாதிரி மோட்-இல் மன்னன் வரும்போது காட்சியளிக்க வேண்டும். எப்படி என்று சொல்கிறேன் கேள்! வழக்கம் போல் அலங்கார பதுமையாய், உல்லாச பாவையாய் நிற்கிறாயே, அதை முதலில் மாற்று. கூந்தலை அவிழ்த்துவிடு! ஆபரணங்களை களைந்துவிடு. கோபத்தில், துக்கத்தில் குமுறு! காரியம் சாதிக்காமல் ஓயாதே! மகளே, உன் நலனை மட்டுமே நாடும் இந்த கூனியின் சொல்படி நடந்தால் நீ நாளும் நலமாய் வாழ்வாய். உன் சுபிட்சம் ஒன்றே என் மூச்சு!

ம்ம்ம்! இந்த மனுஷன் இப்படி மரண மூர்ச்சையடைவாரோ! ஆனா நான் எடுத்த காரியம் ஜெயம்தான்! மர உரியோட ராமன் காட்டுக்கு கிளம்பி போயாச்சி! இந்த சீடையும் தேனிலவு போற மாதிரி ஜால்ல்யா மர உரி மாட்டிக்கிட்டு புருஷனை ஈஷிக்கிட்டு போயிட்டா! விவஸ்தையில்லாம ஊர்மிளாவை அம்போன்னு விட்டுட்டு இந்த லக்ஷ்மணன் எதுக்கு ஒட்டிக்கிட்டு போறான? அயோத்தி நகரம் அழுது முடிக்கமுன்னால இந்த பரதனும் வந்து இப்படியா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்? பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு அண்ணனை தேடி காட்டுக்கு போய் அழைச்சதுக்கு நல்ல வேளை அவன் தேனிலவு ஜோர்-ல 'வரமாட்டேன் போ'ன்னு சொல்லிட்டான். இந்த கிறுக்கனும் அவன் செருப்பை கழட்டி தலை மேல வச்சி சுமந்துகிட்டு வந்து சிம்மாசனத்துல வச்சி அழகு பாக்குறான்! என்ன பிள்ளையோ!

லக்ஷ்மணன்: அண்ணே, சூப்பர் ஃபிகருண்ணே! நாம இதுவரை பாத்திராத சைசுண்ணே! வலிய வருது வாளை மீனு! விளையாடிப் பாப்போமா?

சீதா: யாரிந்த ராட்சசி? அவ முழியே சரியில்ல!
லக்ஷ்மணன்:(அச்சசோ! குளக்கரைக்கு குளிக்கப் போன மதினி அதுக்குள்ள எப்படி வந்தாங்க! )
சூர்பனகை: செவத்த குட்டி ஷோக்காதான் கீது!
சீதா:சே! சே! யாருடி நீ? தனியா இருக்க ஆம்பளங்ககிட்ட வம்பு பண்ண வந்தியா?
சூர்பனகை: சும்மா கூவாதம்மா! இந்த பஞ்சவடி என்னுது! இங்க வந்து கொட்டாய் போட்டு குந்திகினு இன்னா தெனாவட்டா பேசுறம்மே?
சிதா: (ராம லக்ஷ்மணனிடம்)இவளை அடித்து துரத்தாமல் ஏன் ரெண்டு பேரும் வேடிக்கை பாக்குறீங்க?
சூர்பனகை: ரெண்டு ஆம்பளையோட நீ தனியா மல்லுகட்டுறியே, நான் ஒத்தாசை செய்றேனேடி?
சீதா:சிவ சிவா! லக்ஷ்மணா, இதுதான் நீ எங்கள பாத்துக்கிற லட்சணமா? இவளை உடனே கண்ட துண்டமா வெட்டிப்போடு!
(லக்ஷ்மணன் மதினியின் ஆணையை உடனடியாக நிறைவேற்றும் விதமாக முதலில் சூர்பனகையின் துருத்திய மூக்கை வெட்டிவிடிகிறான்)
சூர்பனகை (பின்வாங்கிக்கொண்டே): என் கைல ராங் வச்சிகிட்ட உன்ன சும்மா உடமாட்டேன்டி! நான் யாருன்னு நினைச்சே? அண்ணாத்த ராவணன்கிட்ட சொல்லி உனக்கு சங்கு ஊதுறேன்னா இல்லையா பாரு! நீ நாஸ்தியாகப்போற சீக்கிரமே!( ஆங்காரமாய் அழுதுகொண்டே ஓடி மறைகிறாள்!)
* * * * *
ராவணன்: ஏய் தங்காய்! உன் வடிவான மூக்கிற்கு என்னவாயிற்று? ஏன் இப்படி சுரத்தில்லாமல் இருக்கிறாய்?
சூர்பனகை: போண்ணா! நீ சுத்த தண்டம்!
ராவணன்: ஏன்? ஏன்? ஏன் அப்படி சொல்கிறாய் பிள்ளாய்?
சூர்பனகை:பேருதான் பெத்த பேரு! பெரிய சூப்பர்பவருன்னு! வீணையை டொய்ங்க் டொய்ங்க்ன்னு இழுத்து சிவனை மயக்கி என்ன ப்ரயோஜனம்?
ராவணன்: நிறுத்து உன் உளறலை! சுத்தி வளைக்காமல் நேராக விஷயத்துக்கு வா!
சூர்பனகை: ஐஸ்வர்யா ராய் போல ஒரு பெண் இருக்காளா உன் பெரிய அந்தபுரத்துல? பெரிய பராக்கிரமசாலிக்கு ஒரு பைங்கிளி கிடைச்சுதா?
ராவணன்: எங்கே இருக்கிறாள் நீ சொல்லும் அந்த அதிரூப சுந்தரி? சொல்! இப்பொழுதே போகிறேன்!
சூர்பனகை: என் பஞ்சவ்டியிலே! (பத்திகிச்சி! )பஞ்சவடியில்-

சீதா: மனதிற்குள் (சே! என்ன வாழ்க்கை இது! இந்த அத்துவான காட்டுக்குள்ள வந்து ஆசையா புருஷனோட அந்தரங்கமா பேச முடியுதா? எப்போ பாத்தாலும் கூடவே ஒட்டிகிட்டு இருக்கிற கொழுந்தனை எப்படி எங்க தொரத்துறது? ஆங்! அதோ ஒரு புள்ளி மான் நிக்குது!) (லக்ஷ்மணனிடம்) ஐய்யோ! எவ்வளவு அழகான மான்குட்டி! அதை எனக்கு பிடித்துத் தாயேன்!

ராமா: இதோ நான் போய் பிடித்து வருகிறேன்! (கிளம்பியும் விடுகிறான்)

சீதா: (மசௌக்குள்- பாவி மனுஷா! செத்த நேரம் இந்த அட்டையை உதறிவிட்டு இருக்கலாம் என்று நினைச்சா கூறு கெட்ட புருஷன் இப்படி குடுகுடுன்னு ஓடுவாரா! )

அப்போது சாகும் மாரீசனின் ஈனக்குரல் கேட்கிறது.

சீதா: லக்ஷ்மணா! ஓடு! உன் அண்ணனுக்கு ஆபத்து! ம்ம்ம்..சீக்கிரம்!

லக்ஷ்மணன்: உங்களை தனியே விட்டுவிட்டு நான் எப்படி போவேன்! ஐயகோ! என் செய்வேன்! சரி, அண்ணி, இதோ என் அம்பில் ஒரு கோட்டை கீறிவிட்டு போகிறேன், எக்காரணம் கொண்டும் அதை தாண்டிவிடாதீர்கள், அதன் உள்ளே இருக்கும் வரை உங்களை ஒரு தீங்கும் அண்டாது!

சீதா: உடனே போ என்கிறேன், வள வள என்று பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கிறாயே!

(லக்ஷ்மணன் நகர்ந்ததும் ஒரு சாமியார் வேடத்தில் ராவணன் வருகிறான், கோட்டை தாண்ட விடாமல் நெருப்பு எழும்புகிறது. ஜக்கிரதையாய் கோட்டின் வெளியே நின்று கொண்டு சீதாவை அழைக்கிறான், வெளியே வந்தவளை பார்த்து பிரமித்துப்போகிறான்,"சூர்பனகை மிகச்சரியாக சொல்லியிருக்கிறாள்!" தந்திரமாய் கோட்டுக்கு வெளியே சீதாவை வரவைக்கிறான், காமுகனின் கபடம் புரிந்ததும் சீதா அலறுகிறாள், விருப்பமில்லா பெண்ணை தொட்டால் தலை வெடித்துவிடும் என்று சபிக்கபட்ட ராவணன் சீதையை அவள் நிற்கும் நிலத்தோடு பெயர்த்து எடுத்து அவன் புஷ்பக விமானத்தில் பறக்கிறான். துரத்தி வந்த தசரத விசுவாசியான ஜடாயு கழுகை கத்தியால் வெட்டுகிறான்.)

ராம:ஐய்யோ, மாயமானை நம்பி மோசம் போனோமே! சீதாவை காணோம்! என் கண்மணிக்கு என்ன ஆயிற்றோ!

லக்ஷ்மன்:அண்ணா, இதோ நம் தந்தையின் நண்பர் ஜடாயு குற்றுயிரும், குலையுயிருமாய் கிடக்கிறார்!

ஜடாயு:குழந்தைகளே! சீதையை ஒரு கயவன் கவர்ந்து தென் திசை நோக்கி பறக்கிறான்! என்னால் அவளை காப்பாற்ற முடியவில்லையே!

ஜடாயுவின் உயிர் பிரிகிறது!

காடே அதிர கத்துகிறான் ராமன்:வைதேகீஈஈஈஈஈஈஈஈஈஈஈ!


வாலி வதத்தை வில்லங்கமான முறையில முடிச்சி அனுமனை அசோகவனம் அனுப்பி வாலாசன தூதனின் வானரப்படை உதவியுடன் கடலில் பாலம் கட்டி இலங்கையை அடைந்து கட்சி மாறிய விபீஷணனின் உதவியுடன் ராமன் போரிட்டு விசுவாசமான கும்பகர்ணனை கொன்று, செத்த தம்பி லக்ஷ்மணனை அனுமன் பெயர்தெடுத்துக் கொண்டு வந்த சஞ்சீவி மலை உதவியால் உயிர்ப்பித்து ஜெயராமனாய் சீதையுடன் அயோத்தி சென்று முடிசூட்டினான் ராமன்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community